பேச்சு:பற்தூரிகை

பற்தூரிகை என்பது தவறு

தொகு

பற்றூரிகை அல்லது பல்தூரிகை என்று இருக்கவேண்டும். இலக்கணம் மட்டுமன்றி றகரத்திற்கு அடுத்துத் தகரத்தை எப்படி ஒலிக்கமுடியும்? - Perichandra1

ஆம். பற்றூரிகை சரியே. ஆனால் பல்தூரிகை என்று எழுதுவது பொருத்தமேயில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். அவ்வாறு தமிழை உச்சரிக்கவே முடியாது. பற் தூரிகை என்பது முடிகிறது. அந்த இடைவெளியோடு. இது தமிழ் விக்கிபீடியாவில் அடிக்கடி எதிர்கொள்ளப்படும் ஒரு பிரச்சினை. எடுத்துக்காட்டு: அறிவியல் தமிழ். அறிவியற் தமிழ் என்பது பிழையா? நான் இலக்கணம் கற்றவனல்லன். நான் உச்சரிப்பதை ஆதாரமாகக் கொண்டே என் கருத்துக்கள். நன்றி. --கோபி 20:28, 9 அக்டோபர் 2007 (UTC)Reply
சந்திரா சொல்வது முற்றிலும் சரி. கோபியின் கருத்தும் நோக்கத்தக்கது. பொதுவாக இன்றிருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தமிழ்ப் பயிற்சியில் பலவற்றை பிரித்து எழுதுவது தேவையான ஒன்றாக உள்ளது. பற்றூரிகை என்பதுதான் சரி என்றாலும் பல் தூரிகை என்று எழுதவேண்டிய நிலை இன்று. பல்தூரிகை என்று சேர்த்து எழுதினாலும், படிக்கும் பொழுது பல் தூரிகை என்று பிரித்து உணர்ந்துதான் படிப்பார்கள். எனவே என் பரிந்துரை இடைவெளிவிட்டு பல் தூரிகை என்று எழுதுவதே. இதனால் பல் என்ற சொல் தேடு பொறிகளில் கிட்டும். தூரிகை என்பது கிட்டும். தேடுபொறிகளுக்காக நம் மொழியை மாற்றக் கூடாது, ஆனால் மக்களின் புரிந்து கொள்ளும் ஆற்றல் குன்றி வரும் இந்நாட்களில் (இதைக் கூட நாள்கள் என்று கூறுதல்தான் சரி, நாட்கள் என்றால் புதிய கள் என்று பொருள் படும் என்றும் கூறுவதுண்டு!).--செல்வா 22:21, 9 அக்டோபர் 2007 (UTC)Reply


பல்தூரிகை உச்சரிக்கப் பாடாக இருக்குமென்று இதுவரை தெரிந்ததில்லை. பல்பசை, கல்கோயில், கல்தூண், "இது கல்தானா இல்லை இரும்பா" என்றுதான் லகரத்தை வல்லினம்முன் பேசுகிறதைக் கேட்கிறோம். இதற்கு இலக்கணம் கற்கவேண்டியதில்லை; பற்தூரிகை என்று எழுதுவதுதான் இலக்கணப்படி எழுதமுனைந்ததுபோல் தெரிகிறது! அல்லது உங்கள் பேச்சுவழக்கில் உண்மையாகவே இப்படிப்பேசுவது இருந்தால் அது மிகமிகப்பெரிய செய்தி. அருள்கூர்ந்து அதைத் தெரிவிக்கவும். மொழியியல் ஆய்வுக்கு உதவும். செல்வா சொல்வதுபோல் மக்களுக்கு இந்நாளில் புணர்ச்சியை உணர்வது பாடாக இருக்கிறதுதான்; ஆனால் புணர்ச்சியைக்கலைப்பது மொழியைச்சிதைப்பது ஆகாது; எளிமைப்பாடே ஆகும். செம்மைக்குக் குலைவில்லை அதனால். புணர்ச்சி தொன்றுதொட்டே இலக்கிய மரபிலும் பேச்சுவழக்கிலும் மாறியிருப்பதற்கு ஒரு நல்ல சான்று: கொற்கை. கொற்கை என்று இலக்கியத்தில் கண்டாலும் யவனர்கள் அதைக் கொல்கை என்றே குறிக்கின்றனர்; இதைப் புணர்ச்சி இருவழக்கிலும் மாறியிருப்பதைக் காட்டும் சான்றாகக் கொள்வர். வெட்குதல்-வெள்குதல், நண்பு-நட்பு (திருக்குறளில் இரண்டும் காணலாம்: அன்பீனும் ஆர்வமுடைமை;...நண்பென்னும் நாடாச் சிறப்பு), அன்பு-அற்பு, நன்கு-நற்கு என்று பலவுண்டு. ஆகமொத்தம் கணித்துறையில் தேடிகளுக்குப் புணர்ச்சிக்கலைப்பே சிறந்தது. !).--பயனர்:Perichandra1

//பல்பசை, கல்கோயில், கல்தூண்// இந்த மூன்றுமே எனக்கு உச்சரிக்கச் சிக்கலானவையே. பற்பசை, கற்கோயில், கற்தூண் என்றே உச்சரிக்கிறேன். பற்பசை மிகவும் பயன்படும் சொல். அதனை நான் பல்பசை என்று உச்சரிக்கக் கேட்டதேயில்லை. தமிழை இயல்பாக உச்சரித்தால் பல்பசை என்று உச்சரிக்கவே முடியாது என்பது என் அனுபவம். கோபி 16:36, 11 அக்டோபர் 2007 (UTC)Reply

எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டிலும் பல்பசை, கல்கோயில் ஆகிய சொற்களைக் கேட்டதில்லை. பற்பசை, கற்கோயில் என்றே கேட்டிருக்கிறேன். தமிழ் விக்கியிலும் அப்படி எழுதவே பரிந்துரைக்கிறேன். தமிழ்நாட்டில் அதிகமாய் வழக்கில் இல்லாததும் தமிழ் விக்கியில் அடிக்கடி உரையாடலுக்கு வித்திடுவதும் ல்+த கூட்டலே. ல்+ப, ல்+க கூட்டல்களில் கருத்து வேறுபாடுகள் அதிகம் எழுவதில்லை.அறிவியற்றமிழ், பற்றூரிகை, கற்றூண், காவற்றுறை என்று எழுதும், பேசும், கேட்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை. அதே வேளை நற்றமிழ் போன்ற சொற்களும் பெரிதும் புழக்கத்தில் உண்டு. கற்றாழை (பேச்சு வழக்கில் கத்தாழை என்பர்) என்பதும் புழக்கத்தில் உண்டு. இது கல்+தாழை - யா என்று அறிய ஆவல். ஆக, ஒரு சில சொற்களைச் சேர்த்துச் சொன்ன நம் முன்னோர் சில சொற்களைச் சேர்த்து சொல்லாமல் விட்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது. கல் தூண் என்று புணராமல் எழுதலாம். அல்லது, கற்றூண் என்று முறையான இலக்கணத்துடன் புணர்ந்து எழுதலாம். கற்தூண், பற்தூரிகளை போன்றவை இலக்கணப் பிழையானவை என்பதால் தவிர்க்கலாம் என்று கருதுகிறேன்--Ravishankar 19:34, 11 அக்டோபர் 2007 (UTC)Reply


கோபி: கற்தூண் என்பதன் றகரத்தின் உச்சரிப்பை முன்பே கேட்டதுபோல் விவரம் தெரியாத வரை நீங்கள் சொல்லும் எளிமைபற்றி ஒன்றூம் சொல்வதற்கில்லை. மேலே என்னுடைய கூற்றைப்பார்க்கவும். பற்பசை அன்றாடப் பேச்சு வழக்கில் இல்லை; அவ்வாறு எழுத்திலோ செய்தியிலோ விளம்பரத்திலோ கேட்கலாம். றூத்பேஸ்ற் (அல்லது இந்தியவழக்கம்போல் டூத்பேஸ்ட்) என்று சொல்லிவிட்டு மக்கள் வேறுவேலையைப் பார்க்கிறார்கள் :-) எனவே அதைப் பேசுவதில் பயனில்லை. ஆனால் கற்றூண் என்று பேச்சுவழக்கில் கேட்பதுண்டா? எழுத்து வழக்கைக் கேட்கவில்லை. நமக்கு அதில் எந்த ஐயமும் இல்லை.

இரவிக்குமார்: "கற்றூண் என்று முறையான இலக்கணத்துடன்" என்று சொல்லினார். புணர்ச்சியைக் கலைப்பது இலக்கணமீறலில்லை. திராவிடமொழிகள் சில புணர்ச்சியின்றியே பேசும். ஏற்கனவே எழுதிய பழைய எடுத்துக்காட்டுகளைப் பார்க்கவும்: வெட்குதல்-வெள்குதல், நண்பு-நட்பு, அன்பு-அற்பு, நன்கு-நற்கு என்று பலவுண்டு. மேலும் கொற்கை, கொல்கை என்ற ஊர்ப்பெயர் வேறுபாட்டையும் காண்க. மேலும் கன்னடம் புணர்ச்சி இல்லாத மொழி: நாம் எட்டு என்பதை அவர்கள் எண்டு என்பர்; அதுபோல் பலப்பல உண்டு. கன்னடமும் தமிழ்-மலையாளமும் மூன் ஒன்றாக இருந்த தென்திராவிட மொழியில் அது அப்படி இருந்ததையே காட்டுகிறது. ஏனெனில் எண்பது, எண்ணூறு என்பவற்றில் எண் என்ற சொல்லைப் பார்த்தாலே தமிழர்கள் எண்+து என்பதை அழுத்திப் புணர்த்திப் பேசியது ஒரு கிளைமொழியாக வழங்கியது தெரிகிறது. ஆனால் அது முழுதும் பரவாததை இலக்கியத்திலேயே வேறுவேறு இருப்பதைக் காட்டும். எனவே புணர்ச்சியைக் கலைப்பது இலக்கணமீறலில்லை என்று அறியவும். --பயனர்:Perichandra1

"மேலும் கன்னடம் புணர்ச்சி இல்லாத மொழி" என்பதில் எண்டு என்பதும் புணர்ச்சியே ஆனால் தமிழில் உள்ளதுபோல் மேலும் அழுத்திப் புணர்ப்பது இல்லாததைச் சுட்டிக்காட்ட விரும்பினேன். அதாவது தமிழ்மொழியின் ஒரு சிலகுறுகிய வழக்கம் காட்டுவது ஒன்றுதான் இலக்கணம் என்று இல்லை என்பதை அறிக. தேவையின்றித் தவறில்லாத ஒன்றைச் செம்மையின் சிதைவாகக் கருதக்கூடாது. தமிழ்மொழி மற்ற திராவிடமொழிகள் தொலைத்த பலசெம்மைகளைப் போற்றியுள்ளது வேறு; அதிசெம்மையாக (hypercorrect) நடந்து செம்மையைக்கூடச் சிதைவென்பது வேறு. செம்மையைக் காக்கும் முயற்சியில் இப்படி நடப்பது இயல்பு; ஆனால் அவ்வப்பொழுது ஆய்ந்து பார்ப்பது தகும். --பயனர்:Perichandra1

கற் தூண் kat thooN பற்பசை என்பது எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து வீட்டில் அன்றாடம் பாவிக்கும் சொல். நான் வலிந்து எழுதவில்லை. அதனை பல்பசை என்று உச்சரிப்பதென்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. உங்கள் கருத்துக்களை ஒட்டியோ வெட்டியோ உரையாட எனக்கு இலக்கண அறிவில்லை. நான் சுட்டிக் காட்டியது எனக்குப் பட்டவற்றை மாத்திரமே. கோபி 22:20, 11 அக்டோபர் 2007 (UTC)Reply

கோபி சொல்வது உண்மை. பற்பசை கற்கள், பற்கள் என்பன பலுக்க எளிமையானவை. இலக்கணம் இயல்பை ஒட்டியே எழுந்தது. பல்பசை என்பது சற்று கடினமானது (மேலும் அப்படி எழுதுனால் palbasai என்றுதான் ஒலித்தல் வேண்டும்). பல் பசை என்று பிரித்து எழுதினால், பேசும் பொழுது கிடைக்கும் சிறு கால இடைவெளி சரியாக ஒலிக்க உதவுகின்றது. ஆனால் கல்தூண் என்பது அவ்வளவு கடினம் இல்லை, எனினும் "கற்தூண்" என்பது இன்னும் சற்று எளிது (ஆனால் "அரைப்"புணர்ச்சி!), கற்றூண் என்பது இயல்பானது (இன்றைய தமிழர்கள் பயிற்சியில் "இலக்கணம் மிக்கது, செயற்கையானது " என்று நினைக்ககூடியது. இங்கே இயல்பென்பது நாவால் ஒலிக்க இசைவானது. புணர்ச்சி விதிகள் மிக நுட்பமாய் சொற்பிறப்பியல் அறிந்து நம்முன்னோர்களால் ஆக்கப்பட்டவை. இதன் அடிப்படைக் கூறுகளை பிற வேற்று மொழிகளிலும் காணலாம். சில இடங்களில் புணர்ச்சி இல்லாமல் எழுதினால் பொருளே மாறிவிடும் (வல்லினம் மிகும் இடங்களைப் பார்க்கவும்). பற்பசை, கற்கோயில், கற்றளி (கல்+தளி) என்று எழுதுவதே மேல். சந்திரா கூறியவற்றையும் நோக்குங்கள். கொல்களிறு (களிறு = ஆண் யானை) என்று கூறுவது சரிதானே, அது போல கல்தூண் என்பதும் சரியாகும், ஆனால் பல்பசை என்பது கேட்கவே மருட்சியாய் உள்ளது. கல்கள், பல்கள், சொல்கள் என்று கூறுவது நெருடலாக உள்ளது. தவறு என்று கூறமுடியுமா என்று தெரியவில்லை. சொல் கேளாதவன் எனலாம், பிரித்து எழுதும்பொழுது ஆனால் சேர்த்தி எழுதும்பொழுது சொற்கேளாதவன் என்று எழுதுவதுதான் சரியானதாகப் படுகின்றது. சொல்கேளாதவன். இதேபோல சொல்+சுவை =சொற்சுவை, சொல்சுவை என்று கூறும்பொழுது சுவை என்னும் சொல் திரிபுறுகின்றது (காற்றொலி சகரம் வருகின்றது). பொருளும் மாற வாய்ப்புள்ளது. சொல்சுவை என்னும் பொழுது சுவையைச் சொல் என்றோ சொல்லைச் சுவை என்றோ பொருள்படுமாறு தோன்றுகின்றது. இதே போல பொருட்சுவை (பொருள்சுவை?) என்பதும். சந்திரா, உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். --செல்வா 22:56, 11 அக்டோபர் 2007 (UTC)Reply


செல்வா: கொல்களிறு என்பதற்கும் கற்றூண், பற்பசை என்பதற்கும் வேறுபாடுண்டுதான்: முற்சொல்லியது வினைத்தொகை என்பதால் அழுத்தமின்றியும் பின்னவை வேற்றுமைத்தொகை என்பதால் பொதுவாக அழுந்தியொலிக்கும்; ஆனாலும் அதுவும் ஒரு வழக்குத்தான். கோபி: உங்கள் விடைக்கு நன்றி; பாவிக்கும் என்று நீங்கள் சொல்லியதால் ஈழப்பேச்சில் கற்தூண் என்று அரைகுறைப்புணர்ச்சியாகப் பேசும் வழக்கமும் உண்டென்று அறிகிறேன். இதை நான் மேலும் உசாவுகிறேன். ஈழவழக்கில் இன்னும் றகரம் பழைய ஒலிப்போடு இருப்பதை அறிகிறேன். எனவே இது புதியதுதான். செல்வா: எங்கள் வடகொங்குநாட்டில் சொல்பேச்சு என்றுதான் பேசுவார்கள்: "இவன் சொல்பேச்சு கேட்பதில்லை" என்றுதான் சொல்லுவார்கள். இலக்கியத்தில் பெருகியிருக்கும் வழக்குப்படிச் "சொற்பேச்சு" என்றுதான் இருக்கும்; ஆனால் குறிப்பிட்டதுபோல் இலக்கியத்திலும் புணர்ச்சியில்லாத வழக்கினைக் காணவேண்டும்: நண்பு, உள்கு, வெள்கு என்று. நீங்கள் சொல்லுகிறதுபோல் சொல்சுவை என்பது குழம்ப வாய்ப்பில்லை: 'சுவையைச் சொல்" என்ற பொருளில் சொல்சுவை என்று செய்யுளிலோ அலங்காரப்பேச்சிலேதான் வேடிக்கையாக வழங்கமுடியும்; இன்றைய மொழிநடையைக் கருதினால்; மிகப்பழங்காலத்தில் சிலவழக்குகளில் நீங்கள் சொல்லும் பொருள் தோன்றலாம். பல்சுவை என்று இருப்பதைக் காணவும்! பல்சுவை என்பதையும் பற்பல என்பதையும் கருதுங்கள்! ஏன் ஒன்றில் புணர்ச்சி இன்னொன்றில் இல்லை? இதுவும் ஒரு முறையான இறுக்கமான தொல்வழக்கு இல்லாததையே காட்டும். இன்னொரு பெரிய சான்று: நாம் இன்று செந்தமிழிலும் பேச்சிலும் வழங்கும் பல சொற்கள் புணர்ச்சியில்லாதவை! நன்று என்பது நல்லது (நல் + து); அவனுக்கு, அவளுக்கு என்பது இலக்கியத்தில் அவற்கு, அவட்கு என்றும் கூடுதல் அமைப்புகள் இருக்கும் (அவன்+கு, அவள்+கு)!; அதுபோல் ஒருவற்கு (“நன்றி ஒருவற்குச் செய்தக்கால்”) ஆனால் அவனுக்கு என்று வழங்குவதைக் கவனிக்க! இது செந்தமிழிலிலேயே இப்படித் தொன்றுதொட்டே மாற்றுகள் இருப்பதை உணர்க. --பயனர்:Perichandra1

மிக்க நன்றி

தொகு

சந்திரா, உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. மிகவும் அருமை! நீங்கள் அருள் கூர்ந்து தமிழ் விக்கியில் வந்து இப்படிப் பங்களிப்பது எனக்கு மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் தமிழ் விக்கிக்கு மிகப் பெரிய அளவிலே வழிகாட்டி உதவ முடியும். நேரம் கிடைக்கும் பொழுது, சந்திரா, நீங்கள் இலக்கணக் கூறுகளைப் பற்றி விக்கியில் கட்டுரைகள் ஆக்கித் தாருங்கள், தமிழர்கள் என்றென்றும் நன்றியுடன் போற்றுவார்கள். பொருள் இலக்கணம் பற்றி நீங்கள் ஒரு 10-15 வரிகளாவது அருள்கூர்ந்து எழுதித்தர வேண்டுகிறேன். இது பற்றி முன்னர் நான் கோபியிடம் கூறியிருந்தேன். --செல்வா 15:29, 12 அக்டோபர் 2007 (UTC)Reply


செல்வா: நன்றி. உங்கள் வேண்டுகோளின்படி கூடியபொழுது பொருளிலக்கணம் பற்றி எழுதுகிறேன். மகிழ்ச்சியே. --பயனர்:Perichandra1

மெல்கோல்

தொகு

ஆசாரக்கோவையில் ஒரு பாடலில் மெல்கோல் என்ற சொல் Toothbrush எனும் பொருளுக்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குரவர் உரையிகந்து செய்யார் விரதம்
குறையுடையார் தீர மறவார் - நிறையுவா
மெல்கோலும் தின்னார் மரம்குறையார் என்பதே
நல்லறி வாளர் துணிவு (ஆசாரக்கோவை -17)

எனவே அதையும் கவனத்தில் கொள்ளலாம். -இரா. பாலாபேச்சு 02:42, 2 பெப்ரவரி 2022 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பற்தூரிகை&oldid=3383066" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பற்தூரிகை" page.