மங்கோலியப் பேரரசின் பிரித்தல்
மங்கோலியப் பேரரசின் பிரித்தலானது கி.பி. 1259ல் தியவோயு கோட்டை முற்றுகையின் போது மோங்கே கான் இறந்ததிலிருந்து ஆரம்பித்தது. டொலுய் குடும்ப உறுப்பினர்களிடையே உயர்ந்த கானின் பதவிக்காகப் போர் ஏற்பட்டது. இது, பெர்கே-ஹுலாகு போர்[1][Full citation needed] மற்றும் கயிடு-குப்லாய் போர் காரணமாக மங்கோலியப் பேரரசின் மேல் இருந்த உயர்ந்த கான் என்ற பதவியின் அதிகாரம் குறைந்தது. பேரரசானது தன்னாட்சி கொண்ட கானேடுகளாகப் பிரிந்தது. வடமேற்கில் தங்க நாடோடிக் கூட்டம், மத்தியில் சகதை கானேடு, தென்மேற்கில் இல்கானேடு மற்றும் கிழக்கில் தற்கால பெய்ஜிங்கைத் தலைநகராகக் கொண்ட யுவான் அரசமரபு எனப் பிரிந்தது. எனினும் யுவான் பேரரசர்கள் ககான் (உயர்ந்த கான்) என்னும் பட்டத்தைப் பெயரளவில் பயன்படுத்தினர். இந்த நான்கு கானேடுகளும் தங்களுக்கென்று தனி விருப்பங்கள் மற்றும் நோக்கங்களைப் பின்பற்றின. தனித்தனி காலகட்டங்களில் வீழ்ந்தன.
மங்கோலியப் பேரரசின் பிரிவுகள் | |
நாள் | கி.பி. 1259 - 1294 |
---|---|
அமைவிடம் | மங்கோலியப் பேரரசு |
பங்கேற்றோர் | இல்கானேடு, யுவான் வம்சம், சகதை கானேடு, தங்க நாடோடிக் கூட்டம் |
விளைவு | மங்கோலிய சாம்ராச்சியம் நான்கு தனித்தனி கானேடுகளாக உடைந்தது |
அடுத்த கான்
தொகுமோங்கே கானின் தம்பி ஹுலாகு கான் சிரியா மீதான தனது வெற்றிகரமான ராணுவ படை எடுப்பிலிருந்து விலகிச் சென்றார். பெரும்பாலான தனது படைகளுடன் முகான் என்ற இடத்திற்கு பின் வாங்கிச் சென்றார். தனது தளபதி கித்புகா தலைமையில் சிறிய அளவிலான படையினரை மட்டுமே விட்டுச் சென்றார். கிறித்தவ சிலுவைப்போர் வீரர்கள் மற்றும் முஸ்லிம் அடிமை வம்சத்தவர்கள் மங்கோலியர்களை மிகப்பெரிய ஆபத்தாக அறிந்த காரணத்தால் மங்கோலிய இராணுவம் பலமின்றி இருந்த இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தங்களுக்குள் ஒரு அசாதாரண ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.[2]
1260 இல் அடிமை வம்சத்தவர்கள் எகிப்திலிருந்து முன்னேறினார். ஏக்கர் என்ற கிறித்தவ ஆதிக்க பகுதிக்கு அருகில் முகாமிட அனுமதிக்கப்பட்டனர் மற்றும் தங்கள் ராணுவத்திற்கு தேவையான பொருட்களையும் பெற்றுக் கொண்டனர். அயின் ஜலுட் யுத்தத்தில் கித்புகாவின் படைகளுடன் கலிலீ என்ற இடத்திற்கு சற்றே வடக்கில் போரிட்டனர். மங்கோலியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கித்புகா கொல்லப்பட்டார். இந்த முக்கியமான யுத்தம் மேற்கு எல்லையில் மங்கோலிய விரிவாக்கத்தின் முடிவாக அமைந்தது. ஏனெனில் இந்த யுத்தத்திற்கு பிறகு மங்கோலியர்கள் சிரியாவை தாண்டி எந்த ஒரு முக்கியமான ராணுவ முன்னேற்றங்களையும் அடையவில்லை.[2]
பேரரசின் மற்றொரு பகுதியில் ஹுலாகு மற்றும் மோங்கேயின் மற்றொரு சகோதரரான குப்லாய் கான் சீனாவின் ஹுவாய் ஆற்றுக்கு அருகில் பெரிய கானின் இறப்பைப் பற்றி அறிகிறார். தலைநகருக்குத் திரும்புவதை விடுத்து அவர் யங்ட்சே ஆற்றுக்கு அருகில் சீனாவின் உச்சாங் பகுதிக்குள் தனது முன்னேற்றத்தை தொடர்கிறார். அவர்களது தம்பி ஆரிக் போகே, ஹுலாகு மற்றும் குப்லாய் இல்லாத சமயத்தை பயன்படுத்தி தலைநகரத்தில் பெரிய கான் என்ற பட்டத்தை தனக்கே பெற்றுக்கொள்கிறார். அனைத்து குடும்ப கிளைகளின் பிரதிநிதிகளும் கரகோரத்தில் நடந்த குறுல்த்தாயில் அவரை தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர். இதை அறிந்த குப்லாய் கான் கைபிங் என்ற இடத்தில் தானும் ஒரு குறுல்த்தாய்க்கு அழைப்பு விடுக்கிறார். அங்கே வட சீனா மற்றும் மஞ்சூரியாவில் இருந்த மூத்த இளவரசர்கள் மற்றும் பெரிய தளபதிகள் ஆரிக் போகேவுக்கு எதிராக குப்லாய்க்கு ஆதரவாக தங்களது நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.
உள்நாட்டுப் போர்
தொகுகுப்லாய் மற்றும் அவரது சகோதரர் ஆரிக் போகேவின் படைகளுக்கு இடையில் யுத்தம் நடைபெற்றது. மோங்கேயின் முன்னால் நிர்வாகத்திற்கு விசுவாசமான படைகளும் ஆரிக் போகேவுக்கு ஆதரவாக இருந்தன. குப்லாயின் ராணுவம் எளிதாக ஆரிக் போகேவின் ஆதரவாளர்களை நீக்கியது. தெற்கு மங்கோலியாவில் நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் குப்லாய்க்கு மற்றுமொரு பிரச்சனையானது அவரது பெரியப்பா சகதையின் வழித்தோன்றல்களின் வடிவில் வந்தது.[3][4][5] குப்லாய் தனக்கு விசுவாசமான சகதை குடும்ப இளவரசனான அபிஷ்காவை சகதை ஆட்சிப் பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுப்பினார். ஆனால் ஆரிக் போகே அபிஷ்காவை கைது செய்து கொன்று விட்டார். தனது ஆளான அல்குவை அரியணையில் ஏற்றினார். குப்லாயின் புதிய நிர்வாகம் மங்கோலியாவில் இருந்த ஆரிக் போகேவின் பகுதிகளுக்கு உணவுப்பொருட்களை செல்லவிடாமல் தடுத்து பஞ்சத்தை ஏற்படுத்தியது. கரகோரம் எளிதாக குப்லாயிடம் வீழ்ந்தது. ஆனால் ஆரிக் போகே 1261 இல் அதை மீண்டும் கைப்பற்றினார்.[3][4][5]
மங்கோலியப் பேரரசின் தென் மேற்கில் இல்கானேட்டின் ஹுலாகு தனது சகோதரர் குப்லாய்க்கு விசுவாசமாக இருந்தார். ஆனால் 1262 இல் பேரரசின் வட மேற்கில் இருந்த தங்க நாடோடி கூட்டத்தின் ஆட்சியாளரும் அவர்களது ஒன்று விட்ட தம்பியுமன பெர்கேவுடன் சண்டை ஆரம்பமானது. சூச்சியின் வழிதோன்றிய இளவரசர்களின் சந்தேகத்திற்குரிய மரணங்கள், போரில் கிடைத்த பொருட்கள் சமமாக பகிர்ந்து அளிக்கப்படாத தன்மை, மற்றும் ஹுலாகு முஸ்லிம்களைப் படுகொலை செய்தது ஆகியவை பெர்கேவின் கோபத்தை அதிகப்படுத்தியது. 1259–1260 இல் ஹுலாகுவின் ஆட்சிக்கு எதிராக சார்சியா ராச்சியத்தின் கலகத்தை ஆதரிக்கும் முடிவை பெர்கே பரிசீலனை செய்தார்.[1][Full citation needed] மேலும் தெற்கே எகிப்திய அடிமை வம்சத்தவர்களுடன் ஹுலாகுவுக்கு எதிராக கூட்டணியை ஏற்படுத்தினார் மற்றும் குப்லாயின் போட்டியாளரான ஆரிக் போகேவையும் ஆதரித்தார்.[6]
பிப்ரவரி 8, 1264 இல் ஹுலாகு இறந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹுலாகுவின் ஆட்சிப் பகுதிகள் மீது படையெடுக்க பெர்கே நினைத்தார். ஆனால் வழியிலேயே இறந்தார். சில மாதங்களுக்குப் பிறகு சகதை கானேட்டின் அல்கு கானும் இறந்தார். குப்லாய் புதிய இல்கானாக ஹுலாகுவின் மகனான அபகாவை அறிவித்தார். அபகா வெளிநாட்டு கூட்டணிகளை ஏற்படுத்த முயற்சித்தார். முக்கியமாக எகிப்திய அடிமை வம்சத்தவர்களுக்கு எதிராக ஐரோப்பியர்களான பிராங்குகள் மற்றும் மங்கோலிய கூட்டணி போன்றவற்றை ஏற்படுத்த முயற்சித்தார். குப்லாய் படுவின் பேரனான மோங்கே தெமுரை தங்க நாடோடி கூட்டத்தின் தலைவனாக முன்மொழிந்தார்.[7] ஆகஸ்ட் 21, 1264 இல் சங்டுவில் இருந்த குப்லாயிடம் ஆரிக் போகே சரணடைந்தார்.[8]
நான்கு கானேடுகளாக பிரிதல்
தொகுகுப்லாய் கான் யுவான் அரசமரபை நிறுவிய செயல் மங்கோலியப் பேரரசின் பிரிதலை வேகமாக்கியது. மங்கோலியப் பேரரசு யுவான் அரசமரபு, தங்க நாடோடிக் கூட்டம், சகதை கானேடு மற்றும் இல்கானேடு என நான்கு கானேடுகளாக பிரிந்தது. 1304 இல் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்படிக்கை பெயரளவில் யுவான் அரசமரபின் ஆதிக்கத்தை மற்ற மேற்கு கானேடுகள் மீது நிறுவியது. ஆனால் இந்த ஆதிக்கம் முந்தைய ககான்கள் செலுத்திய ஆதிக்கத்தை போல் இல்லை. எல்லை தாக்குதல்கள் போன்ற சண்டைகள் இந்த கானேடுகளுக்குள் தொடர்ந்தன. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக 1310 களில் ஏற்பட்ட ஏசன் புகா-அயுர்பர்வதா போரைக் குறிப்பிடலாம். நான்கு கானேடுகள் ஒவ்வொன்றும் தனித் தனி மாநிலங்களாக செயல்பட்டன மற்றும் பல்வேறு நேரங்களில் வீழ்ந்தன.
யுவான் அரசமரபு
தொகு1264 இல் மங்கோலியப் பேரரசின் தலைநகரை கன்பலிக்கிற்கு மாற்றிய குப்லாய் கானின் முடிவிற்கு பல்வேறு மங்கோலியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே ஆரிக் போகேவின் போராட்டம் என்பது பேரரசின் மையத்தை மங்கோலிய தாயகத்திலேயே வைத்திருப்பதாகும். ஆரிக் போகேவின் இறப்பிற்குப் பிறகு இந்தப் போராட்டம் ஒகோடி கானின் பேரனான கைடு மற்றும் நயன் பிரபுவால் தொடர்ந்து நடத்தப்பட்டது.
சாங் அரசமரபை நீக்கியதன் மூலம் குப்லாய் கான் சீனாவை வெல்வதை முழுமை ஆக்கினார். 1274 மற்றும் 1281 இல் யுவான் அரசமரபின் கப்பல்கள் ஜப்பான் மீது படையெடுக்க முயற்சித்தன. ஆனால் இரண்டு படையெடுப்புகளும் தோல்வியில் முடிந்தன. அதிக எண்ணிக்கையிலான மங்கோலிய கப்பல்கள் கமிகசே (தெய்வீக புயல்) என்றழைக்கப்பட்ட கடல் புயல்களால் இரண்டு முறையும் அழிக்கப்பட்டன. யுவான் அரசமரபின் போது சாதாரண மக்கள் கஷ்டங்களை அனுபவித்தனர். எனவே மங்கோலிய வீரர்கள் 1289 இல் குப்லாய்க்கு எதிராக கலகம் செய்தனர். குப்லாய் கான் 1294 இல் இறந்தார். அவருக்குப் பிறகு தெமுர் கான் ஆட்சிக்கு வந்தார். தெமுர் கான் கைடுவுக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்தினார். அப்போர் 1301 இல் கைடு இறக்கும் வரை தொடர்ந்து நடந்தது. அயுர்பர்வதா புயந்து கான் 1312 இல் ஆட்சிக்கு வந்தார். 1313 இல் யுவான் அரசமரபுக்கு ஆட்சிப் பணித் தேர்வு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.[9]
1350 களில் சிவப்பு தலைப்பாகை கலகம் என்றழைக்கப்பட்ட கலகம் சீனாவில் தொடங்கியது.[10] 1368 இல் மிங் அரசமரபால் யுவான் அரசமரபு தூக்கி எறியப்பட்டது. கடைசி யுவான் பேரரசர் தோகோன் தெமுர் வடக்கு நோக்கி இங்சாங்குக்கு தப்பித்து ஓடினார். அங்கு 1370 இல் இறந்தார். வடக்கு யுவான் அரசமரபு என்று அழைக்கப்பட்ட யுவான் அரசமரபின் எஞ்சிய வீரர்கள் மங்கோலிய தாயகத்திற்கு பின்வாங்கினர். அங்கிருந்து மிங் சீனாவை அவர்கள் எதிர்த்தனர்.
தங்க நாடோடிக் கூட்டம்
தொகுதங்க நாடோடி கூட்டமானது சூச்சியின் மகன் படு கானால் 1243 இல் நிறுவப்பட்டது. வோல்கா பகுதி, உரல் மலைகள், கருங்கடலுக்கு வடக்கே இருந்த புல்வெளிகள், ஃபோர்-காக்கேசியா, மேற்கு சைபீரியா, ஏரல் கடல் மற்றும் இர்டிஷ் வடிநிலம் ஆகிய பகுதிகளை தங்க நாடோடிக் கூட்டம் தன்னகத்தே கொண்டிருந்தது. மேலும் ருஸ் இளவரச நாடுகள் தங்க நாடோடிக் கூட்டத்திற்கு துணை நாடுகளாக இருந்தன.
தங்க நாடோடிக் கூட்டத்தின் தலைநகராக ஆரம்பத்தில் சராய் படுவும் பிற்காலத்தில் சராய் பெர்கேவும் இருந்தன. படுவின் வழித்தோன்றல்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டைகளால் இப்பேரரசு வலிமை இழந்தது. கசன் கானேடு, அஸ்ட்ரகான் கானேடு, கிரிமிய கானேடு, சைபீரிய கானேடு, பெரிய நாடோடிக் கூட்டம், நோகை நாடோடிக் கூட்டம் மற்றும் வெள்ளை நாடோடிக் கூட்டம் என பல்வேறு பகுதிகளாக பதினைந்தாம் நூற்றாண்டில் இது பிரிந்தது. ஒருங்கிணைந்த ருஸ் ஆனது 1552 இல் கசனின் கானேட்டையும், 1556 இல் அஸ்ட்ரகான் கானேட்டையும் மற்றும் 1582 இல் சைபீரிய கானேட்டையும் கைப்பற்றியது. 1783 இல் உருசியப் பேரரசு கிரிமிய கானேட்டை கைப்பற்றியது.
சகதை கானேடு
தொகு1266 இல் சகதை கானேடு பிரிந்து கொண்டது. நடு ஆசியா, பல்காசு ஏரி, கஷ்கரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜெடைசு ஆகிய பகுதிகளை இது கொண்டிருந்தது. மேற்கில் நிலையான வாழ்க்கை வாழ்ந்த திரான்சோக்சியானா (மா வரா'உன்-நர்) மற்றும் கிழக்கில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மொகுலிஸ்தான் என இரண்டு பகுதிகளாக இது பிரிந்தது. 16ம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை அதன் சில பகுதி மக்கள் மங்கோலிய மொழியையே பேசியதாக கூறப்படுகிறது.
பர்லா இன போர் பிரபுவான தைமூரின் (1395–1405) காலத்தில் மொகுலிஸ்தான் வலிமையடைந்தது. 1395 இல் தைமூர் தங்க நாடோடி கூட்டத்தின் கானான தோக்தமிசை தோற்கடித்தார். அவரை ஃபோர்-காக்கேசியா பகுதியில் இருந்து வெளியேற்றினார். தைமூர் அங்கோராவுக்கு அருகில் துருக்கிய சுல்தானின் ராணுவத்தை தோற்கடித்து அழித்தார். இந்நிகழ்வின் காரணமாக பைசாந்தியப் பேரரசு துருக்கியை வெல்வது அரை நூற்றாண்டுக்கு தாமதப்படுத்தப்பட்டது. தைமூரின் பேரரசு அவர் இறந்த உடனேயே வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
தைமூரின் பேரன் உளுக் பெக் (1409–1449) திரான்சோக்சானியாவை ஆண்டார். அவரது ஆட்சிக் காலத்தில் திரான்சோக்சானியாவின் வணிகம் மற்றும் பொருளாதாரம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை அடைந்தன. 1429 இல் அவர் சமர்கந்துக்கு அருகில் ஒரு வானியல் ஆய்வகத்தை அமைத்தார். மேலும் அவர் சிஜ்-இ-சுல்தானி என்ற வானியல் புத்தகத்தையும் எழுதினார். அப்புத்தகத்தில் வானியல் சம்பந்தமான கோட்பாடுகள் அடங்கியிருந்தன. 1000 நட்சத்திரங்கள் வளிமண்டல கோளத்தில் அவற்றின் துல்லியமான இடங்களுடன் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தன.
மொகுலிஸ்தான் ஒயிராட்களுடன் வணிக பாதைகளுக்காக நீண்ட காலத்திற்கு சண்டையிட்டது. 1530 இல் ஒயிராட்களால் தோற்கடிக்கப்பட்டது. காபூலின் ஆட்சியாளரான தைமூரின் வழிவந்த பாபர் 1526 இல் பெரும்பாலான இந்தியாவை வென்றார். முகலாயப் பேரரசை நிறுவினார். 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் முகலாய பேரரசு பல்வேறு சிறு மாநிலங்களாக சிதறுண்டது. 1858 இல் பிரித்தானிய பேரரசால் அதன் பிந்தைய தலைநகரம் கைப்பற்றப்பட்டது.
இல்கானேடு
தொகுஹுலாகுவின் வழித்தோன்றல்களால் ஆளப்பட்ட இல்கானேடு 1256 இல் உருவாக்கப்பட்டது. இது ஈரான், ஈராக், டிரான்ஸ் காக்கேசியா, கிழக்கு அனத்தோலியா மற்றும் மேற்கு துருக்கிஸ்தான் ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. இல்கானேட்டின் ஆரம்ப கால ஆட்சியாளர்கள் அதிகமாக திபெத்திய பௌத்த மதத்திற்கு மாறிய போதும் இல்கான் கசனின் (1295–1304) பதவி ஏற்பிற்கு பிறகு மங்கோலிய ஆட்சியாளர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். 1300 இல் கசனின் ஆணைப்படி மங்கோலிய வரலாற்று ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் ரஷித்-அல்-தின் ஹமாதனி, சமி அல்-தவரிக்கை (சுடுர் உன் சிகுல்கன், நாளாகமத்தின் தொகுப்பு) எழுத ஆரம்பித்தார். அது 1311 இல் இல்கான் ஒல்ஜெயிடுவின் (1304–1316) ஆட்சிக் காலத்தில் எழுதி முடிக்கப்பட்டது. மங்கோலிய வரலாற்று ஆசிரியர் போலட் சின்சன் எழுதிய ஆல்டன் டெப்டெர் ஆனது சமி அல்-தவரிக்கை எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்தது. அபு சயித்தின் (1316–1335) இறப்பிற்குப் பிறகு இல்கானேடு வேகமாக பல்வேறு மாநிலங்களாக சிதறுண்டது. அம்மாநிலங்களில் முக்கியமானது ஜலைர் அரசமரபால் ஆளப்பட்ட பகுதிகளாகும். அவர்கள் ஜலைர் இனத்தை சேர்ந்த செங்கிஸ்கானின் தளபதி முகாலியின் வழித்தோன்றல்கள் ஆவர்.
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 L. N.Gumilev, A. Kruchki. Black legend
- ↑ 2.0 2.1 Morgan. The Mongols. p. 138.
- ↑ 3.0 3.1 Wassaf. p. 12.[Full citation needed]
- ↑ 4.0 4.1 Jackson. Mongols and the West. p. 109.
- ↑ 5.0 5.1 Barthold. Turkestan. p. 488.
- ↑ Barthold. Turkestan Down to the Mongol Invasion. p. 446.
- ↑ Prawdin. Mongol Empire and Its Legacy. p. 302.
- ↑ Weatherford. p. 120.
- ↑ The Mongol Empire and Its Legacy, by Reuven Amitai, David Orrin Morgan, p267
- ↑ The Cambridge history of China, Volume 7, pg 42