மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்பு (1306)

மங்கோலியர்களின் இந்திய படையெடுப்புகளின் ஒரு பகுதி

1306 ஆம் ஆண்டு சகதை கானேட்டின் ஆட்சியாளரான துவா 1305 ஆம் ஆண்டின் மங்கோலிய தோல்வியை பழிதீர்க்க இந்தியாவிற்கு ஒரு படையை அனுப்பினார். படையெடுத்து வந்த ராணுவத்தில் கொபெக், இக்பால்மண்ட் மற்றும் தை-பு ஆகியவர்களால் தலைமை தாங்கப்பட்ட மூன்று பிரிவுகள் இருந்தன. அவர்களது முன்னேற்றத்தை தடுக்க தில்லி சுல்தானக ஆட்சியாளரான அலாவுதீன் கல்ஜி மாலிக் கபூர் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். மாலிக் கபூருக்கு துணையாக மாலிக் துக்ளக் போன்ற பிற தளபதிகள் இருந்தனர். இந்த யுத்தத்தில் தில்லி இராணுவம் தீர்க்கமான வெற்றியை பெற்றது. பல்லாயிரக்கணக்கான படையெடுப்பாளர்கள் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டு மங்கோலியர்கள் தில்லிக்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது அடிமைகளாக விற்கப்பட்டனர்.

மங்கோலியர்களின் இந்திய படையெடுப்பு, 1306
மங்கோலியர்களின் இந்திய படையெடுப்புகள் பகுதி
நாள் 1306
இடம் இரவி ஆற்றங்கரை
தீர்க்கமான தில்லி சுல்தானாக வெற்றி
பிரிவினர்
சகதை கானேடு தில்லி சுல்தானகம்
தளபதிகள், தலைவர்கள்
  • கொபெக்
  • இக்பால்மண்ட்
  • தை-பு
  • மாலிக் கபூர்
  • மாலிக் துக்ளக்
  • சனா-இ-பர்கா
  • மாலிக் ஆலம்

இந்த தோல்விக்கு பிறகு மங்கோலியர்கள் மீண்டும் தில்லி சுல்தானகத்தின் மீது அலாவுதீனின் ஆட்சியின்போது படையெடுக்கவில்லை. இந்த வெற்றியானது அலாவுதீனின் தளபதியான துக்ளக்கின் தைரியத்தை அதிகரித்தது. துக்ளக் தற்கால ஆப்கானிஸ்தானில் இருந்த மங்கோலிய பகுதிகள் மீது தண்டனை கொடுப்பதற்காக பல்வேறு தாக்குதல்களை நடத்தினார்.

பின்புலம்

தொகு

1306 ஆம் ஆண்டிற்கு முன்னர் நடு ஆசியாவின் மங்கோலிய சகதை கானேட்டின் ஆட்சியாளரான துவா இந்தியாவிற்கு பல்வேறு படைகளை தாக்குதல் நடத்த அனுப்பினார். இந்த படையெடுப்புகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியாவின் தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளரான அலாவுதீன் கல்ஜி எடுத்தார். 1305 ஆம் ஆண்டு அலாவுதீனின் படைகள் மங்கோலியர்களுக்கு கடும் தோல்வியைக் கொடுத்தன. இந்த யுத்தத்தில் 20,000 மங்கோலியர்கள் கொல்லப்பட்டனர். இந்த தோல்விக்கு பழி தீர்க்க துவா தனது தளபதி கொபெக் தலைமையில் இந்தியாவிற்கு ஒரு ராணுவத்தை அனுப்பினார்.[1][2]

துவா கானின் தளபதியின் பெயர் பல்வேறுபட்ட வடிவங்களில் இந்திய பதிவுகளில் காணப்படுகிறது. அமீர் குஸ்ரா இந்த தளபதியை "கபக்" என்று அழைக்கிறார். ஜியாவுதீன் பரணி இந்த தளபதியை "குங்" என்று அழைக்கிறார். இசாமி இந்த தளபதியை "குபக்" என்று அழைக்கிறார்.[3] ரீன் கிரவுசெட் என்கிற வரலாற்றாய்வாளரின் கூற்றுப்படி இந்த தளபதி துவா கானின் மகனாகிய கெபெக் ஆவார்.[4] எனினும் கிஷோரி சரண் லால் என்பவர் இந்த கொபெக் வேறு ஒரு நபராக இருக்கலாம் என்று கருதுகிறார். ஏனெனில் இந்திய நூல்களின் படி இந்த தளபதி இந்தியாவில் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.[5]

தில்லி சுல்தானகத்தின் மீது ஒரு பெரும் ராணுவத்துடன் கொபெக் படையெடுத்தார். இரவி ஆறு வரை முன்னேறினார். வரும் வழியில் இருந்த பகுதிகளை சூறையாடினார்.[3] இசாமி என்கிற வரலாற்றாய்வாளரின் கூற்றுப்படி மங்கோலிய இராணுவமானது 1,00,000 வீரர்களை கொண்டிருந்தது. ஆனால் இது ஒரு அப்பட்டமான மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையாகும்.[6]

கொபெக்கின் தோல்வி

தொகு

படையெடுப்பாளர்களுடன் சண்டையிட்ட அலாவுதீன் தனது தளபதி மாலிக் கபூரின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். மங்கோலியர்களை தோற்கடித்தால் தனது வீரர்களுக்கு ஒரு வருட சம்பளத்தை இலவசமாக கொடுப்பதாக அலாவுதீன் உறுதியளித்தார். மாலிக் கபூரின் உதவி தளபதிகளாக மாலிக் துக்ளக், சனா-இ-பர்கா மற்றும் மாலிக் ஆலம் ஆகியோர் சென்றனர்.[3]

வேகமாகப் பயணம் மேற்கொண்டதன் மூலம் தில்லி இராணுவமானது அச்சுறுத்தலுக்கு உள்ளான பகுதியை சீக்கிரமே அடைந்தது. மங்கோலிய ஒற்றர்களை துக்ளக்கின் பிரிவு கண்டறிந்தது. துக்ளக் மாலிக் கபூருக்கு மங்கோலிய ராணுவம் இருந்த இடத்தைப் பற்றி தகவல் தெரிவித்தார். தில்லி ராணுவம் யுத்த களத்திற்கு சென்றது. இந்த இடமானது இரவி ஆற்றங்கரையில் நடைபெற்றதாக அமீர் குஸ்ரா குறிப்பிடுகிறார். [6] ஜியாவுதீன் பரணி இந்த இடத்தை "கெகர்" என்று குறிப்பிடுகிறார். பீட்டர் ஜாக்சன் இந்த இடத்தை ககர் என்று குறிப்பிடுகிறார். இசாமி இந்த இடத்தை "ஹிந்த்-இ-அலி" என்று குறிப்பிடுகிறார். ஃபிரிஷ்டா இந்த இடத்தை "நிலப்" என்று குறிப்பிடுகிறார்.[3]

இரண்டு ராணுவங்களும் ஒன்றுக்கொன்று எதிர்புறமாக நீண்ட நேரத்திற்கு நின்றன. யாரும் தாக்குதலை தொடங்க மனமின்றி இருந்தனர். கடைசியாக கொபெக் தாக்குதலை தொடங்கினார். மாலிக் கபூரின் வீரர்கள் சிதறினர். எனினும் மாலிக்கபூர் தனது வீரர்களை ஒன்றுபடுத்தி மங்கோலிய ராணுவத்தை தோற்கடித்தார். தில்லி வீரர்களால் கொல்லப்படும் நிலைக்கு வந்த கொபெக் கைது செய்யப்பட்டார்.[7]

மற்ற மங்கோலிய பிரிவுகள்

தொகு

கொபெக்கின் பிரிவில் இருந்த சில வீரர்கள் இக்பால்மண்ட் மற்றும் தை-பு தலைமையிலான பிற மங்கோலிய பிரிவுகளில் சேர்ந்தனர். அவ்வீரர்கள் தில்லி ராணுவத்தால் துரத்தப்பட்டனர்.[8] இக்பால்மண்ட் மற்றும் தை-பு ஆகியோர் தங்களது படைகளுடன் தெற்கு திசையில் தற்கால ராஜஸ்தானில் உள்ள நகவூர் என்ற இடத்திற்கு சென்றனர்.[3] மாலிக் கபூர் மற்றும் மாலிக் துக்ளக்கால் தலைமை தாங்கப்பட்ட தில்லி இராணுவமானது அவர்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. கொபெக்கின் தோல்வியைப் பற்றி கேட்டறிந்த இக்பால்மண்ட் மற்றும் தை-பு ஆகியோர் சிந்து ஆற்றை கடந்து தப்பி ஓடினர்.[7] அவர்களை துரத்திய தில்லி ராணுவம் பெரிய எண்ணிக்கையிலான மங்கோலியர்களை கொன்றது மற்றும் கைது செய்தது.[8]

அமீர் குஸ்ராவின் பதிவுகளின் படி கொபெக், இக்பால்மண்ட் மற்றும் தை-பு ஆகியோர் ஒரே படையெடுப்பின்போது இருந்த மூன்று வெவ்வேறு பிரிவுகளின் தளபதிகள் ஆவர். எனினும் பிற்காலத்தில் எழுதிய வரலாற்றாளரான ஜியாவுதீன் பரணியின் கூற்றுப்படி மூன்று வெவ்வேறு தளபதிகள் இந்தியா மீது மூன்று வெவ்வேறு தருணங்களில் படையெடுத்தனர். குங் (கொபெக்) என்ற தளபதி கெகர் என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் மற்றொரு மங்கோலிய இராணுவமானது பெயரிடப்படாத ஒரு தளபதியின் கீழ் சிவாலிக் பகுதியை சூறையாடியது. ஆனால் திரும்பும் வழியில் தோற்கடிக்கப்பட்டது. அந்த ராணுவம் பெயரிடப்படாத ஒரு ஆற்றின் கரையில் தோற்கடிக்கப்பட்டது.[9] இக்பால்மண்ட் தலைமையிலான மூன்றாவது மங்கோலிய ராணுவம் அமீர் அலி என்று அழைக்கப்பட்ட இடத்தில் தோற்கடிக்கப்பட்டது.[10] பிற்கால வரலாற்றாளர்களான நிஜாமுதீன் மற்றும் ஃபிரிஷ்டா ஆகியோர் பரணியின் கூற்றை பயன்படுத்த ஆரம்பித்தனர். உதாரணமாக ஃபிரிஷ்டாவின் கூற்றுப்படி கொபெக் மற்றும் இக்பால்மண்ட் ஆகியோர்களின் படையெடுப்புகள் இரண்டு வெவ்வேறு படையெடுப்புகள் ஆகும். மேலும் அவர் இக்பால்மண்ட், காசி மாலிக் துக்ளக் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.[10]

வரலாற்றாளர் கிஷோர் சரண் லால் என்பவர் குஸ்ராவின் பதிவுகளை துல்லியமானவை என்று நம்புகிறார். ஏனெனில் அவர் அலாவுதீனின் வாழ்நாளின் போது இவற்றை எழுதினார். மேலும் லால், பரணியின் பதிவுகளை துல்லியமற்றவை என்று ஒதுக்குகிறார். ஏனெனில் அவரது பதிவுகள் பிற்காலத்தில் எழுதப்பட்டன. பரணி தான் கூறும் மூன்று வெவ்வேறு படையெடுப்புகளை பற்றி வருடம் மற்றும் தில்லியின் தளபதிகள் போன்ற தகவல்களை தனது நூல்களில் கொடுக்கவில்லை.[10] மேலும் வரலாற்று ஆதாரங்கள் கொபெக்கின் படையெடுப்பு தான் அலாவுதீனின் ஆட்சியின்போது நடத்தப்பட்ட கடைசி மங்கோலிய படையெடுப்பு என்று நமக்கு உணர்த்துகின்றன. பரணியின் காலத்தில் வாழ்ந்த வரலாற்றாய்வாளரான இசாமி கொபெக்கின் படையெடுப்பிற்குப் பிறகு நடத்தப்பட்டதாக எந்த ஒரு மங்கோலிய படையெடுப்பையும் குறிப்பிடவில்லை. துவா கான் 1306-1307 இல் இறந்தார். அதன் பிறகு சில வருடங்களுக்கு இந்தியா மீது தாக்குதல் நடத்தக் கூடிய அளவிற்கு சகதை கானேடு வலிமையாக இல்லை. உண்மையில் அந்த வருடங்களில் அலாவுதீனின் ஆட்சிப் பகுதியான திபல்பூரின் ஆளுநர் சகதைப் பகுதியில் இருந்த காபூலை சூறையாடினர். இந்த ஆதாரங்கள் அனைத்தும் கொபெக்கின் தோல்விக்குப் பிறகு அலாவுதீனின் ஆட்சியின்போது மங்கோலியர்கள் இந்தியா மீது இரண்டு முறை படையெடுத்தனர் என்று கூறும் பரணியின் கூற்றின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.[11]

வரலாற்றாளர் பீட்டர் ஜாக்சன் பரணி மற்றும் பிற பிற்கால வரலாற்றாளர்கள் குஸ்ராவின் பதிவுகளை தவறாக புரிந்து கொண்டனர் என்று நம்புகிறார்.[1]

பின்விளைவுகள்

தொகு

மங்கோலியர்கள் இந்தியா மீது படையெடுத்த போது இந்தியாவை வென்று இந்திய பகுதிகளில் குடும்பத்துடன் வாழவேண்டுமென்ற எண்ணத்தில் வந்தனர். எனவே தங்கள் வீட்டுப் பெண்கள் மற்றும் குழந்தைகளை தங்களுடன் கூட்டி வந்தனர்.[12] தில்லி சுல்தானாக இராணுவமானது பெண்கள் மற்றும் குழந்தைகளை தோற்கடிக்கப்பட்ட மங்கோலிய வீரர்களுடன் கைதிகளாக்கி தில்லிக்கு கொண்டு வந்தது.[7]

மங்கோலிய தளபதிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மங்கோலியர்கள் கொல்லப்பட்டனர்.[8] இந்த யுத்தம் நடந்த காலத்தில் வாழ்ந்த பாரசீக வரலாற்றாளர் வசப் 60,000 மங்கோலியர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறார். மேலும் அவர் தில்லியின் படவுன் கதவின் முன்னர் மங்கோலியர்களின் மண்டை ஓடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு கோபுரத்தை அலாவுதீன் கட்ட ஆணை இட்டதாக கூறுகிறார். எதிர்கால சந்ததியினருக்கு ஒரு எச்சரிக்கையாக இதை அலாவுதீன் செய்ததாக அவர் கூறுகிறார்.[13] ஜியாவுதீன் பரணி தனது தரிக்-இ-ஃபிருஸ் ஷாகி (1357) என்ற நூலில் அந்த கோபுரமானது தற்போதும் பார்க்கக்கூடிய வகையில் நின்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.[14]

16ம் நூற்றாண்டு வரலாற்றாளர் ஃபிரிஷ்டாவின் கூற்றுப்படி மங்கோலிய முகமானது உண்மையில் 50,000-60,000 மக்களை கொண்டிருந்தது. ஆனால் அவர்களில் 3,000-4,000 க்கும் குறைவானவர்களே உயிர் பிழைத்தனர். தப்பிப் பிழைத்த ஆண்களை யானைகளால் மிதித்துக் கொல்ல அலாவுதீன் ஆணையிட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகள் தில்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் விற்கப்பட்டனர்.[7]

அமீர் குஸ்ராவின் கூற்றுப்படி இந்த தோல்வியானது மங்கோலியர்களுக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்தியது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் கஜினி மலைகளுக்கு பின்வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு பயத்தை கொடுத்தது.[15] அலாவுதீன் ஆட்சியின்போது அவர்கள் மேலும் எந்தவொரு படையெடுப்பையும் இந்தியாவின் மீது நடத்தவில்லை. மற்றொருபுறம் அலாவுதீனின் திபல்பூர் பகுதியில் ஆளுநரான துக்ளக் மங்கோலியர்களுக்கு எதிராக ஆக்ரோஷமான கொள்கைகளைப் பின்பற்றினார். அடுத்த சில வருடங்களுக்கு துக்ளக் வருடாவருடம் காபூல், கஜினி, கந்தகார் மற்றும் கர்ம்சிர் ஆகிய மங்கோலிய எல்லைப்பகுதிகளில் அமைந்திருந்த பகுதிகளை சூறையாடினர். இப்பகுதிகளை சூறையாடிய அவர் அங்கு வாழ்ந்த குடிமக்களை கப்பம் கட்ட செய்தார். இவை அனைத்தையும் சகதை கானேட்டிடம் இருந்து எந்தவித எதிர்ப்பையும் பெறாமலேயே அவர் செய்தார்.[11] அமீர் குஸ்ரா தனது துக்ளக்-நாமா என்ற நூலில் துக்ளக்கின் 20 வெற்றிகளை குறிப்பிடுகிறார். அவற்றில் பெரும்பாலான வெற்றிகள் மங்கோலியர்களுக்கு எதிராக பெறப்பட்டவையாகும். பரணியும் ஒரு கட்டத்தில் லாகூரில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றிருந்த துக்ளக் மங்கோலியர்களை 20 முறை தோற்கடித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயணியான இபின் பட்டுடா முல்தானில் உள்ள ஒரு மசூதியில் இருக்கும் கல்வெட்டு மங்கோலியர்களை 29 முறை துக்ளக் தோற்கடித்ததாக குறிப்பிட்டுள்ளது என்று எழுதியுள்ளார்.[16]

தில்லி தளபதியான ஹஜி பாதர் அலாவுதீனின் மகன் கிஷர் கானுக்கு எழுதிய தேதியிடப்படாத கடிதத்தில் அலாவுதீனின் ஆட்சியானது கஜினி வரை நீண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஒரு குளிர் காலத்தில் கஜினிக்கு ஹஜி பாதரின் ராணுவம் வந்தபொழுது அந்நகர் மற்றும் அதனை சுற்றி இருந்த மங்கோலியர்கள் அலாவுதீனின் தலைமையை ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார். உள்ளூர் ஜமா மசூதியில் வெள்ளிக்கிழமை குத்பாவானது அலாவுதீனின் பெயரில் படிக்கபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.[17]

உசாத்துணை

தொகு