பில் வாட்டர்சன்

பில் வாட்டர்சன் (Bill Watterson; பி. ஜூலை 5, 1958) ஒரு அமெரிக்க கேலிப்பட ஓவியர். புகழ்பெற்ற கால்வினும் ஆபுசும் படக்கதையை உருவாக்கியவர். இவரது முழுப்பெயர் இரண்டாவது வில்லியம் பாய்ட் வாட்டர்சன்.

பில் வாட்டர்சன்
பிறப்புஇரண்டாவது வில்லியம் பாய்ட் வாட்டர்சன்.
சூலை 5, 1958 (1958-07-05) (அகவை 65)
வாஷிங்டன் டிசி, அமெரிக்கா
பணிகேலிப்பட ஓவியர்
அறியப்படுவதுகால்வினும் ஆபுசும்
(1985–1995)
வாழ்க்கைத்
துணை
மெலிசா ரிச்மண்ட் (அக்டோபர் 8, 1983 – தற்காலம்)

வாட்டர்சன் வாஷிங்டன் டிசி நகரில் பிறந்து ஒஹாயோ மாநிலத்திலுள்ள சாக்ரின் ஃபால்ஸ் என்ற நகரில் வளர்ந்தார். சிறுவயதிலேயே கேலிப்படங்களை வரையத் தொடங்கினார். அவரது பள்ளியின் இதழ்களிலும், ஆண்டுப்புத்தகத்திலும் அவை வெளியாயின். புகழ்பெற்ற பீநட்ஸ், போகோ, கிரேசி காட் போன்ற கேலிப்படங்களால் கவரப்பட்டு தொழில்முறை கேலிப்பட ஓவியராக முடிவுசெய்தார். கென்யன் கல்லூரியில் படித்து அரசறவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற வாட்டர்சன் 1980ல் சின்சினாட்டி போஸ்ட் என்னும் செய்தித்தாளில் அரசியல் கேலிப்படங்களை வரையும் ஓவியராக வேலைக்கு சேர்ந்தார். நான்காண்டுகளுக்குப் பிறகு கால்வினும் ஆபுசும் படக்கதையை உருவாக்கி பெருவெற்றி கண்டார். 1985 முதல் 1995 வரை பத்தாண்டுகள் வெளியான கால்வினும் ஆபுசும் கேலிப்படங்களின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில் மட்டுமின்றி பல நாடுகளில் பல மொழிகளில் வெளியானது. 1995ல் புகழின் உச்சியில் இருந்த போதே கால்வினும் ஆபுசும் கதையை நிறுத்திவிட்டார் வாட்டர்சன். கால்வினைக் கொண்டு தான் சொல்லவந்தவை அனைத்தையும் சொல்லி விட்டதாகவும் ஓவியக்கலையின் பிற பாணிகளில் படைப்புகளை உருவாக்க விரும்புவதால் இக்கதையை நிறுத்தியதாகவும் அவர் இதற்கு காரண்ம் சொல்லியுள்ளார். 1995க்கு பின்னர் இயற்கை நிலக்காட்சி ஓவியங்களை வரைந்து வரும் வாட்டர்சன், பொது வாழ்விலிருந்து விலகிக் கொண்டார். வாசகர்களை சந்திப்பதையும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வருகிறார். மிக அரிதாக இதழ்கள்களுக்கு பேட்டியளிக்கிறார்.

கால்வினும் அபுசும் கதைக்காக இருமுறை (1986 மற்றும் 1988) வாட்டர்சனுக்கு அமெரிக்காவின் தேசிய கேலிப்படக் கலைஞர்களின் கூட்டமைப்பு வழங்கும் சிறந்த கேலிப்படக் கலைஞர் விருது (ரூபன் விருது) கிடைத்தது. 1992ம் மூன்றாம் முறையாக இதே விருதுக்கு வாட்டர்சன் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் 1988ல் இதே அமைப்பு வழங்கும் சிறந்த நகைச்சுவை படக்கதைக்கான விருதும் ”கால்வினும் ஆபுசும்” கதைக்கு வழங்கப்பட்டது. இவை தவிர கேலிப்படங்களுக்கு வழங்கப்படும் பிற உயரிய விருதகளான ஹார்வே விருது, ஆடம்சன் விருது, ஸ்புரோயிங் விருது, மேக்ஸ் அண்ட் மோரிட்ஸ் விருது போன்றவையும் வாட்டர்சனுக்கு வழங்கப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_வாட்டர்சன்&oldid=2917211" இலிருந்து மீள்விக்கப்பட்டது