பொய்கைநாடு கிழவன்

சோழப் பேரசின் அரசு அலுவலர்

பொய்கைநாடு கிழவன் (இயற்பெயர் : ஆதித்தன் சூரியன்) என்பவர் இராஜராஜ சோழன் காலத்தில் சோழர் அரசில் அதிகாரியாக இருந்தவர் ஆவார். இவர் அக்காலத்தின் சோழ நாட்டின், இராசேந்திர சிங்கவளநாட்டின், பொய்கை நாடு என்ற பகுதியைச் சேர்ந்தவர். இதனால் இவரது ஊரின் பெயராலேயே பொய்கைநாடு கிழவன் என்று அழைக்கபட்டார். இவருக்கு தென்னவன் மூவேந்தவேளான் என்ற பட்டம் சூட்டபட்டடு இருந்தது. தஞ்சையில் இராஜராஜ சோழனால் இராசராசேச்சரம் கட்டப்பட்ட பிறகு இராசராசசோழனால் ஸ்ரீகார்யம் செய்கின்ற அலுவலில் (கோயில் நிர்வாக அலுவலர்) இவர் நியமிக்கப்பட்டிருந்ததாக அறியப்பெறுகிறது.

பணிகள் தொகு

திருச்சோற்றுத்துறை கோயில் மகாதேவர்க்கு பொய்கைநாடு கிழவனால் பொன்னின் வெண்சாமரைக்கை, பிள்ளையாருக்கு, இராசந்தி விளக்கு, நொந்தா விளக்கு போன்ற பல பொருட்களையும் நிபந்தங்களையும் பொய்கைநாடு கிழவன் அளித்தார். மேலும் திருச்சோற்றுத் துறையில் தேவாரம் பாடுவதற்கு நிபந்தம் அளித்தார்.

தஞ்சை இராசராசேச்சுரத்தில் ஸ்ரீகாரியம் செய்கின்ற அலுவலை பொய்கைநாடு கிழவன் ஏற்றுக்கொண்டதும் தேவார மூவருடைய படிவங்களைத் தஞ்சை இராசராசேச்சுரத்தில் எழுந்தருளுவித்து அவற்றுக்கு அணிகலன்களும் அளித்தார். மேலும் சிறுத்தொண்டர், மெய்ப்பொருள் நாயனார் போன்றோருடைய படிவங்களையும் செய்வித்து எழுதருளுவித்தார். பொய்கைநாடு கிழவன் தன் அரசனிடத்தில் மிக்க அன்பு உடையவர் என்பதால் இராசராசனது படிவத்தையும், அவனது பெருந்தேவியாகிய ஒலோகமாதேவியார் படிவத்தையும் தஞ்சைப் பெரிய கோயிலில் எழுந்தருளுவித்ததார்.[1]

குறிப்புகள் தொகு

  1. வேங்கடராமையா, சோழர் கால அரசியல் தலைவர்கள் நூல், பக்கம் 61-75, பதிப்பு பிப்ரவரி, 1977 கட்டுரை, பொய்கைநாடு கிழவன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்கைநாடு_கிழவன்&oldid=3717958" இலிருந்து மீள்விக்கப்பட்டது