பாலசாத்திரி ஜம்பேகர்

பாலசாத்திரி ஜம்பேகர் (Balshastri Jambhekar) (6 சனவரி 1812 - 18 மே 1846) இவர், இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியின் ஆரம்ப நாட்களில் 'தர்பன்' என்ற முதல் செய்தித்தாளைத் மராத்திமொழியில் தொடங்குவதற்கான முயற்சிகளுக்காக மராத்தி பத்திரிகையின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

பாலசாத்திரி ஜம்பேகர்
பிறப்பு(1812-01-06)6 சனவரி 1812
மகாராட்டிர மாநிலத்தின் கொங்கண் மண்டலத்திலுள்ள தேவ்காட் வட்டத்திலுள்ள (சிந்துதுர்கா) போம்பூர்லே என்ற கிராமம்
இறப்பு18 மே 1846(1846-05-18) (அகவை 34)

பிறப்பு தொகு

இவர், (1812-1846) மகாராட்டிர மாநிலத்தின் கொங்கண் மண்டலத்திலுள்ள தேவ்காட் வட்டத்திலுள்ள (சிந்துதுர்க்) போம்பூர்லே என்ற கிராமத்தில் 1812 இல் பிறந்தார். குழந்தை பருவத்திலிருந்தே திறமையான மற்றும் புத்திசாலித்தனமான ஜம்பேகர் வயதுவந்தோர் குறித்து பல பாடங்களில் சிறந்த அறிஞராகவும் ஆராய்ச்சியாளராகவும் ஆனார். இவர் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே சுறுசுறுப்பாக இருந்தார். ஆனால் இவரது விதிவிலக்கான பணிகள் இந்தியாவில் ஒரு நிரந்தர அடையாளத்தை ஏற்படுத்தி வைத்தன. பின்னர் இவர் பனேசுவரில் இறந்தார்.

தர்பன் தொகு

இவர், இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியின் போது எதிர்வரும் காலங்களில் அச்சு ஊடகங்களின் முக்கியத்துவத்தையும் சக்தியையும் சரியாக புரிந்து கொண்டார். ஆங்கிலேயர்கள் தூக்கியெறியப்பட வேண்டும், சுதந்திரம் அடையப்பட வேண்டும் என்றால், மக்களை தட்டி எழுப்ப வேண்டியது அவசியம் என்பதும், அந்த முடிவுக்கு அச்சு ஊடகங்கள் மிகவும் பயனுள்ள கருவியாக இருக்கும் என இவர் உறுதியாக இருந்தார்.

இந்த தேசபக்தி மற்றும் சமூக விழிப்புணர்விலிருந்து தர்பன் செய்தித்தாள் பிறந்தது. தர்பனை முதல் மராத்திய செய்தித்தாளாக நிறுவினார். இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியின் போது இந்த செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தார். இது மராத்தி பத்திரிகையின் தொடக்கமாக மாறியது. அப்போது இவருக்கு 20 வயதுதான் ஆகியிருந்தது. இந்த கட்டத்தில் இவரது கூட்டாளிகளில் கோவிந்த் குண்டே மற்றும் பாவ் மகாஜன் போன்றவர்கள் அடங்குவர்.

தர்பனின் முதல் இதழ் 6 சனவரி 1832 இல் வெளியிடப்பட்டது. செய்தித்தாள் ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளில் அச்சிடப்பட்டது. மராத்தி என்பது பொது மக்களுக்கும் ஆங்கிலம் ஆளும் ஆங்கிலேயர்களுக்கும் பொருந்தும். இதன் விலை 1 ரூபாய். செய்தித்தாள் அந்த காலத்தில் இந்தியாவில் ஒரு புதிய யோசனையாக இருந்தது. எனவே ஆரம்பத்தில் மிகக் குறைவான சந்தாதாரர்கள் இருந்தனர். ஆனால் மெதுவாக மக்கள் அதைப் பாராட்டினர் . அதில் வெளிப்படுத்தப்பட்ட எண்ணங்களுடன் உடன்பட்டனர். பின்னர், வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இது எட்டரை ஆண்டுகள் வெளியிடப்பட்டது. கடைசி இதழ் சூலை 1840 இல் வெளியிடப்பட்டது.

தர்பனின் சமூக தாக்கம் தொகு

இவர் தனது செய்தித்தாளில் விதவை மறு திருமணம் தொடர்பான பிரச்சினைகளை குறிப்பாகக் கையாண்டார். படிக்காத இந்தியாவின் வெகுஜனங்களில் விஞ்ஞான மனநிலையை வளர்க்க இவர் முயன்றார். இது சமுதாயத்தில் ஒரு பெரிய அளவிலான விவாதத்திற்கு வழிவகுத்தது, இறுதியாக விதவை மறு திருமணத்திற்கு ஆதரவளிப்பதற்கான ஒரு இயக்கம் உருவானது.

அறிவானது சமுதாயத்தில் பரவ வேண்டும் என்று இவர் விரும்பினார், இதற்காக தனது பத்திரிக்கையை ஒரு வழியாகக் கொண்டார். விஞ்ஞான அறிவைப் பயன்படுத்துவதன் மூலமும், சமூகப் பிரச்சினைகளை நோக்கிய ஒரு பகுத்தறிவு கண்ணோட்டத்தாலும் மட்டுமே நாடு முன்னேற முடியும் என்பதை இவர் அறிந்திருந்தார். விஞ்ஞான கண்ணோட்டத்தைக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கவும் இவர் விரும்பினார். பொது மக்களிடையே பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான நனவை உருவாக்குவதில் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு, படிக்காதவர்களுக்கு கல்வி கற்பிக்க முயன்ற சமூக ஆர்வலர்களில் இவரும் ஒருவர். இவரது ஒருபோதும் இறக்காத திறமையும் முயற்சியும் மகாராட்டிர பொதுமக்கள் மீது மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஒரு புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியாகவும் பத்திரிகையாளராகவும் ஒரு முத்திரையை வைத்திருந்தது.

பிற பங்களிப்புகள் தொகு

இவர், பொது நூலகங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டார். இதற்காக 'மும்பையின் பூர்வீக பொது நூலகத்தை' நிறுவினார். இவர் 'பூர்வீக வளர்ச்சி அமைப்பை'யும் தொடங்கினார். அதில் 'மாணவர் இலக்கிய மற்றும் அறிவியல் சமூகம்' ஒரு கிளையும் ஏற்படுத்தப்பட்டது. அறிவுசார் நிறுவனர்களான தாதாபாய் நவ்ரோஜி, பாவ் தாஜி லாட் ஆகியோர் இந்த நிறுவனங்கள் மூலம் உத்வேகம் பெற்றனர்.

1840 ஆம் ஆண்டில் இவர் முதல் மராத்தி மாத இதழான திக்தர்சன் (திசை என்று பொருள்) என்பதை வெளியிட்டார். இவர் 5 ஆண்டுகள் இந்த பத்திரிகையைத் வெளியிட்டார். இதில் இயற்பியல், வேதியியல், புவியியல், வரலாறு போன்ற பல்வேறு பாடங்களில் கட்டுரைகளை வெளியிட்டார்.

இவர் மராத்தி, சமசுகிருதம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவராவார். தவிர, கிரேக்கம், லத்தீன், பிரஞ்சு, குஜராத்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் இவருக்கு நல்ல பிடிப்பு இருந்தது. ஆசியச் சங்கத்தின் காலாண்டு இதழில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட முதல் இந்தியர் இவராவார். 1845 இல் ஞானேசுவரியை அச்சிட்ட முதல் நபராவார். இது முதன்முதலில் அச்சிடப்பட்ட பதிப்பாக அறியப்பட்டது.

இவர், மும்பையின் எல்பின்சுடன் கல்லூரியில் இந்தி முதல் பேராசிரியராகவும் அறியப்பட்டார். இவர் கொலாபா ஆய்வகத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். நீதிக்கதைகள், இங்கிலாந்தின் என்சைக்ளோபீடிக் வரலாறு, ஆங்கில இலக்கணம், இந்திய வரலாறு மற்றும் பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட கணிதம் போன்ற புத்தகங்களை எழுதினார்.

1830 முதல் 1846 வரையிலான ஆண்டுகளில் இவர் தீவிரமாக செயல்பட்டு மகாராட்டிரா மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பணியாற்றினார். இவருக்கு வெறும் 34 ஆண்டுகள் மிகக் குறுகிய ஆயுட்காலமே இருந்தது. ஆனால் அந்த ஆண்டுகளிலும் இவர் மக்களைப் பயிற்றுவிக்கவும் விஞ்ஞான மனநிலையை வளர்க்கவும் முயன்றார். இவர் 1832 முதல் 1846 வரையிலான காலகட்டத்தில் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும், ஒரு பத்திரிகையாளராகவும் இருந்தார் என்பது இவரது ஆளுமையின் முத்திரையாகும்.

அங்கீகாரம் தொகு

முதல் மராத்தி மாதாந்திர வடிவத்தில் வெளிவந்த முதல் மராத்தி செய்தித்தாளுக்காக, இவர் 'மராத்தி பத்திரிகையின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார். இவரது பிறந்த நாள் தற்செயலாக தர்பனின் முதல் இதழ் வெளியிடப்பட்ட நாளான சனவரி 6 ஆகும். இது இவரது நினைவாக மகாராட்டிராவில் பத்திரிகையாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலசாத்திரி_ஜம்பேகர்&oldid=3022811" இலிருந்து மீள்விக்கப்பட்டது