போன்டஸின் ஆறாவது மித்ரிடேட்ஸ்

அரசர்களின் அரசன்

ஆறாவது மித்ரிடேட்ஸ் அல்லது பேரரசர் ஆறாவது மித்ரிடேட்ஸ் எனவும் அறியப்படும் இவர், போன்டஸ் ராஜ்ஜியம் மற்றும் வட அனாடொலியா பகுதியில் உள்ள சிறிய ஆர்மேனியா பகுதிக்கும் (இன்றைய துருக்கி) அரசராக கி.மு. 120 முதல் 63 வரை இருந்தார். பேரரசர் மித்ரிடேட்ஸ் அன்றைய ரோமானிய பேரரசின் வலிமைமிகுந்த மற்றும் வெற்றிகரமான எதிரியாக இன்றளவும் அறியப்படுகிறார். ரோமானிய பேரரசின் மூன்று பெரும் தளபதிகளான லூசியஸ் கொர்னீலியஸ் சுல்லா, லூசியஸ் லிசினியஸ் லுகுல்லஸ் மற்றும் கென்னியஸ் பாம்பீயஸ் மக்னஸ் ஆகியோருடன் மித்ரிடேட்டிக் போர்களில் போரிட்டவர் பேரரசர் மித்ரிடேட்ஸ்.அவர் போன்டஸ் ராஜ்ஜியத்தின் மிகப்பெரிய ஆட்சியாளராய் அழைக்கப்படுகிறார்.

குடும்பம் மற்றும் ஆரம்ப வாழ்க்கை தொகு

பேரரசர் மித்ரிடேட்ஸ் பாரசீக மற்றும் கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளவரசர் ஆவார். பாரசீக அரசர்களான மகா சைரஸ், மகா டரியஸ் மற்றும் மகா அலெக்சாந்தரின் தளபதிகளும் பின்னால் அரசர்களான முதலாம் ஆன்டிகோனஸ் மொனோஃப்டால்மஸ் மற்றும் முதலாம் செலூக்கஸ் நிக்காத்தர் ஆகியோரின் வம்சாவளியில் இருந்து வந்தவர் தான் பேரரசர் ஆறாவது மித்ரிடேட்ஸ்.மித்ரிடேட்ஸ் சினோப் பகுதியில் உள்ள பான்டிக் நகரில் பிறந்தார். அவர் போன்டஸ் ராஜ்யத்தில் வளர்க்கப்பட்டார். பேரரசர் ஆறாவது மித்ரிடேட்ஸ், ஐந்தாவது மித்ரிடேட்ஸ் மற்றும் ஆறாவது லாவோடிஸ் ஆகியோருக்கு முதல் மகனாக பிறந்தார். இவரது தந்தையான அரசர் ஐந்தாவது மித்ரிடேட்ஸ் போன்டஸ் ராஜ்ஜியத்தின் முன்னால் அரசராக இருந்த முதலாம் பார்னேஸஸ் மற்றும் அவரது மனைவியான நைஸா ஆகியொருக்கு மகனாக பிறந்தார். ஆறாவது மித்ரிடேட்ஸின் தாயான ஆறாவது லாவோடிஸ் ஒரு செலூசிட் இளவரசியாவார். இவர் செலூசிட் மன்னரான நான்காம் ஆண்டியோக்கஸ் எப்பிபேனஸ் மற்றும் அவரது மனைவியும் சகோதரியுமான நான்காம் லாவோடிஸ் ஆகியோரின் மகள் ஆவார்.

ஐந்தாவது மித்ரிடேட்ஸ் சினோப்பில் சுமார் 120 கி.மு. வில் படுகொலை செய்யப்பட்டார். கொலைகாரர்கள் இவருக்கு விருந்தில் விஷம் கொடுத்து கொன்றனர். ஆறாவது மித்ரிடேட்ஸ், அவரது சகோதரரான மித்ரிடேட்ஸ் க்ரேஸ்டஸ் மற்றும் அவரது தாயான ஆறாவது லாவோடிஸ் தலைமையில் போண்டஸ் ராஜ்ஜியத்தில் கூட்டாட்சி நடைபெற்றது. ஆறாவது மித்ரிடேட்ஸ், அவரது சகோதரரான மித்ரிடேட்ஸ் க்ரேஸ்டஸ் இருவருக்கும் அரசாட்சி செய்யும் வயதில்லை என்பதால் அவர்களது தாய் ஆறாவது லாவோடிஸ் ஆட்சியின் அனைத்து அதிகாரத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டார். ஆறாவது லாவோடிஸின் ஆட்சி 120 கி.மு. முதல் 116 கி.மு. வரை இருந்தது. ஆறாவது லாவோடிஸ் ஆறாவது மித்ரிடேட்ஸை விட அவரது சகோதரரான மித்ரிடேட்ஸ் க்ரேஸ்டஸ்க்கே சாதகமாகயிருந்தார். இந்த ஆட்சியின் போது, ஆறாவது மித்ரிடேட்ஸ் தனது தாயின் சதித்திட்டத்திலிருந்து தப்பித்து மறைந்து சென்றார்.[1] கி.பி. 116 கி.மு. மற்றும் கி.மு. 113 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் போன்டஸுக்குத் ஆறாவது மித்ரிடேட்ஸ் திரும்பினார். அவர் தன்னை அரசனாக முடிசூட்டிக்கொண்டார். அவர் தனது தாயையும் சகோதரரையும் அரியணையில் இருந்து நீக்கி, இருவரையும் சிறைப்பிடித்து, போன்டஸின் ஒரே ஆட்சியாளரானார். லாவோடிஸ் VI இயற்கை காரணங்கள் காரணமாக சிறையிலேயே இறந்தார். மித்ரிடேட்ஸ் க்ரேஸ்டஸும் சிறையில் இறந்திருக்கலாம், அல்லது தேச துரோகத்திற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். அரசரான ஆறாவது மித்ரிடேட்ஸ் தனது தாய்க்கும் சகோதர்க்கும் அரச மரியாதையுடன் இருதி சடங்குகளைச் செய்தார்.

ஆரம்ப கால ஆட்சி தொகு

பேரரசர் மித்ரிடேட்ஸ் கறுப்பு கடல் மற்றும் அனடோலியாவில் தனது ஆதிக்க சக்தியை உருவாக்கும் நோக்கத்தை கொண்டிருந்தார். அவர் முதலில் கோல்கிஸ் எனும் பகுதியை வென்றார். கோல்கிஸ் என்பது கருப்புக் கடலின் கிழக்கில் இருந்த ஒரு பகுதி. இது கி.மு 164 க்கு முன்னர் ஒரு சுதந்திர ராஜ்ஜியமாக இருந்தது. பின்னர் இவர் போன்டிக்கின் புல்வெளிப்பகுதியில் தனது மேலாதிக்கத்தில் கொண்டுவருவதற்காக ஸ்கைத்தியன் அரசரான பலாகசுஸுடன் போரிட்டார்.

மித்ரிடேடிக் போர்கள் மற்றும் மித்ரிடேட்ஸின் மரணம் தொகு

இப்போர்கள் பேரரசர் மித்ரிடேட்ஸ் ரோமானிய பேரரசுடன் சண்டையிட்ட மூன்றுப் பெரும் போர்களைக் குறிப்பிடுகிறது. இப்போர்களில் தான் ரோமானிய பேரரசின் மூன்று பெரும் தளபதிகளான லூசியஸ் கொர்னீலியஸ் சுல்லா, லூசியஸ் லிசினியஸ் லுகுல்லஸ் மற்றும் கென்னியஸ் பாம்பீயஸ் மக்னஸ் ஆகியோருடன் போரிட்டார் பேரரசர் மித்ரிடேட்ஸ். முதல் மித்ரிடேடிக் போர் (88-84 கி.மு.) சேனட் எனப்படும் மந்திரிகளின் சபையின் போர் அறிவிப்புடன் தொடங்கியது.இந்தப் போர் ரோமானிய வெற்றியுடன், 85 கி.மு. இல் டார்டனோஸ் உடன்படிக்கையுடன் முடிந்தது.[2] இரண்டாம் மித்ரிடேடிக் போரில் ரோமானிய படைகள் லூசியஸ் லிசினியஸ் முரேனாவைத் தளபதியாகக் கொண்டு போரிட்டது. இப்போரில் ரோமானிய தோல்வியிக்கு பின்னர் முடிவுக்கு வந்தது. மூன்றாவது போரில் லூசியஸ் லிசினியஸ் லுகுல்லஸும் அவருக்கு பின்னர் கென்னியஸ் பாம்பீயஸ் மக்னஸும் ரோமானிய படைக்கு தளபதிகளாக இருந்தனர். இந்தப் போரில் (63 கி.மு. இல்) ரோமானியர்கள் வெற்றியடைந்தனர். பேரரசர் மித்ரிடேட்ஸ் தோல்வியின் காரணாமாக தற்கொலை செய்துக்கொண்டார்.

மேற்கோள்கள் தொகு