பாலின வில்லை முதலீடு
பாலின வில்லை முதலீடு (Gender lens investing) பணப் பெருக்கத்துடன் பெண்களை முன்னிறுத்தியும் செய்யப்படும் முதலீட்டு முறையாகும்.[1] சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பொருளியல் வாய்ப்புகளை உருவாக்குவதும் அவர்களது சமூகநிலை முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதும் இத்தகைய முதலீடுகளின் குவியமாக அமையும்.[2] இச்சொல்லாக்கம் 2009இல் உருவானது.[3] 2010களின் மைய ஆண்டுகளில் இத்தகைய செயற்பாடு ஆண்டுக்காண்டு பரவலானது.[1][4][5]
பாலின வில்லை முதலீட்டில் மகளிருக்கு உரிமையான வணிக நிறுவனங்களும் பெண்களைப் பெரும்பாலும் பணிக்கமர்த்தும் வணிக நிறுவனங்களும் தங்கள் பொருட்களாலும் சேவைகளாலும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வணிக நிறுவனங்களும் அடங்கும். இச்செயற்பாடு குறித்து ஐக்கிய அமெரிக்க அறக்கட்டளையின் சாரா காப்லானும் சாக்கி வான்டர்பர்கும் "உலகெங்கும் பெண்கள் துவங்கும் அல்லது விரிவுபடுத்தும் வணிக முயற்சிகளின் ஒட்டுமொத்த முதலீட்டுத் துண்டு (அவர்களுக்குத் தேவையான முதலீட்டிற்கும் கிடைக்க வாய்ப்புள்ள முதலீட்டிற்குமான இடைவெளி) $320 பில்லியன்; இது முதலீடு செய்பவர்களுக்கு மிகப் பெரும் வாய்ப்பு" என குறிப்பிட்டுள்ளனர்.[6]
வரலாறு
தொகு2005இல் பிரான்சிய நிதி மேலாண்மை நிறுவனமான கான்செய்ல் ப்ளுசு கெஸ்தியோன் பெண்கள் உரிமையாளர்களாக உள்ள அல்லது பெண்கள் தலைமை ஏற்கும் வணிகங்களில் முதலீடு செய்யும் நோக்கோடு உருவாக்கிய வெலாய்ர் பெமினீன் (Valeurs Feminines) என்ற வைப்புநிதியே முதன்முதலாக இத்தகைய முன்னெடுப்பிற்கான காட்டாக உள்ளது.[7] பிற்பாடு இத்தகைய முன்னெடுப்பை தங்களது சில நிதி வைப்புகளில் செயல்படுத்திய நிறுவனங்களில் மோர்கன் இசுடான்லி,மெர்ரில் லிஞ்ச், கோல்ட்மேன் சாக்ஸ், ஐக்கிய அமெரிக்க அறக்கட்டளை, ரூட் கேப்பிடல், வெரிசு வெல்த் பார்ட்னர்சு போன்றவையும் அடங்கும்.[1][4][7][8][9][10] நவம்பர் 2013இல் கிரைட்டீரியன் நிறுவனத்தைச் சேர்ந்த ஜாய் ஆன்டர்சன் பாலின வில்லை முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கு ஒன்றை ஹார்ட்பர்ட்டில் ஒருங்கிணைத்தார்.[10]
2017இல் ஆத்திரேலிய தேசிய வங்கி AUD$500 மில்லியன் மதிப்புள்ள பாலினச் சமநிலை கடன் பத்திரங்களை வெளியிட்டது. ஆத்திரேலிய அரசின் பணியிட பாலினச் சமநிலை முகமையிடம் சான்றிதழ் பெற்ற வணிக நிறுவனங்களில் முதலீடு செய்ய இந்தக் கடன் பத்திரங்கள் பயன்படுத்தப்படும்.[11]
மேல்வருவாய்
தொகுசமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நோக்காக கொண்டு செய்யப்படும் மற்ற முதலீடுகளைப் போலவே பாலின வில்லை முதலீட்டிற்கும் பெருமளவில் அன்னிய நேரடி முதலீடு பெறுவது கடினமாகவே உள்ளது. இதனால் தொகுமுதலீடுகள் பெரும்பாலும் பல சிறிய அளவிலான முயற்சிகளையே முன்னெடுக்கின்றன. மேலும் இத்தகைய முதலீட்டு முன்னெடுப்பில் பாலின சார்பற்ற முன்னெடுப்பை விடக் குறைந்த வருமானத்தையே எதிர்பார்க்கும்படி முதலீட்டாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.[1]
பாலின வில்லை முதலீட்டின் ஆதரவாளர்கள் சராசரியை விடக் கூடுதலான பெண்கள் அதிகாரிகளாக பணியாற்றும் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறுகின்றனர். இது கூடுதலான பரந்துபட்ட கண்ணோட்டங்களாலோ அல்லது பெண்கள் மீது முன்சார்பு இல்லாமையால் சிறந்த திறனுள்ளோரை பணியமர்த்த முடிவதாலோ நிகழ்கிறது.[7][12] 2015இல் பிசினசு இன்சைடர் என்ற இதழ் "பாலின வில்லை முதலீடு நிரூபிக்கப்பட்ட ஓர் செயல்பாடு. $6.6 டிரில்லியன் மதிப்புள்ள சமூக பொறுப்புள்ள முதலீட்டு உலகில் மிகச் சிறிதளவிலே உள்ள பெண்களைக் குவியப்படுத்திய பாலின வில்லை முதலீட்டு முன்னெடுப்புகள் ஆண்டுக்காண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன" எனக் கூறியுள்ளது.[13] தி கார்டியன் இதழின் படி , நுண்கடன் திட்டங்களில் கடனைத் திருப்புவதில் ஆண்களை விடப் பெண்களே கூடுதாக இருக்கின்றனர்.[14]
ஐக்கிய இராச்சியத்தின் நிதி அமைச்சகம் நடத்திய ஆய்வொன்றில் பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவளிப்பது மூலம் ஐக்கிய இராச்சியத்தின் மொத்த வருமானத்தைக் கூடுதலாக $250 பில்லியன் அளவிற்கு உயர்த்த இயலும் எனக் கண்டறிந்தனர்.[15] பெண்கள் தலைமையேற்கும் நிறுவனங்கள் £1 பில்லியனுக்கும் குறைவான விற்பனையளவையேக் கொண்டுள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டது. எனவே இத்தகைய தொழில் முனைவோருக்கு நிதியாதரவு அளிப்பது இந்த இடைவெளியைக் குறைக்கும்.
தி வாசிங்டன் போஸ்ட்டின் ஜோன் வீய்னர் இத்தகைய முன்னெடுப்புகள் சராசரியை விடக் கூடுதலான வருமானம் தரும் என்பதை ஐயத்துடன் காண்கிறார்: "மற்ற எல்லாவற்றையும் போலவே, 'பாலின வில்லை' முன்னெடுப்பும் சில நேரங்களில் சிறப்பாகவும் சில நேரங்களில் தொய்வாகவும் பலன் தரும்... உங்களுக்கு மனநிறைவளிக்கும் எனில் பாலின வில்லை முதலீட்டில் பங்கெடுங்கள். ஆனால் மிகுந்த வருமானம் தரும் என்று நம்பிக்கை வைக்காதீர்கள்."[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Sullivan, Paul (August 14, 2015). "With an Eye to Impact, Investing Through a 'Gender Lens'". The New York Times. பார்க்கப்பட்ட நாள் May 17, 2016.
- ↑ "Gender Lens Investing Initiative | The GIIN". thegiin.org. பார்க்கப்பட்ட நாள் 2019-01-10.
- ↑ Moodie, Alison (17 November 2015). "Investments aren't gender-neutral when female entrepreneurs face a $320bn credit gap". The Guardian. பார்க்கப்பட்ட நாள் May 17, 2016.
- ↑ 4.0 4.1 "Voices: Patricia Farrar-Rivas, on Gender-Lens Investing". The Wall Street Journal. The Wall Street Journal. May 14, 2015. பார்க்கப்பட்ட நாள் May 17, 2016.
- ↑ Kane, Libby (August 14, 2014). "Here's How to Give Back and Make Money". Business Insider. Business Insider. பார்க்கப்பட்ட நாள் May 17, 2016.
- ↑ Kaplan, Sarah (Fall 2014). "The Rise of Gender Capitalism". Stanford Social Innovation Review. Stanford Social Innovation Review. பார்க்கப்பட்ட நாள் May 17, 2016.
- ↑ 7.0 7.1 7.2 "Women-focused funds make money, create controversy". The Chicago Tribune. The Chicago Tribune. September 11, 2015. பார்க்கப்பட்ட நாள் May 17, 2016.
- ↑ Nelson, Jacqueline (March 20, 2013). "'Parity portfolio' places investment bets on women". The Globe and Mail. The Globe and Mail. பார்க்கப்பட்ட நாள் May 17, 2016.
- ↑ Moodie, Alison (November 17, 2015). "Investments aren't gender-neutral when female entrepreneurs face a $320bn credit gap". The Guardian. பார்க்கப்பட்ட நாள் May 17, 2016.
- ↑ 10.0 10.1 Bank, David (October 24, 2013). "Women Are Hot...Investments". HuffPost Business. Huffington Post. பார்க்கப்பட்ட நாள் May 18, 2016.
- ↑ "National Australia Bank sells rare A$500 million gender equality bond" (in en). Reuters. 2017-03-17. https://www.reuters.com/article/nab-bond-ethical-idUSL3N1GT26D.
- ↑ 12.0 12.1 Weiner, Joann (May 7, 2014). "Can investors get rich by looking at their investments through a 'gender lens?'". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் May 17, 2016.
- ↑ "Money making women-focused funds raises eyebrows". Business Insider. Business Insider. September 12, 2015. பார்க்கப்பட்ட நாள் May 17, 2016.
- ↑ Ford, Alanna (March 20, 2014). "Celebrate Women's History Month by mobilising your resources". The Guardian. பார்க்கப்பட்ட நாள் May 17, 2016.
- ↑ Gibbs, Alexandra (2019-03-08). "Supporting female entrepreneurs could add $326 billion to the UK economy, review finds". CNBC (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-06.