பேச்சு:சீதையின் அக்னி பிரவேசம்
I propose to delete this article as wikifying it is beyond scope and the contents doesnt fit for an encyclopedia--ரவி 08:35, 29 மே 2006 (UTC)
- I too - --சிவகுமார் 09:28, 29 மே 2006 (UTC)
- I have contact, I'll try to convey the message, just hold from deleting for a while. --Natkeeran 14:40, 29 மே 2006 (UTC)
The article rewritten into a meaningful stub by sundar is ok. The original author may expand the article on similar lines. I waive my proposal for deletion--ரவி 15:04, 29 மே 2006 (UTC)
Selvans Essay
தொகுஅனேக பட்டிமண்டபங்களில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்ட இதிகாச நாயகன் ராமனாகத்தான் இருக்க முடியும். கிருஷ்ணன் செய்யாத குறும்புகள் கிடையாது. ஆனால் ஏனோ கண்ணனை விட்டுவிட்டு ராமனைப் பிடித்துக் கொள்கிறார்கள். வாலிவதம் மற்றும் சீதா அக்னிப்பிரவேசம் ஆகிய இரண்டு வழக்குகளும் ராமன் மேல் பல காலமாக நடந்து வருகின்றன.
இதுவரை இம்மாதிரி பட்டிமண்டபங்களில் முக்காலே மூணு வீசம் சமயங்களில் ராமனை குற்றவாளியாக தான் தீர்ப்பளிப்பார்கள்.
மிகவும் அலசி ஆராயப்பட வேண்டிய விஷயம் இது. தீர்ப்பை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். "ராமன் நல்ல மகனல்ல, நல்ல நண்பனல்ல, நல்ல கணவனல்ல, நல்ல சகோதரனல்ல, நல்ல மன்னனல்ல, ஈடு இணையற்ற வீரனுமல்ல".
ராமாயணம், பாரதம் மற்றும் விஷ்ணு புராணம் ஆகியவற்றின் அடிப்படையில் பின்வரும் கருத்தைத் துணிந்து சொல்லுகிறேன்.
"...விஷ்ணுவின் எந்த அவதாரமும் (ராமன், கண்ணன் உட்பட) நல்லதொரு மகனாகவோ, நல்லதொரு தகப்பனாகவோ, சிறந்த கணவனாகவோ, சிறந்த சகோதரனாகவோ, சிறந்த வீரனாகவோ இருந்தது கிடையாது. இவர்கள் பிறந்த எந்த குடும்பமும் தழைத்தது கிடையாது. உதாரண புருஷன் என்று சொல்லும் வாழ்வை இவர்கள் வாழவில்லை. இவர்கள் வாழ்ந்தது போல் வாழ வேண்டும் என நினைத்தால் நாம் தப்பு செய்கிறோம் என்று அர்த்தம்....". பாரதத்தையும், ராமாயணத்தையும், கீதாசார்யன் சொன்ன கீதையையும் நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.
ராமன் கடவுளா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் வால்மீகியும் கம்பனும் அவனை கடவுளாக கருதி காப்பியம் படைத்தார்களா அல்லது மனிதனாக கருதி காப்பியம் படைத்தார்களா என்று கேட்டால் தைரியமாக சொல்லலாம், ராமனை பிரபஞ்சம் முழுவதையும் படைத்து காத்து தன்னுள் அடக்கும் பரம்பொருளின் மானுட அவதாரமாக தான் இவ்விரு பெரியோர்களும் கருதியுள்ளார்கள் என்பதை.
ராமன் கடவுளா இல்லையா என்ற விவாதமே இங்கு தேவையற்றது. குரங்கு மலையை தூக்குமா, பேசுமா, கடல் மீது குதித்து இலங்கைக்கு போகுமா, என்றெல்லாம் கேட்டால் என்னிடம் பதில் கிடையாது. ராமன் கடவுள் என்று வால்மீகியும் கம்பனும் நினைத்தனரா, அப்படி நினைத்து இக்காவியத்தை இயற்றினரா என்று கேட்டால் ஆம் என்பதே என் பதில்.
ராமனை கடவுளாக கருதி வால்மீகி எழுதிய கதையை மாற்றி ராமனை மனிதனாக அணுகினால் என்ன தீர்ப்பு கிடைக்கும்? தப்பான தீர்ப்பு தான் கிடைக்கும்.
ராமன் கடவுள் இல்லையென்றால் நாம் வால்மீகி புருடா விட்டார், கம்பன் கதை திரித்தான் என்று மனதில் நினைத்துக்கொண்டு இவ்விஷயத்தை அணுகுகிறோம் என்று பொருள். ராமன் கடவுள் இல்லையென்றால் ராமாயனமே கிடையாதே? குரங்கு எங்காவது பேசுமா, கடலில் கல் மிதக்குமா, மலையை குரங்கு தூக்கிவருமா என கேள்வி கேட்டுக்கொண்டு, ராமாயனத்தில் பகுத்தறிவுக்கு புறம்பான அத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு அதை மாற்றி எழுதினால் என்ன கிடைக்கும்?
பெரியார் எழுதியது போல் கீமாயணம் தான் கிடைக்கும். ஆனால் நாம் கீமாயனத்தை இங்கு விவாதிக்கவில்லையே? ராமாயனத்தை தானே விவாதிக்கிறோம்?
கீமாயணத்தில் ராமன் குற்றவாளியா? ஆம்.
ராமாயணத்தில் ராமன் குற்றவாளியா? இல்லை.
நான் முன்பு சொன்னதை மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்.
"ராமன் நல்ல மகனல்ல, நல்ல நண்பனல்ல ,நல்ல கணவனல்ல, நல்ல சகோதரனல்ல, நல்ல மன்னனல்ல, ஈடு இணையற்ற வீரனுமல்ல". ஆனால், "அவன் நீதியும்,நேர்மையும்,கருணையும், காருண்யமும் நிறைந்த கடவுள்".
கடவுளாக அவன் எங்கும் தப்பு செய்யவே இல்லை.கீதையில்,வேதத்தில்,ராமாயணத்தில் என்ன சொன்னானோ அதை அவன் செய்ய தவறவே இல்லை. தன்னை சரணடைந்த பக்தர்களை அவன் எந்நிலையிலும் காக்க தவறவே இல்லை.
இன்னொரு கருத்தையும் சொல்லியிருந்தேன்
"...உதாரண புருஷன் என்று சொல்லும் வாழ்வை இவர்கள் வாழவில்லை.இவர்கள் வாழ்ந்தது போல் வாழ வேண்டும் என நினைத்தால் நாம் தப்பு செய்கிறோம் என்று அர்த்தம்..."
நாம் பின்பற்ற வேண்டியது ராமனோ,கண்னனோ அல்ல.ராமனை போலவோ கண்ணனை போலவோ நம்மால் வாழவே முடியாது.அனைத்தையும் கடந்த சச்சிதானந்த பிரம்மம் ராமன்.காம,குரோத,மத,மாச்சரியம் என அனைத்தையும் கடந்து உள் நிற்கும் கடவுள் அவன்.ஆசையும்,பாசமும்,காமமும்,நிரம்பிய நாம் சச்சிதானந்த பிரம்மமாக ஆகவே முடியாது.கடவுளை போல் வாழ கடவுளால் மட்டுமே முடியும்.நம்மால் முடியாது.
கடவுள் போல் நம்மால் வாழ முடியாது என்றால் பிறகு யார் போல் வாழ முடியும்?
பக்தன் போல் வாழ முடியும்.ராமாயனத்திலும்,பாரதத்திலும் நாம் பின்பற்றி வாழ வேண்டிய உதாரணங்கள் ராமனும் கண்னனும் அல்ல.நாம் பின்பற்ற வேண்டிய உதாரணங்கள் ராமாயணத்தில் அனுமன், மகாபாரதத்தில் அர்ச்சுனன்.
அர்ச்சுனன் விஷயத்தை எடுத்துக்கொண்டால் அவனுக்கு பகவான் காட்டிய பெருங்கருணையின் அளவு நமக்கு தெரியும்.அர்ச்சுனன் அந்த அளவுக்கு நல்லவன் கிடையாது.மிகுந்த பொறாமை கொண்டவன்.கர்ணன் மேலும்,ஏகலைவன் மேலும் அவனுக்கு அவ்வளவு பொறாமை.காமத்தை கட்டுப்படுத்தியவன் அல்ல அர்ச்சுனன்.ஆற்று மணலை எண்ணினாலும் எண்னலாம்,அர்ச்சுனன் மனைவியரை எண்ண முடியாது என்பார்கள்.
ஆனால் இவன் மேல் கண்ணன் காட்டும் பிரியத்துக்கு எல்லை உண்டா?இவனுக்கு தேரோட்டியாக வருகிறான்.இவனுக்கு துன்பம் நேரும்போது ஓடி வந்து காக்கிறான்.இவன் கேட்டதை எல்லாம் கொடுக்கிறான்.
கண்ணனுக்கு பிரத்யும்னன் என்ற மகன் உண்டு.ஆனால் அவனை கண்ணன் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.அர்ச்சுனன் மேல் காட்டியதில் அரை சதவிகிதம் பாசம் கூட பிரத்யும்னன் மேல் கண்ணன் காட்டுவதில்லை.பிரத்யும்னன் கடைசியில் உலக்கை அடிபட்டு கண்னன் கண்முன் சாகிறான்.கண்ணன் அதை கண்டுகொள்வதில்லை.ஆனால் அர்ச்சுனுக்கு ஏதாவது ஒன்று என்றால் கண்ணன் பறந்தோடி வருகிறான்.
அர்சுனனுக்காக கண்ணன் பொய் சொல்கிறான்,பித்தலாட்டம் செய்கிறான்,யுத்த தருமத்தை மீறுகிறான்,தூது போகிறான்,தேரோட்டி நிலைமைக்கு கூட போகிறான். பெற்ற மகனை கண்டுகொள்ளாத கண்ணன் அர்ச்சுனன் மேல் ஏன் இத்தனை பையித்தியமாக இருக்கிறான்?
ராமாயணத்தில் கூட இதை பார்க்கலாம்.தசரதன் ராமனின் தகப்பன்.ஆனால் அவன் மீது ராமனுக்கு பெரிய அளவில் ஒட்டுதல் கிடையாது.புத்திர சோகத்தில் திளைத்து கொடூரமான மரனத்தை தசரதன் அடைகிறான்.பெற்ற தகப்பனுக்கு வைக்காத கொள்ளியை ராமனும்,லட்சுமணனும் ஜடாயுவுக்கு வைக்கிறார்கள்.
"தர்மத்தை மீறமாட்டேன்" என்று சொல்லி தசரதனின் உயிர் போக ராமன் காரனமாகிறான். ஆனால் சர்வசாதரணமாக வாலியை மறைந்திருந்து தாக்கி கொன்று அதே தருமத்தை சுக்ரீவனுக்காக மீறுகிறான்.
பெற்ற தகப்பன் செத்து அன்னை விதவைகோலம் பூணும்போது அவன் அழுகிறானே தவிர பெரிதாக ஒன்றும் செய்வதில்லை.ஆனால் அவனுக்காக போரிட்டு உயிர் துறந்த ஒரு குரங்கை கூட அவன் சாக விடுவதில்லை.கடைசியில் அத்தனை குரங்குகளையும் மீண்டும் உயிர் பிழைக்க வைக்கிறான்.ஜடாயுவுக்கு அந்த வினாடியே விஷ்ணுவாக மாறி மோட்சம் அளிக்கிறான்.பெற்ற தகப்பனுக்கு செய்யாத இத்தனை காரியங்களையும் மற்றவருக்காக அவன் செய்கிறான்.
ஏன் இப்படி செய்தான்?
தன்மீது பக்தி செலுத்துவோரை அவன் என்ன விலை கொடுத்தேனும் காக்கிறான்.பக்தி செலுத்ததோரை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.அது பெற்ற தகப்பனாக இருந்தாலும் சரி,சொந்த மகனாக இருந்தாலும் சரி.
சீதை விஷயமும் அப்படித்தான்.
சீதையின் துன்பங்கள் எப்போதிருந்து ஆரம்பிக்கின்றன?
ராமனை திருமணம் செய்த நாளிலிருந்து அவள் சந்தோஷமாக,இப்படி ஒரு வாழ்வு யாருக்கும் கிடையாது என சொல்லும் வாழ்வு வாழ்கிறாள்.காட்டுக்கு போகும் சூழ்நிலை வரும்போதும் "ராமன் இருக்கும் இடமே அயோத்தி" என்ப சந்தோஷமாக போகிறாள்.காட்டில் கஷ்டப்பட்டாளா என்றால் கிடையாது.மாளிகையில் முன்பு இருந்தாள்,இப்போது பர்ணசாலையில் அவ்வளவுதான்..கண்நிறைந்த காதல் கணவன் அவள் கூடவே இருக்கிறான்.சந்தோஷமாக இருக்கும் அவள் வாழ்வில் சிக்கல் எப்போது வருகிறது ?
மாயமானை கண்டு ஆசைப்பட்டாளே..அப்போது தான் பிரச்சனை வருகிறது.
ஆசை துன்பத்துக்கு காரணம் என்று படித்து படித்து கண்ணன் கீதையில் சொல்வது இதனால் தான்.
அவள் ஆசைப்பட்டது ராமனாக இருந்தவரை அவன் அவள் கூடவே இருந்தான்.எந்த வினாடி மானை பார்த்து ஆசைப்பட்டாளோ அந்த வினாடியே அவளை பிரிந்து அவன் செல்கிறான்.
கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சம் அவன்.
நாம் கேட்டதை அவன் கொடுத்துவிடுவான். ஆனால் அதன் பின் அதனால் வரும் சுகதுக்கங்களை அதன் பின் நாம் தான் சமாளித்துக்கொள்ள வேண்டும்.
அதுநாள் வரை அவனை தவிர பெரிதாக எதையும் கேட்டறியாத சீதை முதல் முதலாக மாயமானுக்கு ஆசைப்படுகிறாள்.
பக்தன் கேட்பதை அவன் என்று தராமல் இருந்திருந்தான்?
சின்ன ஆசை தான்.ஆனால் எத்தனை அனர்த்தம் அதனால் விளைகிறது என்று பாருங்கள்.
ஒரு மாயமானுக்கு ஆசைப்பட்டு எத்தனை துன்பங்களை சீதை அனுபவித்தாள்?
சின்ன ஆசை இத்தனை துராக்கிரங்களை உண்டாக்குமா என்று கேட்டால் ஆம் உண்டாக்கும்.
பூனைக்குட்டிக்கு ஆசைப்பட்டு சம்சாரியான சாமியார் கதை தான் இங்கும் நடந்தது.
மானை பின் தொடர்ந்து ராமன் சென்ற பின் நடந்த கதை நமக்கு தெரியும்.மாரிசன் ராமன் குரலில் "சீதா,லட்சுமணா.." என்று அலறிவிட்டு சாகிறான்.சீதை லட்சுமணனை போய் பார்க்க சொல்கிறாள்.அவன் போவதில்லை.
ராமனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அவனுக்கு தெரியும்.
கடவுளை யார் என்ன செய்ய முடியும்?
'எண்மை ஆர் உலகினில், இராமற்கு ஏற்றம் ஓர் திண்மையார் உளர் எனச் செப்பற்பாலரோ? பெண்மையால் உரைசெயப் பெறுதிரால்'
என்று சொல்லிவிட்டு பேசாமல் இருக்கிறான் இலக்குவன்.
சீதையின் வார்த்தைகள் விஷமாக மாறுகின்றன.வால்மீகியின் வார்த்தைகளில்
"...இகசி த்வம் வினஷ்யன்டம் ராமம் லக்ஸ்மண மாத் க்றிதே லொப்காத் து மட் க்ரிதம் நூனம் ந அனுகஷசி ராக்கவம்
கிம் கி சம்ஷயம் ஆபன்னே டஸ்மின் இக மயா பகவத் கர்தவ்யம் இக டிஸ்தன்ட்யா யட் ப்ரதானக் த்வம் ஆகடா...."
அதாவது "ராமன் செத்த பின் என்னை அடைய திட்டமா" என்று கேட்கிறாள்.
கம்பராமாயணத்திலும் சீதை தீக்குளிப்பேன் என்று இலக்குவனை மிரட்டுகிறாள்
'ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்; பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ வெருவலை நின்றனை; வேறு என்? யான், இனி எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு' எனா
பாகவத அபசாரத்தை பொறுப்பானா பகவான்?
தன்னை அபசாரம் செய்தால் கூட பொறுத்துக்கொள்வான்
தன் பக்தரை அபசாரம் செய்தால் பொறுப்பானா?
லட்சுமணனுக்கு சீதை என்ன செய்தாளோ அதுவே அவளுக்கு திரும்பி வருகிறது.
லட்சுமணன் நேர்மையை சீதை கேள்வி கேட்க பதிலுக்கு அவள் நேர்மை அவன் கேள்வி கேட்கிறான்.அபாண்டமாகத்தான் லட்சுமணன் மீது அவள் பழி போட்டாள்.அதே அபாண்டம் அவள் மீது திரும்புகிறது.
தீக்குளிப்பேன் என்று லட்சுமணனை சும்மாவாச்சும் மிரட்டினாள்.
அது உண்மையாகிறது.அதே லட்சுமணன் சிதை மூட்ட சீதை தீக்குளிக்கிறாள்.
வினை விதைத்தவர் வினையை அறுக்கிறார்.
"அவரவர் செய்த கர்மாவிற்கு ஏற்ற பலனை பாரபட்சமின்றி அவரவருக்கு நான் தருவேன்" என்று சொன்னவன் சொல்லியவண்ணமே செய்கிறான்.
மனைவி,தந்தை என்றெல்லாம் பாரபட்சம் அவன் பார்ப்பதில்லை.
சிரவனனை கொன்று அவன் தாய் தந்தையரை புத்திர சோகத்தில் தவிக்க விட்ட தசரதன் அதே போல் புத்திர சோகத்தில் இறக்கிறான்.
அம்பையின் வாழ்வை அழித்து அவளை வதைத்த பீஷ்ம பிதாமகர் அதே அம்பையின் கையால் அம்பு வாங்கி இறக்கிறார்.
அபிமன்யுவை யுத்த தருமத்துக்கு மீறிய முறையில் கொல்லப்பட காரணமாக இருந்த ஜெயத்ரதன் அதே யுத்த தருமத்தை மீறிய முறையில் கொல்லப்படுகிறான்.
எதிராளியின் பலத்தில் பாதியை பிடுங்கிக்கொண்டு அதர்ம யுத்தம் புரிந்த வாலி அதே போல் அதர்மமான முறையில் கொல்லப்படுகிறான்.
இவர்கள் அத்தனை பேர் மரணத்துக்கும் ஒரு வகையில் காரணமானவன் கண்னன்(ராமன்) தான்.
அவரவர் செய்த பலனுக்கு கூலியை பாரபட்சமின்றி அவரவர்க்கு கொடுத்தான்.
அப்பா,அம்மா என்றெல்லாம் அவன் பார்க்கவில்லை.
அவன் அது அனைத்தையும் கடந்தவன்.
தப்பு செய்த பக்தருக்கு தண்டனை கொடுத்தபோதும் அவர்களை அவன் கைவிட்டு விடவில்லை.செய்ததப்புக்கு தண்டனையும் கொடுத்து அவர்களை காக்கவும் அவன் தவறவில்லை.
அர்ச்சுனன் தப்பு செய்தான்.அதே சமயம் காட்டுக்கு போய்,மனைவி அவமானப்பட பார்த்து படாத துன்பம் எல்லாம் பட்டுவிட்டான்.
அவன் தப்புக்கு தண்டனை தந்த கண்ணன் அவனை இறுதியில் காக்கவும் தவறவில்லை.
மிக நல்ல பேற்றை அவனுக்கு தந்தான்.
சீதை விஷயத்தில் நடந்ததும் இதுதான்.
முன்னை விட புகழோடு தான் அவள் தீயிலிருந்து எழுந்தாள்.
தீக்குளித்து எழுந்த சீதைக்கு தசரதன் சொல்லுவான்.
"பொன்னைத் தீயிடைப் பெய்வது அப் பொன்னுடைத் தூய்மை- தன்னைக் காட்டுதற்கு" என்பது மனக் கொளல் தகுதி; உன்னைக் காட்டினன், "கற்பினுக்கு அரசி" என்று, "உலகில், பின்னைக் காட்டுவது அரியது" என்று எண்ணி, இப் பெரியோன்.
'பெண் பிறந்தவர், அருந்ததியே முதல் பெருமைப் பண்பு இறந்தவர்க்கு அருங் கலம் ஆகிய பாவாய்! மண் பிறந்தகம் உனக்கு; நீ வான் நின்றும் வந்தாய்; எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால்'.
பக்தருக்கு உயர்வு தர அவன் தவறுவதில்லை. அதற்காக தன்னை எந்த அளவுக்கு தாழ்த்திக்கொள்ளவும் அவன் தயங்குவதில்லை. அர்ச்சுனனுக்கு எப்பேர்ப்பட்ட கவுரவத்தை தந்தான்? "பார்த்த சாரதி" என்று தன்னை அழைக்க வைத்துக் காலம் உள்ள காலம் வரை அர்ச்சுனன் பெயர் நிலைக்க அல்லவா வழி செய்தான்?
கண்ணப்ப நாயனாரிடம் கண்ணைக் கேட்டதும், பத்ராசல ராமதாசர் மீது திருட்டுப்பழி சுமத்தியதும், சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்டதும், சீதையை தீக்குளிக்க வைத்ததும்.....
அந்த அலகிலா ஆண்டவனின் விளையாட்டுக்கள்.
இவை எல்லாம் அவர்கள் செய்த வினைக்கு அவன் கொடுக்கும் கூலி. அதே சமயம் இந்த அத்தனை இடங்களிலும் தன்னை தாழ்த்திக்கொண்டு பக்தருக்கு உயர்வைத் தரும் செயலை தான் அவன் செய்துள்ளான்.
மனிதன் என்று பார்த்தால் இது அத்தனையும் தவறுதான். மனிதன் பிள்ளைக் கறி கேட்டால் அது தப்பு. மனிதன் இன்னொரு மனிதனின் கண்ணைக் கேட்டால் அது தப்பு.
கடவுள் நல்ல மனிதனாககவோ, நல்ல தந்தையாகவோ, நல்ல கணவனாகவோ இருக்க முடியாது.
நல்ல கடவுளாகத்தான் இருக்க முடியும்.
அதனால் மீண்டும் இன்னொருமுறை என் தீர்ப்பை சொல்கிறேன். "ராமன் நல்ல மகனல்ல, நல்ல நண்பனல்ல, நல்ல கணவனல்ல, நல்ல சகோதரனல்ல, நல்ல மன்னனல்ல, ஈடு இணையற்ற வீரனுமல்ல"
ஆனால்
"அவன் நீதியும், நேர்மையும், கருணையும், காருண்யமும் நிறைந்த கடவுள்".
References:
1) http://www.tamiloviam.com/unicode/printallt.asp?week=selvan1 2) http://holyox.blogspot.com/2006/05/88.html 3) http://holyox.blogspot.com/2006/05/87-iii.html 4) http://holyox.blogspot.com/2006/04/81-ii.html 5) http://holyox.blogspot.com/2006/04/blog-post_19.html
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D" இலிருந்து மீள்விக்கப்பட்டது