பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம்
அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில், தல்லாகுளம், இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் தல்லாகுளம் ஊரில் அமைந்துள்ளது. மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் அவர்களால் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.[1] சித்திரைத் திருவிழாவின்போது அழகர் கோவிலிலிருந்து வரும் அழகர் தல்லாகுளம் பெருமாள் கோவிலிலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்படுகிறார்.
பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில், தல்லாகுளம் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மதுரை |
அமைவு: | தல்லாகுளம் |
ஆள்கூறுகள்: | 9°56′03.0″N 78°08′09.4″E / 9.934167°N 78.135944°E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரசன்ன வெங்கடாசலபதி |
தாயார்: | பூதேவி, ஸ்ரீதேவி |
தீர்த்தம்: | கிணறு நீர் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி, சித்திரை (பவுர்ணமித்) திருவிழா, புரட்டாசித் திருவிழா (பிரம்மோற்சவம்), தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல். |
உற்சவர்: | ஸ்ரீநிவாசர் |
அமைவிடம்
தொகுமதுரை மாநகரில் இதற்கு முன்பு மாதுளை மரங்கள் நிறைந்த தல்லாகுளம் பகுதியில் இது அமைந்துள்ளது. இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 9.934169°N78.135950°E.
அருகிலுள்ள நகர, ஊர்கள்
தொகுமதுரை, கோரிப்பாளையம், செல்லூர், மாட்டுத்தாவணி, கே. கே. நகர், அண்ணா நகர், சிம்மக்கல், நெல்பேட்டை, செனாய் நகர், நரிமேடு, சின்னசொக்கிகுளம், பி. பி. குளம்.
தெற்கு நோக்கிய பெருமாள்
தொகுவைணவத் திருத்தலங்களில், பெரும்பாலும் மூலவர் (பெருமாள்) கிழக்கு நோக்கியே அருள் பாலித்து வீற்றிருப்பார். ஆனால், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில், மூலவர் ஸ்ரீநிவாசர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.[2] மேலும், இக்கோயிலில் வீற்றிருக்கும் தாய்மார்கள் பூதேவி மற்றும் ஸ்ரீதேவி. அகோர ஆஞ்சநேயர் மற்றும் அவருக்கு எதிரில் சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கும் இக்கோயிலின் தீர்த்தம் கிணற்று நீர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கோயில் வரலாறு
தொகுதிருப்பதி வெங்கடாசலபதியின் தீவிர பக்தரான மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர், தன் ஆட்சிக் காலத்தில், திருப்பதி கோயிலில் தினமும் காலை பூஜை முடிந்த பிறகு காலை உணவு உட்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். காலையில் திருப்பதியின் பூஜை நேரத்தை அறியும் பொருட்டு, திருப்பதியிலிருந்து மதுரை வரையில் 'மணிகட்டி மண்டபங்கள்' அமைத்து, திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயிலில் பூஜை ஆரம்பித்த உடன் அங்குள்ள முதல் மணிகட்டி மண்டபத்தில் ஆரம்பித்து, மதுரை வரை வரிசையாக மணிகள் ஒலிக்கும். இறுதியில் மதுரையில் மணி ஒலித்த பிறகே காலை உணவு உண்பார். ஒருநாள் மணி ஒலி வராது போகவே, மணிகட்டி மண்டபம் நோக்கி அவர் வர, ஓர் இடத்தில் சுயம்புவாக ஆஞ்சநேயர் சிலை ஒன்று தென்பட, அவ்விடத்திலேயே வெங்கடாசலபதியும் அவருக்கு பிரசன்னம் (தோற்றம்) கொடுத்து அருள்புரியவே, அவ்விடத்திலேயே 'பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில்' கட்டி, பூஜைகள் செய்து கொண்டாட ஆரம்பித்தார். அதுவே, இப்போது உள்ள தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் ஆகும்.
கோயில் திருவிழாக்கள்
தொகுஇத்திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசி, சித்திரை (பவுர்ணமி)த் திருவிழா, புரட்டாசித் திருவிழா[3] (பிரமோத்சவம்), தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் ஆகியவை முக்கியத் திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.
கோயில் நேரங்கள்
தொகுஇக்கோயிலின் நுழைவாயில் நடை, அதிகாலை ஐந்து மணிக்குத் திறக்கப்பட்டு முற்பகல் பதினொன்றரை மணி வரை திறந்திருக்கும். பின் மாலை நான்கரை மணிக்குத் திறக்கப்பட்டு, இரவு எட்டரை மணிக்கு மூடப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Temple details>Tamilnadu Temple>பிரசன்ன வெங்கடாசலபதி". Dinamalar. https://temple.dinamalar.com/New.php?id=700.
- ↑ "தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்!". Hindustan Times Tamil. https://tamil.hindustantimes.com/astrology/highlights-of-tallakulam-arulmigu-prasanna-venkatachalapathi-temple-131657174376600.html.
- ↑ "தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி திருவிழா கொடியேற்றம்". Dinamalar. https://m.dinamalar.com/temple_detail.php?id=72380.