பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்)
பெருஞ்சித்திரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் 10 உள்ளன. அவை: புறநானூறு 158, 159, 160, 161, 162, 163, 207, 208, 237, 238. வறுமைக்கோலம் முதலானவற்றைச் சித்திரப் படமாக்கி நம் மனக்கண் முன் நிறுத்துவதில் இவர் சிறந்து விளங்கியதை இவரது பாடல்களால் உணரலாம். இதனால் இவரைப் பெருஞ்சித்திரனார் என்று போற்றினர்.
இவரால் பாடப்பட்டோர்
தொகுகுமணன்
தொகுபாரி, ஓரி, காரி, மலையன், எழினி, பேகன், ஆய் ஆகிய எழுவர் மாய்ந்த பின்றை நாடி வருவோருக்கு வேண்டியன நல்கும் வள்ளல் என்று குமணனைப் பாராட்டிப் பரிசு வேண்டுகிறார்.புறம் 158
என்னைப் வரவேற்காமல் பரிசுக் குவியலை யானைமேல் ஏற்றித் தந்தாலும் வாங்கமாட்டேன். என்னைப் பார்த்துக் குன்றிமணி அளவு பரிசு தந்தாலும் ஏற்றுக்கொள்வேன், என்கிறார் குமணனிடம்.புறம் 159
குமணன் முதிரமலையில் இருக்கிறான். அவனிடம் சென்றால் வறுமையைப் போக்கலாம் என்று பலரும் கூறக்கேட்டு வந்துள்ளேன். என் மனைவியும் மக்களும் பசி நீங்க உதவுக, என்று குமணனிடம் வேண்டுகிறார். புறம் 160
குமண! என்னை அளந்து பார்க்காதே. உன் தகுதியை அளந்து பார். அதற்கேற்பப் பரிசில் தருக. உன் கொடையைப் பார்த்து வேந்தர்களும் நாணும்படி நான் செல்லவேண்டும், என்கிறார். புறம் 161
குமணன் புலவர்க்கு யானையைப் பரிசாகத் தந்தான். (புறம் 162)
குமணன் யானைமீது ஏற்றிப் புலவர்க்குத் தந்த பரிசுப்பொருள்களைத் தன் மனைவியிடம் கொடுத்து, உன்னை விரும்பி வருபவர்களுக்கும், நீ விரும்புபவர்களுக்கும், உறவினர்களுக்கும், உனக்குக் கடன் தந்தவர்களுக்கும் தருக என்கிறார். இன்னார்க்கு என்னாது எல்லார்க்கும் கொடு என்கிறார். - இதனால் இவரது வள்ளண்மைப் பண்பு புலனாகிறது. (புறம் 163)
வெளிமான், அரசன்
தொகுபெருஞ்சித்திரனார் வெளிமான் வாயிலில் நின்றுகொண்டு "நீடு வாழ்க" என்று வாழ்த்திப் பாடினார். வெளிமான் அவருக்குக் கோடைக்காலத்தில் கொழுநிழல் போல உதவியவன். பொய்த்தல் அறியாதவன். அவன் செவியில் வித்திய பனுவல் அன்று விளையவில்லை. பானைக்குள்ளே அரிசியைப் போட்டுச் சமைக்கும்போது அது வெந்து அழல் கட்டிகளாக மாறி நமக்குத் தருவது போன்று அவர் நிலை ஆயிற்று. அவன் துஞ்சிவிட்டான். அவனைப் புதைத்த கள்ளிக்காட்டில் அவனது மகளிர் எருக்கிக்கொண்டதால் உடைந்த வளையல்கள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வாறு சொல்லிப் புலவர் இரங்குகிறார். (புறம் 237)
வெளிமான் கட்காமுறுநன் (கண்ணோட்டக் காமம் உள்ளவன்).
அவன் காடு முன்னினன். (இடுகாட்டை நினைத்துவிட்டான்)
அவனுக்காகச் செய்யப்பட்ட தாழியில் அவன் வைக்கப்படவில்லை.
தாழியின் மேல் அமர்ந்துகொண்டு பருந்துகளும் காக்கைகளும் அவனை உணவாக்கிக்கொண்டன.
பேய்க்கூட்டமும் அவனைச் சுற்றித் திரிகின்றன.
வளையல் கழிந்த அவன் மகளிர் போலப் பாடுநர் கூட்டமும் பசுமையற்றுக் கிடக்கின்றன.
அவன் முரசு கிழிந்துகிடக்கிறது.
அவன் யானை தன்னைச் செலுத்துவோன் இல்லாமையால் தன் தந்தத்தை இழந்திவிட்டன.
கூற்றத்துக்கே பைத்தியம் பிடித்துவிட்டது.
அந்தோ! அளியேன் வந்தேன். என்னோடு வாழ்பவர் என்னாவர்?
மழை பொழியும் மகிழ்ச்சியில் இருப்பவன் மேல் மரம் சாய்ந்தது போல் ஆயிற்று.
கண்ணில்லாத ஊமையனை வெள்ளம் அடித்துச் செல்லும்போது சுழியில் அகப்பட்டுகொண்டது போல் ஆயிற்று.
- வெளிமான் இறந்தது கண்டு இவர் துன்றுற்ற நிலையை சித்திரப் படமாக்கிக் காட்டுகிறார். (புறம் 238)
இளவெளிமான்
தொகுவெளிமான் மாண்டபின் அவன் தம்பி இளவெளிமானிடம் சென்று பரிசில் வேண்டினார். அவன் சிறிது கொடுத்தான். அதனைப் புலவர் பெறவில்லை. குமணனீடம் சென்று வேண்டினார். குமணன் யானையில் ஏற்றிப் பரிசுப்பொருள்களை நல்கினான். திரும்புகாலில் அந்த யானைகளை இளவெளிமானின் காவல்மரத்தில் கட்டிவைத்துவிட்டு இளவெளிமானிடம் சென்று, "இரவலர்க்குப் புரவலன் நீ அன்று. நீ இல்லாவிட்டால் புரவலர் வேறு இல்லாமலும் இல்லை. இதோ பார் புரவலன் தந்த பரிசில்" என்று யானையைக் காட்டிச் சொல்லிவிட்டுச் செல்கிறார். இது இவரது பெருமிதத்தைக் காட்டுகிறது. (புறம் 162)
"வாயா வன்கனி"(கிட்டாத காய்)க்கு ஏங்குபவர் இல்லை. நானும் உன் பரிசுக்காக ஏங்கவில்லை என்று இளவெளிமானிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார் இப் புலவர். (புறம் 207)
யானையைப் பிடிக்கச் சென்ற புலி அது கிடைக்கவில்லையென்றால் எலியை வேட்டையாடுவது இல்லை. உன் அண்ணன் வெளிமானிடம் பரிசில் பெற வந்தேன். அவர் இறந்துவிட்டார். அதற்காக உன்னிடம் பரிசில் வேண்டமாட்டேன், என்கிறார். (புறம் 237)
அதியமான் நெடுமான் அஞ்சி
தொகுஔவைக்கு நெல்லிக்கனி தந்து போற்றியவன் இந்த அதியமான். இவன் இந்தப் புலவர்க்குத் தானே நேரில் வந்து பரிசில் நல்காமல் படிசிலை அனுப்பிவைத்தான். "காணாது ஈந்த இப் பொருட்கு யான் ஓர் வாணிகப் பரிலன் அல்லேன்" என்று கூறி பெற மறுத்துவிட்டார். (புறம் 208)