பிரேசில் நாட்டில் சமய நம்பிக்கை

பிரேசில் நாட்டில் சமய நம்பிக்கை (Religion in Brazil) என்பது அந்த நாட்டு மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்ற மதங்கள் மற்றும் அவற்றின் கொள்கைகள் பற்றிய விவரிப்பு ஆகும்[1].

பல மதங்கள்

தொகு

பிரேசில் நாட்டில் மிகப் பல மதங்கள் உள்ளன. அவற்றுள் மிகப் பரவலாக உள்ளது கிறித்தவம் ஆகும். போர்த்துகீசியர்கள் பிரேசில் நாட்டைத் தங்கள் குடியேற்ற நாடாக ஆக்கிக் கொண்ட காலத்திலிருந்து அங்கு கத்தோலிக்க கிறித்தவ மதம் பரவியது. நாட்டில் ஏற்கெனவே இருந்த முதல் குடிமக்களின் நம்பிக்கைகளோடு, ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட மக்களின் பூர்வீக சமய நம்பிக்கைகளும் கிறித்தவ நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்து பிரேசில் நாட்டில் பல கலப்பு சமயங்கள் தோன்றின.

 
காட்சியளித்த அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இவ் பசிலிக்கா, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலுக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் உள்ள மிகப் பெரிய கோவில் ஆகும்.[2][3]

அண்மைக் காலம் வரை பிரேசில் நாட்டில் கத்தோலிக்க கிறித்தவ சமயமே பெரும்பான்மையாக இருந்தது. ஆனால் 21ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட விரைவான மாற்றங்களைத் தொடர்ந்து அந்நாட்டில் சமயமின்மை வளர்வதோடு, நற்செய்தி புரோட்டஸ்தாந்தியமும் 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

2010ஆம் ஆண்டு மக்கள் தொகையில் சமயங்களின் நிலை

தொகு

2010ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, பிரேசிலில் 65 விழுக்காடு மக்கள் மட்டுமே தங்களை கத்தோலிக்க கிறித்தவர் என்று அடையாளம் காட்டுகின்றனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் (1970) பிரேசிலின் மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் கத்தோலிக்கராய் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில் விரைவிலேயே கத்தோலிக்க நாடு என்னும் நிலையை இழந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது என்று பலர் கூறுகின்றனர்.[4]

2010ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் படி பிரேசிலில் சமயங்களும் அவற்றைக் கடைப்பிடிப்போரும் கீழ்வருமாறு: மொத்த மக்கள் தொகை: 189.6 மில்லியன். அவர்களுள்:

  • கத்தோலிக்கர்: (123.000.000 பேர்) - 64.6%
  • புரோட்டஸ்தாந்து: (42.300.000 பேர்) - 22.2%
  • சமயம் சேராதோர்: (15.000.000 பேர்) - 8%
  • பிற சிறுபான்மை சமயத்தினர்: (9.300.000 பேர்) - 5.2%

சிறுபான்மை சமயத்தினரில் கீழ்வருவோர் அடங்குவர்:

  • இயற்கை வழிபாட்டினர்
  • உம்பாண்டா குழுவினர்
  • கண்டோம்ப்ளே குழுவினர்
  • ஜெகோவாவின் சாட்சிகள்
  • மார்மோன் குழுவினர்
  • பவுத்தர்
  • யூதர்
  • இசுலாமியர்

பிரேசிலில் கத்தோலிக்க கிறித்தவம்

தொகு

உலகிலேயே மிகப்பெரும்பான்மையான எண்ணிக்கைக் கத்தோலிக்கர் பிரேசில் நாட்டிலேயே உள்ளனர். கத்தோலிக்கம் பிரேசிலில் முதன்முதலாக அறிமுகமானது போர்த்துகீசிய குடியேற்றக்காரர்களால் ஆகும். அவர்கள் அனைவரும் கத்தோலிக்கர். மறைபரப்பாளர்களாக பிரேசில் முதன்முதல் வந்தவர்கள் இயேசு சபையினர் ஆவர்.

 
திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் பிரேசிலின் பெருநகராகிய சான் பவுலோவில் பாதுகாப்பு ஊர்தியில் செல்கிறார். ஆண்டு: 2007
 
பிரேசிலில் தெற்கு ரியோ கிராந்தே நகரில் உள்ள கத்தோலிக்க கோவில்

போர்த்துகீசயரின் குடியேற்ற காலத்தில் பிரேசிலில் சமய சுதந்திரம் இருக்கவில்லை. அனைவருமே கத்தோலிக்க கிறித்தவ சமயத்தைத் தழுவ வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் பிரேசில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒவ்வொருவரும் தாம் விரும்பிய சமயத்தைக் கடைப்பிடிக்கலாம் என்று 1824இல் சட்டம் இயற்றப்பட்டது. ஆயினும், கத்தோலிக்க சமயம் அதிகாரப்பூர்வ சமயமாகத் தொடர்ந்தது. கத்தோலிக்க சமயக் குருக்களுக்கு அரசு ஊதியம் வழங்கியது. ஆயர்கள் நியமனத்தில் அரசுக்கு செல்வாக்கு இருந்தது.

பிரேசில் 1891இல் குடியரசானது. அதிலிருந்து அரசும் சமயமும் பிரிந்தன. என்றாலும், 1970கள் வரையிலும் கத்தோலிக்க சமயத்தின் செல்வாக்கு ஓங்கியே இருந்தது.

பிரேசிலில் நிலவும் கத்தோலிக்க சமயத்தில் போர்த்துகீசிய தாக்கம் அதிகம் உண்டு. போர்த்துகல்லில் வழக்கத்தில் உள்ள பல சமய விழாக்களும் மரபுகளும் பிரேசிலிலும் உண்டு. அதோடு, பிரேசிலின் முதல்குடிகளின் சமய நம்பிக்கைகளும் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக பிரேசிலுக்கு வந்த மக்களின் சமய நம்பிக்கைகளும் பிரேசிலின் கத்தோலிக்கத்தில் தாக்கம் கொணர்ந்தன.

மக்களிடையே நிலவும் சமய மரபுகளில் பிரேசிலின் அப்பரெசீதா நகர் அன்னை மரியா திருத்தலத்திற்கு மக்கள் திருப்பயணமாகச் செல்வதைக் குறிப்பிடலாம். அந்த அமலோற்பவ அன்னை பிரேசில் நாட்டில் பாதுகாவலியாக வணங்கப்படுகிறார். ஐரோப்பாவிலிருந்து குடியேறியோரில் இத்தாலி, செருமனி ஆகிய நாட்டிலிருந்து வந்தோர் நடுவே அந்தந்த நாட்டுப் பழக்கங்கள் நிலவுகின்றன.

பிரேசிலில் புரோட்டஸ்தாந்தியம்

தொகு

புரோட்டஸ்தாந்து சபைகள் பிரேசிலுக்கு பெரும்பான்மையும் அமெரிக்க மறைபரப்பாளர் வழியாக 19ஆம் நூற்றாண்டில் வந்தன. 20ஆம் நூற்றாண்டில் நற்செய்தி புரோட்டஸ்தாந்தியம் விரைவாகப் பரவியது. இன்று பிரேசிலில் 20% மக்கள் பல்வேறு புரோட்டஸ்தாந்து சபைகளைச் சார்ந்துள்ளனர்.

 
பிரேசிலின் ரெசீஃபே நகரில் அமைந்த்துள்ள யூத தொழுகைக் கூடம். இது அமெரிக்காக்களிலேயே மிகப் பழமையானது.
 
பிரேசிலின் சான் பவுலோ நகரில் உள்ள யூத தொழுகைக் கூடம்
 
பிரேசிலின் போர்த்தோ அலேக்ரே நகரில் உள்ள யூத தொழுகைக் கூடம்

இயற்கை சமயம்

தொகு

பிரேசிலில் 4 மில்லியன் இயற்கை சமயத்தினர் உள்ளனர் (2010 கணக்குப்படி). மேலும், பிரேசிலின் பழங்குடி மக்களின் நம்பிக்கையும் தழைக்கிறது. இது குறிப்பாக அமெசோன் பள்ளத்தாக்கில் உள்ளது.

மேலும் ஆப்பிரிக்காவிலிருந்து பிரேசிலுக்குக் கப்பல்களில் அடிமைகளாக வந்தவர்கள் தங்கள் பூர்வீக நம்பிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் பாடல்கள், நடனம் வழியாக தங்கள் தெய்வங்களை வரவழைத்து வழிபடுகின்றனர். அந்த வழிபாடுகள் முறையற்றவை என்று கூறி அம்மக்களைத் துன்புறுத்திய வரலாறு பிரேசிலில் உண்டு.

பவுத்தம், இந்து சமயம்

தொகு

பிரேசிலில் பவுத்த சமயத்தைக் கடைப்பிடிப்போர் பெரும்பாலும் சப்பானிய வழிமுறையினர் ஆவர். அவ்வாறே இந்தியாவிலிருந்து குடியேறியோர் நடுவே இந்து சமயம் நிலவுகிறது.

பிரேசிலில் குடியேறிய இந்துக்கள் பெரும்பாலும் கிழக்கு இந்தியர் ஆவர். அங்கு சுமார் 1500 இந்திய வம்சாவழியினரும், 400 குடியேற்ற இந்தியரும் உள்ளனர்.

பிரேசிலின் மானாவுசு நகரில் 1960களில் சில சிந்தி மக்கள் சூரிநாம் மற்றும் மைய அமெரிக்காவிலிருந்து வந்து கடைகள் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் 1960களுலும் 1970களிலும் இந்தியப் பேராசியர்கள் பலர் பிரேசிலில் குடியேறினார்கள். அதுபோலவே பல ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து, குறிப்பாக முன்னாள் போர்த்துகீசிய குடியேற்ற நாடாகிய மொசாம்பிக்கில் இருந்து இந்தியர் பிரேசிலில் குடியேறினர். தற்போது அணுத்துறை வல்லுநர் மற்றும் கணினி வல்லுநர் அங்கு குடியேறியுள்ளனர்.

யூதம்

தொகு

1630இல் பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் ஒல்லாந்தர் குடியேறினர். அப்பகுதியில் ஒல்லாந்திலிருந்து வந்த யூதர்கள் பலர் குடியேறினர். அவர்களில் பெரும்பான்மையோர் போர்த்துகல் நாட்டிலிருந்து 1497இல் வெளியேற்றப்பட்ட யூதர்களின் வழிமுறையினர் ஆவர். 1636இல் யூதர்களின் தொழுகைக் கூடம் பிரேசிலின் ரெசீஃபே நகரில் கட்டப்பட்டது. இதுவே அமெரிக்காக்களில் முதன்முறையாகக் கட்டப்பட்ட யூத தொழுகைக் கூடம் ஆகும்.

நாசி காலத்திலும் இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்தும் பல யூதர் பிரேசிலில் குடியேறினர். அவர்களுள் நாசி குற்றவாளிகள் சிலரும் உண்டு. 2006ஆம் ஆண்டளவில் பிரேசிலில் சுமார் 96 ஆயிரம் யூதர் இருந்தனர்.

இசுலாம்

தொகு

2010 ஆம் ஆண்டுக் கணக்குப்படி, பிரேசிலில் 35,167 முசுலிம்கள் இருந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஆப்பிரிக்க அடிமைகளுள் இசுலாம் சமயத்தினரும் இருந்தனர். இன்று பிரேசிலில் சுமார் 300 ஆயிரம் வரை எண்ணிக்கையில் முசுலிம்கள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

ஆதாரங்கள்

தொகு
  1. பிரேசிலில் சமயங்கள் - ஆங்கில விக்கி கட்டுரை
  2. Facts of Basilica of Aparecida
  3. "Brazil". Berkley Center for Religion, Peace, and World Affairs. Archived from the original on 2014-07-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-12.
  4. Simon Romero, "A Laboratory for Revitalizing Catholicism," New York Times Feb 14, 2013