பிபின் கனத்ரா
பிபின் கனத்ரா (Bipin Ganatra 1957) இந்தியாவின் மேற்குவங்கத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த மின் பணியாளர் ஆவார். இவர் தொழில் முறை தீ அணைப்பு வீரர் இல்லை என்றாலும் தீ விபத்துகள் ஏற்படும் இடங்களில் தாமாகச் சென்று தீ அணைப்புப் பணிகளில் ஈடுபடும் தொண்டர். இந்தச் சேவையைப் பாராட்டி 2017 இல் இவர் பத்ம சிறி விருது பெற்றார். [1]
மிக எளிய நிலையில் உள்ள இவர் குசராத்து மாநிலத்தில் பிறந்தவர். 1982 இல் இவருடைய அண்ணன் தீ விபத்தில் சிக்கி மாண்டு போனார். அந்தத் துயர நிகழ்ச்சி பிபின் கனத்ராவை நெகிழ வைத்தது. அதன் காரணாமாக 40 ஆண்டுகளுக்கும் மேல் தன்னார்வத்துடன் இந்தத் தீ அணைக்கும் பணிகளுக்கு உதவியாக இருந்து வருகிறார். நெருப்பை அணைப்பதிலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலும் உதவி செய்து வருகிறார். நூற்றுக்கும் மேலான தீ விபத்துகளில் உதவி செய்துள்ளார்.
கனத்ரா தீ அணைக்கும் தொழிலில் முறையான பயிற்சி பெற்றவர் இல்லை. இருப்பினும் தொழில் முறை தீ அணைப்பு வீரரைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுபவராக ஆனார். ஒரு உயரமான கட்டட த்தில் ஐந்தாம் தளத்தில் தீ விபத்தில் சிக்கி இருந்து தவித்த கரு உற்ற பெண்ணைக் காப்பாற்றினார். எரிந்து கொண்டிருந்த கிட்டங்கியில் இரண்டு காற்று உருளைகளை மீட்டு எடுத்து வந்தார். இத்தகைய தீ விபத்துகளில் உதவி செய்து உடலில் காயங்கள் பல முறை அடைந்தார்.
சமூகச் சேவை அங்கீகாரம்
தொகுதொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்த்தும் கேட்டும் தீ நேர்ந்த இடங்களைப் பற்றி தீ அணைக்கும் துறைக்குத் தெரிவித்தும், உடனே பொது ஊர்தியில் பயணம் செய்து தீ விபத்து நிகழிடத்திற்குச் சென்றடைவார். இவருடைய செயல்களைக் கண்டு ஊக்குவிக்கும் படி தீ அணைக்கும் துறையினர் இவருக்கு அடையாள அட்டை, காக்கி உடை போன்றவற்றை வழங்கினர்.
இந்திய நடுவணரசு இவரது சமூகச் சேவையைப் பாராட்டிப் பத்ம சிறி விருது இவருக்கு வழங்கியது. [2]