புனல்
வடிகுழலி அல்லது புனல் (funnel) என்பது ஒரு பக்கத்தில் விரிந்த வட்ட வடிவிலான வாயையும் மற்ற பக்கத்தில் ஒடுங்கிய குழாயையும் கொண்ட ஒரு கருவி ஆகும். இது நீர்மம் ஒன்றை அல்லது சிறிதாக நறுக்கப்பட்டவையை ஒடுங்கிய வாயுள்ள ஒரு கொள்கலனிலிடப் பயன்படுகிறது. புனல் இல்லாவிடில் இவை வெளியில் சிந்திவிடும். புனல்கள் பெரும்பாலும் துருப்பிடிக்காத உருக்கு, அலுமினியம், கண்ணாடி அல்லது நெகிழியால் உருவாக்கப்படுகின்றன. இதை உருவாக்கப் பயன்படுபவை திடமானதாகவும் தன்னூடாகச் செல்லும் பொருளுடன் எதிர்வினை புரியாததாகவும் இருக்கவேண்டும். இதனால் தான் வீட்டில் நெகிழியாலான புனல் பயன்படுகின்ற போதிலும் டீசலை ஊற்றும் போது கண்ணாடிப் புனல் அல்லது துருப்பிடிக்காத உருக்கினாலான புனல் பயன்படுகிறது.