புபேசு குப்தா

இந்திய அரசியல்வாதி

புபேசு குப்தா (Bhupesh Gupta, 20 அக்டோபர் 1904 – 6 ஆகத்து 1981) இந்திய அரசியல்வாதி இந்தியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். பேச்சாளராகவும் எழுத்தாளாராகவும் இதழாசிரியராகவும் விளங்கியவர்.

பிறப்பும் கல்வியும்

தொகு

தற்பொழுது வங்கத் தேயத்தில் அமைந்துள்ள மீமன்சிங் மாவட்டத்தில் உள்ள இத்னா என்னும் ஊரில் புபேசு குப்தா பிறந்தார். இசுகாட் சர்ச்சு கல்லூரியில் பயின்றார்[1]. மாணவராக இருக்கும்போதே இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டார். மேல் கல்வியின் பொருட்டு இங்கிலாந்துக்குச் சென்ற புபேசு குப்தா அங்கு பொதுவுடைமை மாணவர்களுடன் தோழமையுடன் செயல்பட்டார்.

சிறை வாழ்க்கை

தொகு

அனுசீலன் என்னும் புரட்சி அமைப்பில் இணைந்து செயலாற்றினார். இவருடைய முனைப்பான செயல்பாட்டின் காரணமாக 1930 இல் முதன் முதலாக கைது செய்யப் பட்டார். 1931 ஆம் ஆண்டில் இரண்டு முறை கைது செய்யப்பட்டு மீண்டும் 1933 இல் கைது ஆகி 1937 வரை சிறையில் இருந்தார்.

1948 இல் பொதுவுடைமைக் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அப்போது புபேசு குப்தா தலைமறைவானார் ஆனால் 1951 இல் கைது செய்யப்பட்டு ஏப்பிரல் 1952 வரை சிறையில் இருந்தார்

இதழாசிரியர்

தொகு

1954 முதல் 1957 வரை புது யுகம் (NEW AGE) இதழில் பதிப்பாசிரியராக இருந்தார். மீண்டும் இரண்டாம் முறையாக 1966 முதல் தம் இறுதி வரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார். சுவாதிநாட என்னும் கட்சியின் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்தார்.

பணிகள்

தொகு

சட்டப் படிப்பு முடித்து இங்கிலாந்திலிருந்து திரும்பிய புபேசு குப்தா இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தார். 1943 ஆம் ஆண்டில் வங்கத்தில் கடும் பசியும் பஞ்சமும் நிலவியது. அப்போது புபேசு குப்தா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். 1952 முதல் மாநிலங்களவையில் உறுப்பினராகி தம் வாழ்வின் இறுதிக் காலம் வரை அப்பதவியில் இருந்தார். மாநிலங்களவை 100 ஆவது கூட்டம் நிகழ்ந்தபோது புபேசு குப்தாவின் நீண்ட கால பாராளுமன்றச் சேவையைப் பாராட்டி இவருக்குச் சிறப்பு செய்யப்பட்டது. அரசியல், பொருளியல் தொடர்பான சிக்கல்களைப் பற்றிக் கட்டுரைகளைப் பல இதழ்களில் எழுதி வந்தார். பன்னாட்டு பொதுவுடைமை இயக்கக் கூட்டம் புச்சரெச்ட்டில் நடைபெற்ற போது அக்கூட்டதில் கலந்து கொண்டார். பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த பொதுவுடைமை மாநாடுகளில் கலந்து கொண்டார். 1959 ஆம் ஆண்டில் பீஜிங் சென்று சீன நாட்டுத் தலைவர் மா சே துங் கைச் சந்தித்தார்.

சான்றாவணம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume. Scottish Church College, April 2008. page 592
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபேசு_குப்தா&oldid=3380620" இலிருந்து மீள்விக்கப்பட்டது