பேச்சு:ஐப்பாடு
மொழிபெயர்ப்புகள் செய்துள்ளேன், சரிபார்க்கவும். தலைப்பை ஐப்பாடு என்று எழுதவேண்டும் இல்லையென்றால் aibot என்று படிக்க வேண்டும். பிற இந்திய மொழிகள் போல் இல்லாமல் தமிழ் ஒலிப்பாங்கு அற்றுப்போய் ஆங்கில மொழிபோல் ஆகிவிடும். ஐப்பாடு அல்லது ஐப்போடு என்று எழுதுவதால், தகர வல்லினம் ஆங்கிலத்தில் ஒலிப்பதுபோல ஒலிக்கும். ஒலிபெயருங்கள் (எழுத்துப்பெயர்ப்பு முறை தவறான வளர்ச்சி தரும்). அல்லது ஐ-பாடு என்று எழுத வேண்டும். ஒரு நிறுவனப்பெயர் என்றெல்லாம் மயங்கத்தேவை இல்லை. நம் மொழியில் வழங்கும் பொழுது நம் மொழி வழக்கப்படித்தான் வழங்குதல் வேண்டும். தமிழில் தலைப்பு எழுத்து சிறிய எழுத்து என்றும் வேறுபாடு கிடையாது. ஐபாடு என்று எழுதினாலும் தவறுதான். ஐப்பாடு என்று எழுதலாம். கடைசி எழுத்து டு என்று இருந்தால், குற்றியலுகரத்துடன் ஆங்கில எழுத்தாகிய D என்னும் ஒலிக்கு சற்று நெருக்கமான ஒலி தரும் (துல்லிய ஒலிப்பு இல்லை). --செல்வா 14:54, 13 ஏப்ரல் 2008 (UTC)
flash disk = அசையா நினைவகம் - பெயர் விளக்கம் தர இயலுமா? disk என்பதை எல்லா இடங்களிலும் வட்டு என்றே மொழிபெயர்க்கலாமே? அப்புறம், இசைகேளி, இசைக்கேளி - எது சரி? காட்டுவது காட்டி, ஓட்டுபவர் ஓட்டி என்பது போல் கேட்பது தானே கேளி என்று வர வேண்டும்? ஆனால், இங்கு இந்தக் கருவி கேட்பதில்லையே? இசைப்பி, ஒலிப்பி போன்றவை சரி வருமா?--ரவி 12:42, 14 ஏப்ரல் 2008 (UTC)
- Flash memory பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று மிகுந்த துடிப்பு உள்ளது. எளிதாகத் தமிழில் விளக்கலாம். இந்தக் கருவியில் அசையும் தட்டோ, வட்டோ இல்லை. கணினிக்குத்தேவையான 0, 1 ஆகிய இரண்டு பிட்டுகளை (பிள் --> பிட்--பிட்டு) டிரான்சிஸ்ட்டரில் (மின்புல விளைவுத் திரிதடையத்தில்) தன்னுள் தக்க வைத்துக்கொள்ளும் (நினைவு கொள்ளும்) இருவேறு கடத்துநிலைகளாக வைத்து உருவாக்கும் நினைவடுக்கு (நினைவகம்). எனவே அசையாநினைவகம். பழைய முறையில், காந்தத்தன்மையுறும் பொருட்களால் ஆன காந்தத்தட்டில் அல்லது காந்த வட்டில், 0, 1 ஆகிய இருவேறு குறிப்புகளும் காந்த முனையின் திசையைக் கொண்டு பதிவு செய்து, பின்னர் படிக்க உதவுமாறு உள்ள நினைவகத்தில், காந்த வட்டு சுழன்றுகொண்டு இருக்கும். 0, 1 ஆகிய குறிப்புகளைப் படிக்கும் நுண்ணிய ஊசி அந்த வட்டின் மீது தொடாமல் ஆனால் மிகமிக அருகாக இருந்து கொண்டு காந்தப்புலத்தின் முணைத்திசையை உணரும். இந்த ஊசி சுற்று வட்டின் புறத்தில் இருந்து மையம் நோக்கி நகர்ந்து சுழன்றுகொண்டிருக்கும் வட்டின் எல்லா வளையத்தில் உள்ள குறிப்புகளையும் படிக்க இயலும்.
இசைகேள் கருவி என்று இட்டிருந்தேன், நீங்கள் நீக்கிவிட்டீர்கள் :) இசைப்பி என்னும் சொல் நல்ல சொல். ஆளலாம். ஒலிப்பி என்பது speaker க்கான கலைச்சொல். கேட்க உதவும் கருவி கேள்வி ஆனால் அதன் பொருள் மிக ஆழமானது மட்டுமல்லாமல், ஏற்கனவே பரவலான பொருள்களில் உலா வருவது. (revealed wisdom, question, problem-what is probed) .காட்டு, ஓட்டு என்பன ஒருவகையான பிறவினைச் சொற்கள். ஓட்டு--> ஓட்டி, ஆனால், ஓடு-->ஓடி (முன்னோடி, ஓடுவது ஓடை, ஓடும் மரக்கலம் ஓடம்). காண், கேள் முதலான சொற்கள் அப்படி பரவலாக மாறுதல் அடைவதில்லை (காணி, கேளி முதலான சொற்கள் இருந்தபொழுதும்- சற்றே வேறான பொருள்களில் உள்ளன).பிறவினையாகச் சொல்வதென்றால், கேள் --> கேள்வி (கேட்கச் செய்யும் பிறவினை; படி, படிப்பி; கல் -->கற்பி என்பதுபோல்). கேட்கச்செய்வது என்பதைக்காட்டிலும், கேட்கப் பயன்படும் கருவி. நுட்பப்பொருள் வேறுபாடு உண்டு. வானம்பாடி என்பதுபோல இசைபாடி என்றும் சொல்லலாம். இசைவி என்றால் ஒப்புக்கொள்ளச் செய்யும் ஒன்று என்று பொருள்பட்டுவிடும். இப்போதைக்கு இசைப்பி என்பது யாவற்றினும் நல்ல சொல்லாகப் படுகின்றது.--செல்வா 14:56, 14 ஏப்ரல் 2008 (UTC)
+கருவி என்று வரும் சொற்கள் நீளமாகவும் புழங்குவதற்குச் சிரமமாகவும் இருப்பது போல் தோன்றியதால் அதனைத் தவிர்த்து இருந்தேன். flash நினைவகம் குறித்த விளக்கத்துக்கு நன்றி. ஓடுபவர் ஓடி, ஓட்டுபவர் ஓட்டி, காட்டுவது காட்டி, கேள்விப்பது - ?? கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. இதைத் தவிர player என்ற சொல் பல இடங்களிலும் வருகிறது. பெரும் அதை இயக்கி என்று சொல்லி வருகிறோம்.--ரவி 15:36, 14 ஏப்ரல் 2008 (UTC)
- குழப்பம் ஒன்றும் இல்லையே ரவி. கேள்விப்பது கேள்விப்பி. சற்று நீளமாகவும் நிறைவுதராமலும் இருக்கலாம். கேட்டல் என்னும் வினைவழி, கேட்பி எனலாம். ஆனால் இங்கே கேள், கேட்டல் என்பதை விட, இசைஒலிகள் தரும் கருவி என்பது சரியாக இருக்கும். நீங்கள் சொன்னது போல இசைப்பி எனலாம். இசை தருவதால் இசைனி எனலாம். music player, video player, என்று பல இடங்களில் player என்று வருவது "இயக்கி வெளிப்படுத்தும்/காட்டும் கருவி" என்னும் பொருளில் வருகின்றது. தமிழில் இதனை "ஓட்டி" என்பது வழக்கம். ஏதோ ஒன்று இயங்குவதை இப்படி சொல்வது வழக்கம். எ.கா. படம் ஓடுது, மணிகாட்டி ஓடுது. What movie is playing in that theater என்பதற்கு நாம் அந்த அரங்கில் என்ன படம் ஓடுகின்றது? எல்போம். அரங்கு என்பதற்கு மாறாக தியேட்டர், டாக்கீஸ் என்றே பேச்சு வழக்கில் கூறுகிறோம். சில நேரங்களில் நாம் ஒரு னி/பி/கி/விஎன்று சேர்த்து சொல் ஆக்கிப்பார்க்கலாம். இசைனி, நிகழ்படங் காட்டி என்று சொல்லிப் பார்க்கலாம். இசைப்பி போல இசைக்கி (பேச்சு வழக்கில் இசக்கி ஆகும்). இயல்பாய் எது பொருந்தி வருகின்றது என்பது பயன்பாட்டில்தான் உறுதிப்படும். மேலும் சிந்திக்கலாம். --செல்வா 21:48, 14 ஏப்ரல் 2008 (UTC)
இப்ப கொஞ்சம் குழப்பம் குறைஞ்ச மாதிரி இருக்கு :) dvd player கட்டுரைக்கு டிவிடி காட்டி என்று எழுதி விடலாம் :) நீங்கள் சொன்ன பிறகு தான் "ஓட்டி" என்ற சொல்லின் பொருத்தம் குறித்தும் நினைவு வந்தது--ரவி 22:14, 14 ஏப்ரல் 2008 (UTC)
ஐப்போடு என்பதை முதன்மைப்படுத்த வேண்டுகிறேன். கோபி 05:52, 15 ஏப்ரல் 2008 (UTC)
கோபி, ஐப்பாடா ஐப்போடா என்பது வழமையான இலங்கை X தமிழகத் தமிழ் பிரச்சினை :( இதில் எதை முதன்மைப்படுத்துவது? என்று கொள்கை / வழிகாட்டுதல்கள் உருவாக்குவது? :( --ரவி 09:29, 15 ஏப்ரல் 2008 (UTC)
- ஐபொட் அல்லது ஐப்பொட் என்பதே ஈழத்து வழக்கம். ஐப்பாடு, ஐப்போடு இரண்டுமே ஈழத்து வழக்கமில்லை.--Kanags \பேச்சு 11:12, 15 ஏப்ரல் 2008 (UTC)
- கனகு சொல்வது போல ஒகரக்குறில் என்றால் ஐப்பொடு என்றும், கோபி சொல்வதுபோல ஓகாரமாக நெடிலாக இருந்தால் ஐப்போடு என்று சொல்வது பொருந்தும். டு என்று முடிவது குற்றியலுகரம். ஆங்கில D ஒலிப்பு வேண்டும் எனில் அதுதான் வழி. ஐப்பொட் என்றால் aippôt என்று ஒலிப்பு வரும். இட் என்னும் டகர மெய் வல்லினம் (எப்பொழுதும், எல்லா இடத்திலும். அதே போல க், ச், த், ப், ற் ஆகிய மீதி ஐந்தும். புள்ளி வைத்த மெய்யெழுத்தாக வந்தால் கட்டாயம் வல்லினம்தான்). நான் முன்னர் முன்கொட்டு இட்டு ஒலிப்புத் திரிபைக் காட்ட முனைந்ததும் இவ்வகை இடர்ப்பாடுகளுக்காகத்தான். ஐப்பா'ட் அல்லது ஐப்பொ'ட் என்று எழுதி மெல்லொலி டகர மெய்யாகக் காட்டலாம் (வல்லின மெய்களுக்கு மெல்லொலி என்னும் கருத்தே தமிழில் கிடையாது. புள்ளி வைத்த மெய்யாக -ஒற்றாக- வராமல் உயிர்மெய்யாக வரும்பொழுது வல்லினம் எப்படி இயங்கும் என்பதர்கு முறை உண்டு).
மற்ற இந்தைய மொழிகளில் தனித்தனி எழுத்துகள் இருப்பதால் அவர்கள் போக்கு வேறு, நம் தமிழ் மொழியில், அவ்வகை தனித்தனி எழுத்துக்களும் கூட்டு எழுத்துகளும் தேவையில்லை, ஆனால், பிற மொழி ஒலிப்புகளைக் காட்டப் போய், நம் மொழியின் இயல்பே கெட்டு வருவது மிகவும் கவலை தருவது. சற்று கூர்ந்து எண்ணி செயல்ப்பட வேண்டுகிறேன். ஒலித்திரிபுகள் சற்று இருந்தால் ஒன்றும் அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஐப்பொடு என்றால் கடைசியில் வரும் குற்றியலுகரம், சிறிது திரிபுதான், அது நம் மொழி இயல்பு என்று அறிந்து கவலைகொள்ளாமல் இருக்க வேண்டுகிறேன். --செல்வா 12:28, 15 ஏப்ரல் 2008 (UTC)
Start a discussion about ஐப்பாடு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஐப்பாடு.