புராகுமின்
புராகுமின் (Burakumin) ஜப்பானில் உள்ள தீண்டத்தகாத, தாழ்த்தப்பட்ட சமூகமாகும். இச்சமூகத்துடன் பிற ஜப்பானிய மக்கள் எவ்வகையிலும் தொடர்பு கொள்வதில்லை. குறிப்பாக திருமண உறவுகள் வைத்துக் கொள்வதில்லை. இந்த புராகுமின் சமூக மக்களின் பாரம்பரியத் தொழில், தோல் பதனிடுதல், ஆடு மாடுகளை வெட்டுதல், கசாப்பு கடை நடத்துதல், தோல் காலணி வணிகம் செய்தல், பொதுக் கழிப்பிடங்களை சுத்தம் செய்தல் ஆகும். புராகுமின் சமூக மக்கள் மற்ற ஜப்பானிய சமூக மக்களுடன் கலந்து வாழாமல் தனி குடியிருப்புகளில் கூட்டமாக வாழ்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பானில் தீண்டாமை சட்டப்படி ஒழிக்கப்பட்டாலும், ஜப்பானிய சமூகத்தில் மறைமுகமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
புராகுமின் சமூகத்தில் பிறந்தவரும், அச்சமூகத் தலைவரும், புராகுமின் விடுதலை லீக் (BLL) எனும் இயக்கத்தின் தலைவரும் ஆன ஜீச்ஹிரோ மதுமோட்டா (Jiichiro Matumoto 1887-1966) எனும் அரசியல் தலைவர் புராகுமின் சமூகத் தந்தை எனப் போற்றப்படுகிறார். [1]
ஜப்பானிய அரசர் மொய்ஜி காலத்தில் தீண்டாமை முறையை 1871-ல் ஜப்பானில் கடைபிடிப்பதை நீக்கி உத்தரவிட்டார். புராகுமின் சமூக மக்களும் மற்ற ஜப்பானிய சமூக மக்களுக்கு இணையாக சமூக உரிமை பெற்றவர்கள் என அறிவித்தார். இதனால் புராகுமின் சமூக மக்கள் காலப்போக்கில் சமூக, பொருளாதர ம், கல்வி மற்றும் தொழில் துறைகளில் முன்னேற்றம் கண்டனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் புராக்குமின் சமூகம் படிப்படியாக முன்னேற்றம் கண்டது. 1969-இல் ஜப்பானிய அரசு புராகுமின் சமூக முன்னேற்றத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது பத்து விழக்காடு புராகுமின் சமூக மக்கள் பிற ஜப்பானிய சமூகத்துடன் திருமண உறவுகள் வைத்துள்ளனர். ஜப்பானில் தீண்டாமை பற்றி பேசுவதும், கடைப்பிடிப்பதும் குற்றச்செயலாகும் என்று அரசு அறிவித்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Buraku Mondai in Japan: Historical and Modern Perspectives and Directions for the Future - Emily A. Su-lan Reber