பினாமி பரிவர்த்தனைகள் (தடுப்பு) திருத்தத் சட்டம், 2016
பினாமி பரிவர்த்தனைகள் (தடுப்பு) திருத்தத் சட்டம், 2016 (Benami Transactions (Prohibition) Amended Act, 2016), ஏற்கனவே 1988ல் இருந்து நடைமுறையில் உள்ள பினாமி சொத்துகள் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 1988ல் உள்ள குறைகளை நீக்க, இந்திய அரசால் திருத்தங்கள் செய்யப்பட்டு, 1 நவம்பர் 2016 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.[1][2] பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறையிடம் இரகசியமாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு பினாமி சொத்து மதிப்பில் பத்து விழுக்காடு பரிசு வழங்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.[3]
வரலாறு
தொகு1988 சட்டம் வருவதற்கு முன்னர் பினாமியாக வேறு ஒருவர் பெயரில் சொத்தை வாங்கி வைத்துக் கொள்ள முடியும்; பின்னர் அந்தச் சொத்து தனக்குத்தான் சொந்தம் என்று திரும்ப பெற முடியும்; பினாமி பெயரில் இருந்தவர் என் சொத்து என்று கேட்க முடியாது; இதனால் பலர் சொத்துகளை தங்கள் பெயரில் வாங்காமல், வேறு ஒருவர் பெயரில் (பினாமி) வாங்கினார்கள்.
பினாமி சொத்துகள் பரிவர்த்தனை சட்டம், 1988
தொகு1988ம் ஆண்டு பினாமி சொத்துகள் பரிவர்த்தனை சட்டத்தில், யாரும் பினாமியாக வேறு ஒருவர் பெயரில் சொத்து வாங்கி வைத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு மீறி பினாமிகளின் பெயரில் வாங்கிய சொத்துக்களை, தனக்கே உரிமை என்று நீதிமன்றத்தில் முறையிட முடியாது. மேலும் பினாமி சொத்துக்களை கண்டறியும் பட்சத்தில், அச்சொத்தை அரசே எடுத்துக் கொள்ளும். பினாமியாக சொத்து வைத்திருந்தால் 3 ஆண்டு சிறை என இருப்பினும், கட்டுமானத் துறையில் புழங்கும் கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
பினாமி சொத்துகள் பரிவர்த்தனை (தடுப்பு) திருத்தச் சட்டம், 2016
தொகு1988 பினாமி சொத்துகள் பரிவர்த்தனை சட்டத்தில் மொத்தமே 9 பிரிவுகள் மட்டுமே இருந்தது. பினாமி சொத்துகள் பரிவர்த்தனை (தடுப்பு) திருத்தச் சட்டம், 2016ல் 71 பிரிவுகள் உள்ளன. புதிய திருத்தத் சட்டத்தின் படி, ஒருவர் தன் மனைவி, 18 வயது நிரம்பாத மகன்கள், திருமணமாகாத மகள்கள் பெயரில், சொத்துக்களை பினாமியாக வாங்கலாம். இருப்பினும் அந்தச் சொத்தை வாங்கியவர், பிற்காலத்தில் அச்சொத்துகளைத் தனக்குத்தான் சொந்தம் என்றும், தான்தான் பினாமியாக தனது மனைவி, மக்கள் பெயரில் வாங்கினேன் என்று சட்டபூர்வாக வாதட இயலாது.
2016 திருத்தத் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
தொகு- பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 3 ஆண்டுகளாக இருந்த சிறை தண்டனை, 7 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
- சிறை தண்டனை மட்டுமின்றி பினாமி சொத்தின் சந்தை மதிப்பில் 25% தண்டத் தொகையாக வசூலிக்கப்படும்.
- பினாமி சொத்துகளை இழப்பீடு எதுவும் அளிக்காமல் பறிமுதல் செய்யவும் இந்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான சொத்துகளுக்கு, பினாமி சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- பினாமி சொத்துகளை விசாரனை செய்யும் நீதிமன்றங்கள் மற்றும் அலுவலர்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
- கறுப்பு பண நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், குறிப்பாக கட்டுமானாத் துறையில் புழங்கும் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர இத்திருத்தத் சட்டம் வழி வகை செய்கிறது.