பேச்சு:பாலியல் நோய்கள்

கர்ப்பிணி என்பதற்கு நல்ல மாற்றுத் தமிழ்ச் சொல் உண்டா?, சிகிச்சை தமிழ்ச்சொல் தானா? இக்கட்டுரைப் பொருள் தொடர்புடைய பிற குறுங்கட்டுரைகளையும் உருவாக்கி வருவதற்கு நன்றி, கோபி--ரவி 17:09, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

  • சூலி, நிறைமாத சூலி, உண்டானவள், கருவுற்றவள்(/ர்) ஆகிய சொற்கள் உள்ளன.
  • சிகிச்சை என்பது தமிழல்ல, ஆனால் தமிழில் பரவலாக வழங்குவது. அறுவை, அறுவை மருத்துவம் என்பது இணையானது.--C.R.Selvakumar 17:27, 9 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

சிகிச்சை என்பது treatment தானே? அறுவை மருத்துவம் என்பது பொருத்தமா? எல்லா சிகிச்சையும் அறுத்து செய்யப்படுவது அல்லவே?--ரவி 18:02, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

சிகிச்சை என்பதை அறுவை மருத்துவம் என்பது பொருத்தமாகப் படவில்லை. சிகிச்சை தமிழல்லவெனின் பொருத்தமான சொல்லைப் பரிந்துரைத்து மாற்றுங்கள். --கோபி 18:07, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

பண்டுவம்

தொகு

நான் சரியாக படிக்கவில்லை. சிகிச்சை என்பதை பண்டுவம் என்றும் சொல்லலாம். பண்டுவம் என்றால் medical treatment). பொதுவாக மருத்துவ முறை, மருத்துவ தணிவாய் என்று கூறலாம். இன்னும் சிறந்த எளிய சொற்கள் செய்யக் கூடும்.--C.R.Selvakumar 18:32, 9 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

முடிந்தளவு தூய தமிழ்ச் சொற்கள் பாவிக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் சாதரண வாசகருக்குப் புரியக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பண்டுவம் போன்றன பொதுவழக்கிலுள்ளனவா? ஓரளவு பரிச்சயமான சொற்களைப் பாவிப்பது நல்லது. --கோபி 18:43, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

பொது வழக்கில் இருப்பதாலும் மாற்றுத்தமிழ் சொற்கள் எளிமையாக இல்லாமல் இருப்பதாலும், சிகிச்சை என்றே தொடர்ந்து பயன்படுத்தலாம். மு.மயூரனின் விக்கிபீடியா அறிமுக வலைப்பதிவில், புகுபதிகை, விடுபதிகை என்றெல்லாம் சொற்களைப் போட்டால் விக்கிபீடியாவை அகரமுதலி வைத்து தான் படிக்க வேண்டும் என்று ஒருவர் குறைபட்டிருந்தார். புகுபதிகை போன்ற எளிதில் பொருள் உணரக்கூடிய சொற்களுக்கே இந்த நிலை என்றால் பண்டுவம் குறித்து கேட்கவே வேண்டாம். எனவே, நல்ல தமிழ் என்பதுடன் எளிதில் பொருள் புரியுமாறும் பார்த்துக் கொள்வதை விக்கிபீடியா வழக்கமாக கொள்ளலாம்.

செல்வா, முதலில் பண்டுவம் என்பது புதிய சொல் போல இருந்தது. பின்னர் தான், சுர்ரென்று மண்டையில் உரைத்தது. இது, கிராமத்தில் என் அம்மா மற்றும் அபத்தா அன்றாடம் பயன்படுத்தும் சொல். எனினும், இன்று வரை இதன் பொருள் குறித்து எண்ணிப் பார்த்ததில்லை. இப்பொழுது தான் இச்சொல்லின் சிறப்பு விளங்குகிறது. இச்சொல்லை நினைவு படுத்தியதற்காக என் நன்றிகள் பல. குழந்தைகள் மற்றும் முதியோரை சிறப்புக் கவனம் எடுத்து அருகிலிருந்து கவனிப்பதை பண்டுவம் பண்ணுதல் என்று கிராமத்தில் குறிப்பார்கள். treat, treatment என்ற சொற்களுடனான இச்சொல்லின் நேரடிப் பொருத்தம் (மருத்துவத் துறைக்கு அப்பாலும்) வியக்க வைக்கிறது. இன்னும் ஆங்கில வாசனை எட்டிப் பார்க்காத கிராமங்களிலும், ஆங்கிலம் கற்காத முதியோரிடமும் இது போன்ற பல சிறப்பான சொற்கள் இருக்கும். அவற்றை வெளிக்கொணர்ந்து பாதுகாப்பது மிக அவசியம். தமிழ் விக்சனரியை அதற்கு பயன்படுத்தலாம். இது போன்ற சொல்லாய்வுகளிலும் தமிழ் மாணவர்கள் ஈடுபட்டிருப்பார் என்று நம்புகிறேன்.

கோபி, ஓர் ஆர்வத்தின் பேரிலேயே சிகிச்சைக்கான மாற்றுச் சொல்லை அறிய முயன்றேன். கட்டுரையில் மாற்றும் உத்தேசமில்லை :)--ரவி 19:35, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, நான் சிகிச்சை என்னும் சொல்லை ஆளுவதை எதிர்க்கவில்லை. ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும். பண்டுவர் என்ன சொன்னார், என்ன பண்டுவம் வைத்தியர் சொன்னார் என்னும் மொழிகளை நான் மிகப்பரவலாக கேட்டுள்ளேன் (எனக்கு சுமார் 10-12 வயதிருக்கும் பொழுது- 1960களில்). இன்று பல சொற்கள் அருகி வருகின்றன, ஒத்தாசை, அலுங்கு, அசங்கிவிட்டது, அசதி, அலுப்பு, இசைவா ஒண்ணு சொல்லமாட்டான், இடக்கு பிடித்தவன், கொஞ்சம் விரசலா (விரைசலாக) போங்க, விர்ருன்னு செய்தாதானே, விருட்டுன்னு போயிட்டான், பாங்கி ((girl) friend), பாங்கன் (friend, male) போன்ற நூற்றுக்கணக்கான சொற்களும் சொல்லாட்சிகளும் அருகியும் மடிந்தும் வருகின்றன. இவையெல்லாம் அன்றாட பேச்சு வழக்கில் இருந்த சொற்கள், இன்றும் உள்ளன ஆனால் மிக அருகி வருவன. பண்டுவர் = மருத்துவர், பண்டுவம் = நோய்தீர மருத்துவர் தரும் மருந்து, பத்தியம் முதலான முறை. அடைப்புக்குறிகளுக்குள் (பண்டுவம் = medical treastment) என தரலாம் என பரிந்துரைக்கிறேன். தமிழை குறை கூறுபவர்கள் என்றும் உள்ளார்கள். அதே பேர்வழி, ellipse என்றால், முறைப்படி அகராதியைக் கொண்டு பொருள் விளக்கிக் கொள்வார். நீள்வட்டம் என்றால் ஆயிரம் குறை சொல்வார்கள். இதெல்லாம் கண்டும் கேட்டும் அலுத்த ஒன்று. இது ஏதும் பெரிய குறைபாடு இல்லை. நல்ல சொல்லை எடுத்து ஆளவேண்டுவது ஒரு கலைக்களஞ்சியத்தின் கடமைகளில் ஒன்று. புரியாத சொல்லை ஆளவேண்டும் என்பதில்லை, சற்றி விளங்காத சொல்லாக இருந்தால் அதனை தக்க வழிகளில் விளக்கிப் பயன்படுத்த வேண்டும். இன்று எல்லோரும் அவர் இதை ரொம்ப லைக் பண்ணுவார் என்று சொல்வதால், விரும்புவார் (அவருக்கு இது மிகவும் பிடிக்கும்) என்னும் சொல்லாட்சிகளையே விட்டுவிடலாமா? மேலும் சில சொற்களை அகராதி கொண்டு அறிந்தால் தவறில்லை. --C.R.Selvakumar 20:07, 9 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

சிகிச்சை என்பதை விட்டுவிட்டுப் பண்டுவம் என்பதையே பயன்படுத்த வேண்டும் என்று சொன்னால் கூட நான் தவறென்று சொல்ல மாட்டேன். ஆனால் அவ்வாறான சொற்களின் அறிமுகத்துக்கான இடம் விக்கிபீடியா அல்ல. நாம் ஒரு பதினைந்து பேர் இங்கே பங்களிக்கிறோம். பயன்படுத்துவோர் ஒர் ஆயிரம் இருக்கலாம். இப்போதைக்கு எந்த பெரிய மாற்றத்தையும் நாம் விக்கிபீடியா மூலம் உருவாக்கிவிட முடியாது.

புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்த காலத்தில் தூய தமிழ்ப் பிரயோகம் தொடர்பில் அதிக அக்கறை எடுத்தார்கள். புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் பல வடசொற்களுக்கான தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைக்கும் சிறு நூலொன்றையும் வெளியிட்டது. (உண்மையில் புலிகளின் அத்தகைய பணிகள் தொடர்பில் அதிகம் வெளியே தெரிய வரவில்லை. அவர்கள் தம் உத்தியோகபூர்வ இதழ்களான விடுதலைப் புலிகள், சுதந்திரப் பறவைகள் (மகளிர் அணி) என்பவை தவிர செய்திகளுக்கு ஈழநாதம், இலக்கியத்துக்கு வெளிச்சம், மாணவர்களுக்கு சாளரம், அறிவியலுக்கு ஓர் இதழ் (பெயர் ஞாபகமில்லை), உலக விடயங்களைத் தொகுத்து நிறைய மொழிபெயர்ப்புக்களுடன் உலக உலா, ஆசிரியர்களுக்கு விளக்கு என நிறைய இதழ்களை வெளியிட்டார்கள். இவற்றை விட வேறும் ஓரிரண்டு இருக்கலாம். எல்லாம் நல்ல தமிழில். இது பதிப்புப் பணி மாத்திரமே. இவற்றை விட மரம் நடுமை முதல் சிக்கன அடுப்பு வரை நிறைய நடந்தன. வெளியுலகத்துக்குத் தெரிந்தவை சண்டைகள் மட்டும்தான்)

அவர்கள் பெயர்ப் பலகைகளை எல்லாம மாற்ற வைத்தார்கள். stores என்பவையெல்லாம் களஞ்சியம் ஆகின. புத்தகசாலை பொத்தகசாலை ஆனது. பாண் வெதுப்பி என்றும் bakery வெதுப்பகம் என்றுமாகின. இவற்றில் களஞ்சியம், வெதுப்பகம் என்பவை பரவலாகப் பயன்பட்டதுடன் எல்லோரும் விளங்கிக் கொள்வனவாகவுமிருந்தன. இதற்கான காரணம் அவர்களால் பரந்தளவில் அந்தச் சொற்களை அறிமுகப் படுத்தக் கூடியதாக இருந்தமைதான்.

ஓர் உதாரணத்துக்கே இதனைக் கூறினேன். இத்தகைய பரந்த அறிமுகம் விக்கிபீடியா மூலம் இப்போதைக்குச் சாத்தியமில்லை. ஈழத்திலும் தமிழகத்திலும் விக்கிபீடியா பெருமளவில் பயன்படுவதுமில்லை. ஆனால் பயன்படும் காலம் அதிக தொலைவிலில்லை. அவ்வாறு பயன்படுத்தும் போது விளங்கிக் கொள்ளக் கூடிய சொற்களையே பயன்படுத்தி நாம் விக்கிபீடியாவை உருவாக்க வேண்டும்.

ஆனால் அருகிவரும் நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்த விக்கிபீடியா நல்ல இடம். விக்சனரியில் யாரும் மினக்கெட்டுத் தேடிப் பார்க்க மாடார்கள். ஆனால் விக்கிக் கட்டுரையொன்றை வாசிக்கும்போது அந்த நல்ல தமிழ்ச் சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் அது மிகவும் வினைத்திறனுடையதாயிருக்கும். ஆதலால் செல்வாவின் பரிந்துரையான அடைப்புக்குறிக்குள் தூய தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்தல் என்பதையே நானும் பரிந்துரைக்கிறேன். கோபி 12:33, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

இக்கட்டுரையின் தலைப்பு பால்வினை நோய்கள் என்பதாக இருப்பது பொருத்தமானது. அந்தத் தலைப்பில் ஏற்கனவே ஒரு கடுரை உள்ளது. கட்டுரைகள் இணைக்கப்படும்போது முக்கியத்துவம் கருதி இந்தப் பேச்சுப் பக்கமும் நகர்த்தப்பட வேண்டும். கோபி 19:37, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாலியல்_நோய்கள்&oldid=754235" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாலியல் நோய்கள்" page.