பெருங்கற்காலம் (Megalith) என்பது பெரிய கற்களைக் கொண்டு அமைப்புக்களை மக்கள் உருவாக்கிய காலப் பகுதியைக் குறிக்கும். இத்தகைய அமைப்புக்கள் பெரும்பாலும் இறந்தவர்களுடைய புதைகுழிகளின் மேல் அமைக்கப்பட்டன. இவ்வாறான அமைப்புக்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு இனங்களைச் சார்ந்த மக்களால், பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டன. இவ்வாறான பெருங்கல் நினைவுச் சின்னங்களை அமைத்த காலம் புதிய கற்காலத்திலும், செப்புக் காலம், வெண்கலக்காலம் உள்ளிட்ட அதனைத் தொடர்ந்து வந்த காலப் பகுதிகளிலும் மக்கள் அமைத்தனர். இதனால் இக்காலத்தைப் பெருங்கற்படைக் காலம் எனலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.

பிரிட்டனியில் மேன் பிராசு என்னும் இடத்தில் உள்ள பெருங்கல் அமைப்பு ஒன்று
அயர்லாந்தில் உள்ள ஒரு பெருங்கல் அமைப்பு

இக் காலத்தைச் சேர்ந்த பெருங்கல் அமைப்புக்கள் கற்பதுக்கை (cist), கற்கிடை (dolmen), கற்குவை (cairn), பரல் உயர் பதுக்கை (cairn circle), தொப்பிக்கல் (hood stone), குடைக்கல் (umbrella stone), நெடுநிலை நடுகல் (menhir) எனப் பல வகைகளாக உள்ளன.

கிழக்குத் துருக்கி

மிகப் பழமையான பெருங்கற்காலப் பண்பாடு துருக்கியின் தென்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவை கிமு ஒன்பதாம் ஆயிரவாண்டைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவை இப்பகுதிகளில் தொடக்க வேளாண்மை, கால்நடை வளர்ப்புக் கால கட்டங்களைச் சேர்ட்ந்தவை. இங்கிருந்தே ஐரோப்பாவில் புதியகற்காலப் பண்பாடு வளர்ச்சியடைந்தது. இங்கு காணப்படும் பெருங்கல் அமைப்புக்களே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையானவை எனினும், ஐரோப்பியப் பெருங்கற் பண்பாடு இதிலிருந்தே வளர்ச்சியடைந்ததா என்பது தெளிவாகவில்லை.

தமிழ்நாட்டில் பெருங்கற்காலம்

தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு கிமு 1000 தொடக்கம் கிபி 200 வரையாகும் என மதிப்பிடப்படுகிறது. இது புதிய கற்காலத்துக்குப் பிற்பட்ட வளர்ச்சியாகும். இக்காலத்தில் தமிழ்நாட்டில் கல்லாயுதங்கள் பயன்படவில்லை. இக்கால மக்கள் இரும்பைப் பயன்படுத்த அறிந்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்கற்காலம்&oldid=3813869" இலிருந்து மீள்விக்கப்பட்டது