பிசுமார்க் நீலக்கல் அட்டிகை

நீலக்கல் பதித்த ஆபரணம்

பிசுமார்க் நீலக்கல் அட்டிகை (Bismarck Sapphire Necklace), 1935 இல் கார்ட்டியர் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட நீலக்கல் பதிக்கப்பட்ட ஒரு அட்டிகை ஆகும்.[1] 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த அட்டிகை ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி. இல் உள்ள சிமித்சோனியன் நிறுவனத்தின் இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள நிலவியல், இரத்தினக்கல், கனிமங்கள் ஆகியவற்றுக்கான ஜனட் அனன்பேர்க் ஊக்கர் மண்டபத்தில், ஹால் நீலக்கல் வைர அட்டிகைக்கும் லோகன் நீலக்கல்லுக்கும் இடையில் இது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அட்டிகைக்கு கோமகள் மோனா வொன் பிசுமார்க்கின் பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. இவரே 1967 இல் இந்த அட்டிகையை சிமித்சோனிய நிறுவனத்துக்கு நன்கொடையாக அளித்தவர். 1926 இல் அரிசன் வில்லியத்துடனான தேன்நிலவுப் பயணத்தின்போது, கோமகள் இதில் பதிக்கப்பட்டிருக்கும் நீலக்கல்லை இலங்கையில் வாங்கினார்.

சிமித்சோனிய நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ள பிசுமார்க் நீலக்கல் அட்டிகை.

இந்த அட்டிகை இரட்டை வைரக்கற்களால் இணைக்கப்பட்ட பிளாட்டினத்தாலான ஒற்றைச் சங்கிலியையும் பதக்கத்தையும் கொண்டது. 98.6 கரட் (19.72 கி) நீலக்கல், பதக்கத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பதக்கத்தில் நீலக்கல்லைச் சுற்றி வைரங்களும், எட்டுச் சிறிய நீலக்கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Daswani, Kavita. "Gia Sparkling At 75, Sets Multifaceted Agenda.(Gemological Institute of America)." WWD. Conde Nast Publications, Inc. 2006.
  2. Bismarck Sapphire at the Smithsonian[தொடர்பிழந்த இணைப்பு]