பிரதேச சபை (இலங்கை)

பிரதேச சபை (Divisional Council) என்பது இலங்கையின் உள்ளூராட்சி அமைப்புகளில் ஒன்று. இவை 1978ல் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் இதன் உறுப்புரிமையானது கிராமோதய சபைத் தலைவர்கள் மற்றும் பதவி வழிகாரணமாக உதவி அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் (உதாரணமாக கிராம சேவையாளர் போன்றோர்) இடம்பெறுவர்.

இச்சபையின் தலைவராக பதவி வழியற்ற யாராலும் ஒருவர் (சபை தெரிவு செய்பவர்) இடம்பெறுவார். இச்சபையின் செயலாளராகப் பதவி வழிகாரணமாக உதவி அரசாங்க அதிபர் இடம்பெறுவார்.

1987ம் ஆண்டின் 15ம் இலக்க சட்டமூலம்

தொகு

1987ம் ஆண்டின் 15ம் இலக்கப் பிரதேச சபைகள் சட்டமூலம் பிரதேசசபையின் அமைப்பு, தெரிவு, நோக்கங்கள், அதிகாரங்கள் செயற்பாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தின.

பிரதேச சபையின் நோக்கம்

உள்ளூராட்சி மட்டத்தில் நிர்வாக மாற்றம், அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக முடிவுகளை எடுத்தல், நடைமுறையில் பயனுறும் வகையில் மக்கள் பங்குபற்றுவதற்கு வாய்ப்புக்களை வழங்கல்

மேற்படி சட்டத்தின்படி

பிரதேசசபைப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் மக்களால் தெரிவுசெய்யப்படுவர். இதன்படி முதலாவது பிரதேச சபைகளுக்கான தேர்தல் 1991 மே 1ம் திகதி நடைபெற்றது.

இலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களிலும் 257 பிரதேச சபைகள் ஏற்படுத்தப்பட்டன. (இவற்றுள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள 8 மாவட்டங்களிலும் 63 பிரதேச சபைகள் உண்டு. இந்த 8 மாவட்டங்களிலும் தேர்தல் 1991 இலும் 1997இலும் நடைபெறவில்லை) மேற்படி தேர்தல் மூலம் 194 பிரதேச சபைகளுக்கான அங்கத்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எல்லை

தொகு

உதவி அரசாங்க அதிபர் பிரிவில் (தற்போதைய பிரதேச செயலகப்பிரிவில்) காணப்படும் மாநகரசபை, நகரசபை எல்லைகள் தவிர்ந்த ஏனைய நிலப்பரப்பு, பிரதேச சபைகளின் நிலப்பரப்பாகும்.

உறுப்பினர்கள் எண்ணிக்கை

தொகு

பிரதேசசபையின் உறுப்பினர் எண்ணிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபை அமைச்சரினால் வர்த்தமானியில் வெளியிடப்படும். விடேச கட்டளையொன்றினால் தீர்மானிக்கப்படும்.

தெரிவு

தொகு

உறுப்பினர்கள் பிரதேசசபை வாக்காளர்களினால் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தெரிவுசெய்யப்படுவர். சபையில் அதிக ஆசனங்களைப் பெறும் கட்சி அல்லது குழு ஆட்சி அதிகாரத்தைப் பெறும் அதிகாரத்திற்கு வரும் கட்சி அல்லது குழுவிலிருந்து தவிசாளர் துணைத் தவிசாளர் தெரிவுசெய்யப்படுவர்.

பதவிக்காலம்

தொகு

தேர்தல் முடிந்து பதவியேற்ற நாளிலிருந்து 4 வருடங்களாகும். இக்காலகட்டத்தினைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ அமைச்சருக்கு அதிகாரமுண்டு. (1995ம் ஆண்டில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தல் 1997ல் நடைபெற்றதைக் கொண்டு இதனை உறுதிப்படுத்தலாம்.)

தவிசாளரும், துணைத் தவிசாளரும்

தொகு
  • தவிசாளர் சபையின் நிறைவேற்று அலுவலராவார்.
  • சட்டத்தின் மூலம் அல்லது வேறு ஏதேனும் எழுத்திலான சட்டத்தின் மூலம் ஒரு பிரதேச சபையினரால் செய்யப்பட்ட வேண்டிய நிறைவேற்றப்பட வேண்டியவையெனப் பணிக்கப்பட்ட செயல்கள், பொறுப்புக்களுக்கு தவிசாளருக்கு இருக்கும் அதிகாரத்தைச் கொண்டு செய்யலாம்.
  • தவிசாளரின் அதிகாரங்கள், கடமைகள், பொறுப்புக்கள் என்பவற்றை எழுத்திலான கட்டளைகள் மூலம் துணைத் தவிசாளருக்கு வழங்கலாம்.

பிரதேசசபைக் குழுக்கள்

தொகு

பின்வரும் நோக்கங்களுக்காகப் பிரதேசசபைக் குழுக்கள் அமைக்கப்படலாம்.

  • நிதி கொள்கைகள் உருவாக்கம்.
  • வீடமைப்பு சமூகசேவை உருவாக்கம்
  • தொழில்நுட்ப சேவைகள் வழங்கல்
  • சுற்றாடலும் வாழ்க்கை வசதிகளும்

பிரதேச சபைகளின் அதிகாரங்கள்

தொகு
  • தனக்குப் பொருத்தமான பதவிகளை உருவாக்கல்
  • பிரதேச சபையின் சேவையிலுள்ள ஏதேனுமொரு பதவிக்கு அல்லது உத்தியோகத்திற்கான நியமனங்களைச் செய்தல்,. சேவையை விட்டும் அகற்றுதல்
  • பிரதேச சபையிலிருந்து இளைப்பாறுபவர்களின் ஓய்வுதியத்தை வழங்குதல்
  • தனது சேவைகளைச் செய்ய வேறு பிரதேச சபைகளுடன் அல்லது உள்ளூராட்சி அமைப்புக்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளல்.
  • சபையின் இடப்பரப்பிலுள்ள அசையும் அசையா ஆசனங்களையும், சொத்துக்களையும் உரித்தாக்கல் (அமைச்சரின் அனுமதியுடன்)
  • காணி, கட்டிடங்கள் என்பவற்றைக் கொள்வனவு செய்தல், குத்தகைக்கு விடுதல்
  • படகுச் சேவைகளை தாபித்தல்
  • வேலைவாய்ப்புத் திட்டங்களை ஒழுங்குபடுத்தல்
  • பிரதேசப் பாடசாலைகளைத் திருத்தல், மூடுதல், பெயர்சூடல், தரம் உயர்த்துதல்
  • தனது நிதியத்தில் ஒரு பாகத்தை மகளிர் சிறுவர் நலனோம்பும் சேவைகளுக்கு ஒதுக்குதல் (உதாரணமாக சுகாதார வசதிகள்)
  • நிதியத்தின் ஒரு பகுதியைக் கிராம அபிவிருத்திக்கு ஒதுக்குதல்
  • சமய, கலாசார இலக்கிய விழாக்களை ஒழுங்கு செய்தலும், பரிசில்களை வழங்குதலும்
  • மகளிர் அபிவிருத்தி
  • ஏழை நிவாரணம்

இது போன்ற 24 திட்டங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம்

தொகு
  • 1987ம் ஆண்டின் 15ம் இலக்க நாடாளுமன்ற சட்டமூலம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதேச_சபை_(இலங்கை)&oldid=3480700" இலிருந்து மீள்விக்கப்பட்டது