பொலனறுவைக்காலக் கட்டிடக்கலை

நிஸ்ஸங்கலதா மண்டபம் பொலனறுவைக் காலப்பகுதியில் நிஸ்ஸங்கமல்ல மன்னனால் அமைக்கப்பட்ட பௌத்த மதம் சார்ந்த கட்டிடம் ஆகும். இதன் காரணமாக இம்மண்டபத்தினை நிஸ்ஸங்கலதா மண்டபம் என அழைப்பர். இம் மண்டபத்தின்; சில பகுதிகளே தற்போது காணப்படுகின்றது. இதன் விசேட அம்சமாக காணப்படுவது மண்டபத்தில் காணப்படும் தாமரைத் தண்டின் வடிவில் அமைந்துள்ள கலைநயம்மிக்க 8 தூண்களும் ஆகும். இவை ஒவ்வொன்றும் 7அடி உயரமுடையவை. இத்தூண்கள் கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் போது தாமரைத் தண்டைப் போல் சிறிதாகச் செல்கின்றமையைக் காணலாம். தூணின் இடையிடையே தாமரை இலை போன்ற வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. தாமரைத் தண்டின் அமைப்பில் உயிரோட்டமாக அமைவதற்காக சிற்பி இத்தூண்களை மூன்று வளைவுகளுடன் திரிபங்க நிலையில் அமைந்ததைப் போல் செதுக்கியுள்ளார். கற்றூண்களின் போதிகைப் பகுதியில் தாமரைப் பூ வடிவ அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் கவனமாகவும் தெளிவாகவும் உள்ளத்தைக் கவரும் வகையில் கருங்கற்களில் தாமரைத் தண்டு செதுக்கப்பட்டுள்ளமையானது மிகவும் கடினமான வேலையாகும். அதனைச் சிற்பி நளினமான முறையில் சிறப்பாகச் செதுக்கியுள்ளார். கூரையானது தற்போது காணப்படவில்லை. அது மரத்தால் அமைக்கப்பட்டதால் காலத்தால் அழிவடைந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. நிஸ்ஸங்கலதா மண்டபத்தின் தரையானது கற்கள் பதிக்கப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் அடிப்பாகத்தில் மனித உருவங்கள் வணங்குவது போன்று செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் நடுவில் வணங்குவதற்காக நீர்க்குமிழி வடிவ தாதுகோபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இம் மண்டபத்தில் சிம்மாசனம், காவற்கல், சந்திரவட்டக்கல் என்பனவும் காணப்படுகின்றது. இம்மண்டபத்தினைச் சுற்றி கல்வேலியொன்று அலங்கரிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. அதன் நீளம் 43அடியும் அகலம் 28 அடியும் ஆகும். இக் கல்வேலியானது தூண்களாலும் குறுக்குத் தூண்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. இவை சாஞ்சி தூபி, பாரூத் கல்வேலிகளின் அமைப்பில் காணப்படுகின்றது. நிஸ்ஸங்கலதா மண்டபமானது நிஸ்ஸங்கமல்ல மன்னனால் சமய சம்மந்தமான தேவைக்காகவே கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. முக்கியமாக நிஸ்ஸங்கமல்ல மன்னன் பிரித் கேட்கும் (தர்மபோதனையைக்) இடமாக பயன்படுத்தியுள்ளான் என பேராசிரியர் செனரத் பரணவிதான அவர்கள் ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். இங்குள்ள தூண்களிலும் சுருங்கைகளிலும் காணப்படும் குறிப்புகளின் படி இவற்றை அறியக்கூடியதாக இருப்பதாகக் கூறுகின்றார். மேலும் இவர் பொலனறுவைக்காலத்தில் அக்காலச் சிற்பிகள் பல்வேறு விதமான நிர்மாணங்களையும் தோற்றுவிக்க முயன்றுள்ளனர் என்பதை அறியக்கூடியதாகவுள்ளதாக கூறுகின்றார். இலங்கையில் கலை வண்ணம் செய்த பொலனறுவைக்கால சிற்பிகளின் உன்னதமான கலைத்திறனை எடுத்துக் காட்டும் நிர்மாணமாகவும் இலங்கையில் காணப்படும் கருங்கல்லாலான மண்டபமாகவும் நிஸ்ஸங்கலதா மண்டபம் காணப்படுகின்றது.

பொலனறுவைத் தூபராம ஆலயம் பொலனறுவைக்காலக் கட்டிடங்கள் பெரியளவில் தென்னிந்திய திராவிட கட்டிடக்கலையைப் பின்பற்றியதாக அமைந்துள்ளன. தென்னிந்திய இந்துசமய வழிபாட்டு அம்சங்களையும் ஆலய அமைப்பு முறையையும் ஒத்தனவாக இவை காணப்படுகின்றன. இதற்குக் காரணம் 10ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அநுராதபுர இராட்சியத்தைக் கைப்பற்றிக் கொண்ட சோழ வம்சத்தினர் தமது இராசதானியாக பொலனறுவையைத் தேர்ந்தெடுத்து 50 வருடங்கள் பொலனறுவையில் ஆட்சி செய்தமையாகும். இதனால் நிரந்தரமான தென்னிந்திய சோழ கலாச்சாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சோழ கலாச்சாரத்தின் மூலம் இலங்கையில் ஏற்பட்ட கலாசார மாற்றத்தினால் கலை நிர்மாணம் தொடர்பான விடயத்திலும் அதிக தாக்கம் ஏற்பட்டுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. இவற்றில் இன்று நன்கு பாதுகாக்கப்பட்ட சிலைமனையாக 12ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட பொலனறுவை தூபராமசிலைமனை காணப்படுகின்றது. இது முதலாம் பராக்கிரமபாகு மன்னனின் (1183 – 1186) அமைச்சர் மகிந்தவினால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. புனித தந்தத்தைப் பாதுகாக்கும் புனித தந்த ஆலயமாக இது அமைக்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. இதன் கட்டிட அமைப்பினை பார்க்கும் போது இதில் வாயில் மண்டபம், அந்தராளம், கர்ப்பக்கிரகம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்ட இக் கட்டிடத்தின் கூரையமைப்பு வில்வடிவில் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சாலபஞ்சிகா என அழைப்பர். கட்டிடத்தின் சுவரின் தடிப்பு 7 அடி (2அ) ஆகும். கருங்கற்களுக்குப் பதிலாக செங்கற்களைக் கொண்டு சுண்ணாம்புக் கலவையால் இந்தச் சுவர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் வெளிச்சுவர்ப் பகுதியில் உள்ள கட்டிட சிற்ப அம்சங்கள் தென்னிந்திய கட்டிட அம்சங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றில் அரைப்புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்ட மிருக உருவங்ளையும், பொறதம் எனப்படும் வெளித்தள்ளிய சிற்ப அம்சங்களையும், சிறிய தூண்களின் மேல் அமைக்கப்பட்ட விமானங்களையும் காணலாம். சுவரில் உள்ள விமான அமைப்புக்களினுள் இந்து, தேவ உருவங்கள் காணப்படுகின்றது. இதிலிருந்து பொலனறுவை ஆலயம் ஓர் இந்து ஆலயத்தின் முழுவடிவத்தையும் கொண்டிருப்பதினைக் காணலாம். ஆனால், ஆலயத்தினுள் அமர்ந்த நிலைப் புத்தர்சிலைகள் உள்ளன. தூபராம ஆலயம் பற்றி பேர்சி பிரவுன் என்னும் ஆங்கிலக் கலைப் புலவர் கூறுகையில் 'தூபராம ஆலயம் சோழர்கள் அமைத்த திராவிட சிற்ப முறையைப் பின்பற்றி திராவிட சிற்ப முறையில் அமைந்திருப்பினும் அமைப்பு முறையில் கருங்கற்களால் கட்டப்படாததினால் வேறுபாடு உள்ளது. இவ்வேறுபாட்டைத் தவிர மற்றெல்லா வித்திலும் தூபராமய ஆலயம் சோழர் முறையைப் பின்பற்றியதாயினும் சோழர் ஆலயங்களின் சிறப்பு அதற்குப் பொருந்தவில்லை' எனக் கூறியுள்ளார்.



விஐயொத்பாய (பராக்கிரமபாகு மாளிகை) இது 1ம் பராக்கிரமபாகுவினால் கட்டப்பட்ட மாளிகையாகும். இதனை வைஐந்தி மாளிகை எனவும் அழைப்பர். சூளவம்சத்தில் இம்மாளிகை அமைப்பு பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. சுவரின் அகலத்தையும் உறுதியையும் நோக்கும் போது இது ஏழு மாடிகள் கொண்ட கட்டிடமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. செங்கற் சுவர்கள் எங்கும் காணாதவாறு இங்கு அகலமுடையன. மேல்மாடியைத் தாங்கி உறுதியாக நிற்கக்கூடியவாறு சுவரினுள் மரக்கட்டைகள் பொருத்தப்பட்டதாக பரணவிதான கூறுகின்றார். மேல் மாடியின் அடித்தளம் சுண்ணாம்பு சேர்த்துக் கட்டப்பட்டுள்ளது. இதன் மத்திய பகுதியில் நூறு அடி நீளமன சற்சதுரக் கட்டிடம் உள்ளது. கட்டிடத்தின் உள் நுழைவதற்கு கிழக்குப் பக்கமாகவும் வாசல் உள்ளது. உள்ளே கட்டிடத்தின் தளத்திற்கு ஒருவகைக் கொங்கிறீட் இடப்பட்டுள்ளது. முன் வாசல் வழியாக நுழையும் போது காணப்படும் உள் மண்டபம் 102 அடி நீளமும் 42 அடி அகலமும் கொண்டது. மரத்தின் மூலம் தாங்கப்பட்ட மறைப்பொன்றும் காணப்படுகின்றது. இதன் தூண்கள் சிதைவடைந்து காணப்படுகின்றது. மேல் மாடிக்கு ஏறும் படிக்கற்கள் கற்களால் கட்டப்பட்டவை. இதனைக் கீழ் மாடியில் காணக் கூடியதாய் உள்ளது. நடு மண்டபத்தைத் தவிர மறறெல்லா மண்டபங்களையும் சுற்றி ஐம்பதிற்கும் அதிகமான களஞ்சிய அறைகள் காணப்படுகின்றது. இவை இரண்டு வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. பொலனறுவைக் காலத்தில் உள்ள ஏனைய கட்டிடங்களை விட சிறப்பினைப் பெற்று விளங்கிய இக் கட்டிடத்தின் பாரிய தோற்றம் பார்ப்போரை வியப்படையச் செய்கின்றது.

மெதிரிகிரிய வட்டதாகே (பொலனறுவை) வட்டதாகே அமைப்புக்களில் மிகச் சிறந்த வட்டதாகேயாக மெதிரிகிரிய வட்டதாகே உள்ளது. இலங்கையில் உள்ள சிற்ப அலங்காரங்கள் பொருந்திய பௌத்த தாபகங்கள் யாவற்றிலும் முதன்மையானது இதுவாகும். 12ம் நூற்றாண்டில் முதலாம் பராக்கிரமபாகுவினால் கட்டப்பட்டது. மெதிரிகிரியா நகரத்திற்கு சுமார் 3 கிலோ மீற்றர் வடக்காக இது காணப்படுகின்றது. இயற்கை வனப்புள்ள சூழலில் பார்ப்பவர் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. மிக உயரமான தளத்தில் வட்டதாகே அமைந்திருப்பதால் கருங்கற் படிகளில் நீண்ட தூரம் ஏறிச் செல்ல வேண்டியுள்ளது. மிகவும் அழகாகச் செதுக்கப்பட்ட நான்கு அமர்ந்த நிலைப் புத்தர் சிலைகள் பிரதான நான்கு பக்கமும் வைக்கப்பட்டு அவற்றிற்கு எதிரே வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உயர்ந்த மேடையமைப்பில் மேல் மூன்று வரிசைகளில் 68 தூண்கள் உள்ளன. இவற்றில் மத்திய தூபியைச் சுற்றி உள்சுற்றில் 17 அடி உயரமான 16 கற்றுண்களும் மத்தியசுற்றில் 16 அடி உயரமான 20 தூண்களும் வெளிச்சுற்றில் 9 அடி உயரமான 32 தூண்களும் காணப்படுகின்றன. இத் தூண்களின் தண்டுப்பகுதி எண்கோண வடிவமானது. இத் தூண்களின் உச்சியமைப்பு அநுராதபுரக்கால தூணின் உச்சியமைப்பினை ஒத்தவை. தூண் வரிசையில் இரண்டாம், மூன்றாம் வரிசை தூண்கள் செங்கற்களால் ஆனவை சொரசொரப்பான கல்லாளான அடித்தளத்தின் மீது இது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இத் தூண்கள் நடுப்பகுதியை நோக்கிச் செல்லச் செல்ல உயர்ந்து செல்கின்றன. இதன் மூலம் கூரையானது சரிவான தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டிருந்துள்ளது என நம்பலாம். கூரையானது இரு பகுதிகளைக் கொண்டதாகவும் அரைக்கோள வடிவமுடையதாகவும் காணப்படுகின்றது. தூண்களுக்கு வெளியே வட்ட வடிவில் செங்கற் சுவர் மறைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறத் தரைக்கு கற்கள் பதிக்கப்பட்டு அவை பதிக்கப்பட்ட இடைப்பகுதித் துவாரங்களில் சுண்ணாம்புக்கற்களால் நிரப்பப்பட்டுள்ளது. இவற்றிற்கு நடுவே 7 அடி உயரமான தாதுகோபத்தின் சிதைவுகளைக் காணக்கூடியதாகவுள்ளது. மெதிரிகிரியாவினுள் நுழைவதற்கான வாயில் வடக்குப் பகுதியில் மட்டுமே உள்ளது. இந்த வாசலில் கைபிடிவரிசை, காவற்கல், சந்திரவட்டக்கல், அலங்காரப் படிகள் என்பன அமைக்கப்பட்டு மிகவும் சிறிய நுட்பம் வாய்ந்த செக்கல்கள் செதுக்கப்பட்டுள்ளது. 27 படிகள் கொண்ட வாசலாக இது உள்ளது. மெதிரிகிரிய வட்டதாகே பிற்காலத்தில் நிஸங்கமல்லனால் புனரமைக்கப்பட்டு சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.





முதலாம் சிவாலயம் பொலனறுவை முதலாம் சிவாலயம் 2ம் பராக்கிரமபாகுவின் காலத்தில் கட்டப்பட்டிருத்தல் வேண்டும் என நம்பப்படுகின்றது. அவ்வரசன் பாண்டியருடன் நல்லுறவு பூண்டு பாண்டிய நாடு சென்று அவர்களிடம் இருந்து புனித புத்ததந்தத்தைப் பெற்று வந்து பொலனறுவையில் அதற்கொரு ஆலயம் அமைந்து ஆட்சி செய்தான் என சரித்திரம் கூறுகின்றது. அந்த புனித தந்த ஆலயமே முதலாம் சிவாலயம் எனக் எண்ணப்படுகின்றது. இதனால் முதலாம் சிவாலயத்திற்கு புத்ததந்த ஆலயம் எனவும் அழைப்பர். 13ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட இச் சிவாலயம் பாண்டிய கட்டிட கலையம்சம் கொண்டது. தனிக்கல்லில் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டிடத்தின் விமானம் செங்கற்களால் கட்டப்பட்டதால் தற்போது உடைந்துள்ளது. சுவர்கள் மாத்திரமே எஞ்சிய நிலையில் உள்ளது. கர்ப்பக்கிரகத்தினதும் அர்த்தமண்டபத்தினதும் மேற்பகுதிகள் காணப்படுகின்றன. மகா மண்டபத்தின் மேற்பகுதி முற்றாக அழிவடைந்துள்ளது. கர்ப்பக்கிரகத்தில் உள்ள சிவலிங்கம் உடைந்தபடியுள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் தேவியின் சிலையொன்றும் உடைந்த நிலையில் உள்ளது. கர்ப்பக்கிரகத்தின் தெற்குப் பகுதியில் தட்ஷிணாமூர்த்தியின் சிலையின் அடிப்பகுதி காணப்படுகின்றது. அத்துடன் அர்த்தமண்டபத்தின் சிலையின் அடிப்பகுதியும் காணப்படுகின்றது. அர்த்தமண்டபத்தின் வாசலில் இருபக்கமும் துவாரபாலகர்களது வடிவங்களின் மேற்பகுதி உடைந்த நிலையில் உள்ளது. இதன் மூலம் 1ம் சிவாலயத்தின் சிற்பவேலைப்பாடுகள் 2ம் சிவாலயத்தின் சிற்ப வேலைப்பாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறப்பாக இருந்துள்ளமையை உணர முடிகின்றது. சிற்ப அடுக்குகள் விரிவாயும் நுண்ணிய வேலைப்பாடு உடையவையாகவும் அமைந்துள்ளது. இங்கு நிரை நிரையாகத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தூண்களின் தலை போதிகை (தாமரை) அலங்காரம் உள்ளது. கற்றூணுடன் கூடிய விமான அலங்காரமும் உள்ளது. இவ்விமானத்தினுள் தெய்வச் சிலைகள் காணப்படுகின்றது. தென் பாண்டிய கட்டிடக்கலையின் பண்புகளைப் பின்பற்றிக் கட்டப்பட்ட இக் கட்டடிடம் அலங்காரம் நுட்பம் நிறைந்ததாகும். வெளிப்புறத்தில் உள்ள ஸ்தம்பங்கள் சோழருக்குப் பின் வந்த கட்டிட மரபையொத்தன. மகாமண்டபத்தின் தெற்கு வாயிலுக்கு முன்பாகவும் தட்ஸிணா மூர்த்திக்கு முன்பாகவும் கருங்கற்களால் அமைந்த மேடைகள் காணப்படுகின்றன. ஆலயத்தின் உப பீடம் (அடித்தளம்) முற்றாய் மண்ணுக்குள் புதைந்துள்ளது.


இரண்டாம் இலக்கச் சிவன் கோயில் பொலனறுவைக்காலக் கட்டிடச் சிதைவுகளில் மிகவும் பழமையானதும் நல்ல நிலையில் காணப்படுகின்றதுமான இந்துசமயக் கட்டிடம் இதுவாகும். 11ம் நூற்றாண்டில் முற்றும் கருங்கல்லில் செதுக்கப்பட்ட இவ்வாலயத்தின் சிகரமும் கருங்கல்லாலேயே அமைக்கப்பட்டுள்ளது. இது இராNஐந்திர சோழனால் தனது தாயாரின் நினைவாக அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதனால் இவ்வாலயத்திற்கு 'வானவன்மாதேவி ஈஸ்வரமுடையார் ஆலயம்' என அழைப்பர். சோழர் தலைநகரமாகிய தஞ்சை மாநகரில் இராஐஇராNஐஸ்வரனால் கட்டப்பட்ட இராNஐஸ்வரம் பிற்காலத்தில் எழுந்த கோயில்களுக்கெல்லம் முன்மாதிரியாக எவ்வாறு அமைந்துள்ளதோ, அதே போல பொலனறுவையில் கட்டப்பட்ட 2ம் இலக்கச்சிவன் கோயில் பிற்காலத்தில் பொலனறுவைக்காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் பௌத்த இந்து சிற்ப ஆலயங்களுக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளது. இவ் ஆலயம் மகா மண்டபம், அந்தராளம், கர்ப்பக்கிரகம் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது. முன்வாசல் சிறியதொன்றாகும். இதன் கல்லால் ஆன கதவு நிலையும் சிறியது. மகா மண்டபம் அழிந்த நிலையில் காணப்படுகின்றது. அதன் அத்திவாரமும் சுற்றுப்பிரகாரத்தின் அத்திவாரமும் காணப்படுகின்றது. பிரகாரச் சுவர்களின் மேல் இருந்த கல் நந்திகள் உடைந்து போயுள்ளன. அர்த்த மண்டபத்தில் உள்ள மேற்பாவுகைக் கற்கள் சில உடைந்துள்ளன. உபபீடமும் மண்ணுக்குள் புதைந்துள்ளது. கர்ப்பக்கிரகத்தின் உட்பகுதியும் சதுரவடிவமானது. இங்கு சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புறம் 20 அடிச் சதுரமாகவும் உட்புறம் 9 ¾ அடிச் சதுரமாகவும் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வெளிப்புறம் 15 அடி 5 அங்குலம் நீளம் 9 அடி 4அங்குல அகலம் உடையது. விமானம் இரண்டு தளங்களையுடையது. முதற் தளத்தின் நான்கு மூலைகளிலும் கர்ணக் கூடுகளும் நடுவில் சாலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கர்ணக்கூடுகளினதும் சாலைகளினதும் கூரைகள் பல்லவர் காலத்துக் கூரைகளை ஒத்தன. சோழர் காலத்துச் சிற்பமுறை பல்லவர் காலத்துச் சிற்பமுறையைப் பின்பற்றி எழுந்தது என்பது பொலனறுவை வானவர்மாதேவி ஈஸ்வரமுடையார் ஆலயத்தையும் மாமல்லபுர கல் இரதங்களையும் ஒப்பு நோக்குபவர்க்கு நன்கு புலப்படும்.