பேத்ரோ கலூங்சோத்

பேத்ரோ கலூங்சோத் (Pedro Calungsod)(c. 1654[1] – 2 ஏப்ரல் 1672) ஒரு பிலிப்பீய கத்தோலிக்கரும், மறைபணியாளரும் ஆவார். இவர் தனது கத்தோலிக்க நம்பிக்கைக்காக 1672ஆம் ஆண்டு குவாம் தீவில் தனது 17 அல்லது 18ஆம் அகவையில் கொல்லப்பட்டார். இவரின் முயற்சியால் பலர் அத்தீவில் மனம் மாறினார்கள் என்பர்.

புனித
பேத்ரோ கலூங்சோத்
மறைப்பணியாளர், மறைசாட்சி
பிறப்புசுமார் 1655
செபு, பிலிப்பீன்சு
இறப்பு2 ஏப்ரல் 1672[1]
குவாம்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்5 மார்ச் 2000, புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகர் by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
புனிதர் பட்டம்21 அக்டோபர் 2012
திருவிழா2 ஏப்ரல்[2]
சித்தரிக்கப்படும் வகைமறைசாட்சியரின் ஓலை, ஈட்டி, கத்தி, திருமறைச்சுவடி, கத்தோலிக்க செபமாலை, கிறிஸ்து பெயராக்கம், சிலுவை
பாதுகாவல்பிலிப்பீய இளைஞர், பீட சிறார்கள், பிலிப்பீன்சு, குவாம், செபு உயர்மறைமாவட்டம்

இவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 5 மார்ச் 2000இல் அருளாளர் பட்டம் அளித்தார்.

வாழ்க்கைக் குறிப்புகள்

தொகு

பேத்ரோ கலூங்சோத் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சிலவே உள்ளன. அக்குறிப்புகளும் இயேசு சபையைச் சார்ந்த தியேகோ லூயிசு சான் விட்டோரசு என்பவர் மறைச்சாட்சியாக இறந்த வரலாற்றைக் கூறும் ஏட்டில்தான் காணப்படுகின்றன.

கலூங்சோத் பிலிப்பீன்சு நாட்டின் சேபு (Cebu) என்னும் தீவில் பிறந்தார் என்னும் அவர் பேசிய மொழி செபுவானோ (Cebuano) என்றும் தெரிகிறது. அவர் சுமார் 1665இல் பிறந்திருக்க வேண்டும். அவருடைய திருமுழுக்குப் பற்றிய ஆவணமும் கிடைக்கவில்லை. தந்தை தியோகோவுக்குத் துணையாளராக கலூங்சோத் செயல்பட்டார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. கலூங்சோத் ஒரு வேதியராக (Catechist) பணியாற்றினார். அவருக்கு 12-15 வயது ஆனபோது அவர் தந்தை தியோகோவுடன் வேதியராகப் பணிசெய்யத் தொடங்கினார்.

1668இல் மறைப்பணி செய்வதற்காக குவாம் (Guam) தீவுக்குச் சென்றபோது தந்தை தியோகோ தம்மோடு தம் துணைவரான கலூங்சோத் என்பவரையும் கூடவே அழைத்துச் சென்றார். எசுப்பானிய மறைப்பணியாளர் பலரும் அங்கு உழைத்தனர். அவ்வமயம் குவாம் தீவு சேபு மறைமாவட்டத்தின் பகுதியாக இருந்தது.

மறைப்பணியாளரின் செயல்பாட்டைச் சிலர் எதிர்த்தனர். 1672, ஏப்பிரல் 2ஆம் நாள் ஒரு குழந்தைக்குத் திருமுழுக்கு வழங்கச் சென்றபோது எதிரிகள் ஒன்றுசேர்ந்து, தந்தை தியோகோவையும் அவருடைய துணையாளர் பேத்ரோ கலூங்சோதையும் ஈட்டிகளால் தாக்கினர். இளம் வயதினரான பேத்ரோ அந்தத் தாக்குதலிலிருந்து எளிதாகத் தப்பியிருப்பார். ஆனால் தந்தை தியேகோவைத் தனியே விட்டுவிட அவருக்கு மனம் இசையவில்லை. அவர்கள் கையில் ஆயுதமும் இல்லை.

கலூங்சோதின் நெஞ்சை ஈட்டி ஊடுருவியது. காயமுற்று தரையில் வீழ்ந்தார் கலூங்சோத். கிராவோ என்னும் எதிரி ஓடிச்சென்று கைவாளை உருவி கலூங்சோதின் தலையைக் கொய்தார். தரையில் விழுந்துகிடந்த தந்தை தியேகோவால் கலூங்சோதைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் தம் கையில் இருந்த சிலுவையை எடுத்து கலூங்சோதுக்கு ஆசி வழங்கி பாவமன்னிப்பு அளித்தார். கலூங்சோதின் உயிர் பிரிந்தது.

இறந்த இருவரின் உடல்களையும் இழுத்து, கடற்கரைக்குக் கொண்டுசென்றனர் எதிரிகள். அவர்களது கால்களில் பெருங்கற்களைக் கட்டி, படகில் ஏற்றிக் கடலினுள் சென்று, அங்கு அவ்வுடல்களை வீசிவிட்டனர். அவ்வுடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.[3]

பேத்ரோ கலூங்சோத் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படல்

தொகு

2012, அக்டோபர் 21ஆம் நாள், அகில உலக மறைபரப்பு ஞாயிறன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பிலிப்பீன்சு நாட்டவரான பேத்ரோ கலூங்சோத் என்னும் மறைச்சாட்சியாளருக்கு புனிதர் பட்டம் அளித்து வழங்கினார். அவ்விழா உரோமை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தையின் தலைமையில் நிகழ்ந்தது.[4]

அந்நாளில் கீழ்வரும் எழுவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது:

  • பேத்ரோ கலூங்சோத் (17ஆம் வயதில் கிறித்தவ நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்ட பிலிப்பீனோ மறைச்சாட்சி)
  • கத்தேரி தேக்கக்விதா (அமெரிக்க முதற்குடி மக்களிடமிருந்து வரும் முதல் புனிதர்
  • மேரியான் கோப் (ஹவாயி இராச்சியத்தில் தொழுநோயாளருக்குப் பணிபுரிந்த பிரான்சிஸ்கு சபைப் பெண்துறவி)
  • ஜாக் பெர்த்யூ (மடகாஸ்காரில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்த இயேசு சபைத் துறவி - 19ஆம் நூற்றாண்டு)
  • கார்மென் சால்லெஸ் இ பராங்குவேராஸ் (எசுப்பானிய நாட்டுப் பெண் துறவி; குழந்தைகளுக்குக் கல்வியறிவு அளிக்க ஒரு துறவற சபையை 1892இல் நிறுவியவர்)
  • ஜொவான்னி பட்தீஸ்தா பீயாமார்த்தா - 1900இல் ஒரு துறவற சபையை நிறுவிய இவர் இத்தாலியின் பிரேஷியாவில் கத்தோலிக்க அச்சகத்தையும் வெளியீட்டு நிறுவனத்தையும் ஏற்படுத்தினார்)
  • அன்னா ஷேஃபர் (19ஆம் நூற்றாண்டு செருமானியப் பொதுநிலைப் பெண்மணி. இவர் கொதிகலத்தில் விழுந்ததால் ஏற்பட்ட புண்கள் காரணமாக வாழ்நாள் முழுதும் துன்புற்றவர். நோய்நொடிகளால் துன்புறுவோருக்கு நம்பிக்கையளிக்கும் ஒருவர்)

புனிதர் பட்ட நிகழ்ச்சியின் சிறப்புக் கூறுகள்

தொகு
  • 2012, அக்டோபர் 21ஆம் நாள் நிகழ்ந்த புனிதர் பட்டமளிப்பு விழாவில் 80 ஆயிரத்திற்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.
  • புனிதர் பட்டம் பெற்ற எழுவருள் பேத்ரோ கலூங்சோத் மிகவும் இளையவர். அவருக்கு 17 வயது நடக்கையில் அவர் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டுக் கொல்லப்பட்டார்.
  • பிலிப்பீன்சு நாட்டிலிருந்து புனிதர் பட்டம் பெற்ற இரண்டாம் நபர் கலூங்சோத். அந்நாட்டின் முதல் புனிதர் லொரேன்சோ ரூயிஸ். அவர் 1637இல் சப்பானில் கொல்லப்பட்டார். அவர் 1987, அக்டோபர் 17ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
  • புனிதர் பட்ட நிகழ்ச்சியின்போது மிக அதிக எண்ணிக்கையில் பங்கேற்றவர்கள் பிலிப்பீன்சு நாட்டவர்களே. நாடுபெயர்ந்து வாழும் பிலிப்பீனோ மக்கள் பெரும் எண்ணிக்கையில் உரோமை நகரிலும் இத்தாலியின் பல பகுதிகளிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தம் கைகளில் கொடிகளை ஏந்தி, மகிழ்ச்சி ஆரவாரத்தோடு புனிதர் பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
  • புனிதர் பட்ட நிகழ்ச்சியின்போது பிலிப்பீன்சு நாட்டு செபு (Cebu) பிரதேசத்தவரான கலூங்சோத் என்பவரின் சொந்த மொழியான செபுவானோவிலும் (Cebuano) இறைவேண்டல் நிகழ்ந்தது.

படக்காட்சி

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Blessed Pedro Calungsod By Emy Loriega / The Pacific Voice
  2. http://www.vatican.va/roman_curia/pontifical_academies/cult-martyrum/martiri/009.html
  3. கலுங்சோதின் வாழ்க்கைக் குறிப்புகள்
  4. புனிதர் பட்டமளிப்பு நிகழ்ச்சி

ஆதாரங்கள்

தொகு
  • Pedro Calungsod Bisaya, Prospects of a Teenage Filipino by Msgr. Ildebrando Jesus Alino Leyson
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேத்ரோ_கலூங்சோத்&oldid=3054901" இலிருந்து மீள்விக்கப்பட்டது