மதன் லால் டிங்கரா

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

மதன் லால் டிங்கரா ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரர். இவர் இங்கிலாந்தில் படிக்கும் போது சர்.வில்லியம் ஹட் கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொன்றார். இவர் நாட்டுப்பற்றுக்காக சர்ச்சிலால் பாராட்டப்பட்டவர்.

இளமைக் காலம் தொகு

இவர் 1883-ஆம் ஆண்டு பிறந்தார். அமிர்தசரசில் MB இன்டர்மீடியட் கல்லூரியில் 1900 வரை படித்தார். பின்னர் லாகூருக்குச் சென்று அரசுக் கல்லூரியில் படித்தார். இவர் 1904-ஆம் ஆண்டு வெளி நாட்டுத் துணியில் சீருடை தைக்க ஆணை பிறப்பித்த பிரின்சிபாலை எதிர்த்ததற்காக கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்பொழுது அவர் MA மாணவர். அவர் இந்திய சுதேசி இயக்கத்தால் கவரப்பட்டார். இந்தியாவின் ஏழ்மை, பஞ்சம் இவை குறித்து ஆழமாகப் படித்தார். சுதந்திரம், சுதேசியம், சுயராச்சியம் இவையே இவற்றிற்கான தீர்வு என்று நினைத்தார். இவர் தொழிலாளியாகப் பணிபுரிந்தபோது தொழிற்சங்கம் அமைக்க இவர் செய்த முயற்சி தடுக்கப்பட்டது. மும்பையிலும் பணியாற்றினார். பின்னர் தமையனார் DR.பியாரிலால் ஆலோசனைப்படி லண்டனில் உள்ள யுனிவர்சிடி காலேஜில் மெக்கானிகல் இஞ்சினியரிங் படிக்கச் சென்றார்.

லண்டனில் சாவர்க்கருடன் தொகு

லண்டனில் டிங்கராவுக்கு வினாயக் தாமோதர் சாவர்க்கர், ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா போன்றோருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களை டிங்கராவின் கடும் உழைப்பு, ஆழ்ந்த தேசப்பற்று கவர்ந்தது. இந்தியா ஹவுஸ், அபினவ் பாரத் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினர் ஆனார். அதைத் தவிர அவருக்குப் பயிற்சியும் கொடுக்கப்பட்டது. குதிராம் போஸ் போன்றோரின் தூக்குத் தண்டனை இவர்களது சுதந்திர உணர்ச்சியைத் தூண்டியது. இந்நிகழ்ச்சி டிங்கரா, வினாயக் தாமோதர் சாவர்க்கர் போன்றவர்களை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் திருப்பியது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

கர்சன் வில்லியின் கொலை தொகு

1909- ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் நாள் மாலை நடைபெற்ற இந்தியன் நேஷனல் அசோஸியேஷன் ஆண்டுவிழாவிற்கு இந்தியர்களும், ஆங்கிலேயர்களும் வந்திருந்தனர். இந்தியாவுக்கான செகரட்டரியான சர்.கர்சன் வில்லி அவரது மனைவியுடன் வந்தார். உடனே டிங்கரா 5 முறை அவரைச் சுட்டார். 4 குண்டுகள் அவரைத் துளைத்தன. சுவாஸ்ஜி லால் காகா என்ற மருத்துவர் கர்சனைக் காப்பாற்ற டிங்கராவைப் பிடித்ததால் அவரை 2 முறை சுட்டதில் அவரும் இறந்தார். தன்னைத் தானே சுடமுயன்று அந்த முயற்சியில் தோல்வியுற்று சிறிய போராட்டத்திற்குப் பிறகு கைதானார்.

தண்டனை தொகு

டிங்கரா தனது செயலுக்காக வருந்தவில்லை என்றும் மனிதாபிமானமற்ற பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க தனது பங்கைச் செய்ததாகவும் குறிப்பிட்டார். சுவாஸ்ஜி லால் காகாவைக் கொல்வது தனது நோக்கம் அல்ல என்றும் கூறினார். அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. " எனது நாட்டுக்காக எனது உயிரை அளிக்க வாய்ப்புக் கிடைத்ததற்காக பெருமைப்படுகிறேன். ஆனால் எங்களுக்கும் காலம் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்றார். அவர் 1909-ஆம் ஆண்டு ஆகஸ்டு 17-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். அவரது தூக்குத் தண்டனை கொடூரமான முறையில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் நீதி மன்றத்தில் கொடுத்த அறிக்கை: தொகு

என்னைப்பாதுகாக்க நான் எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் எனது செயலின் நியாயத்தை நிரூபிக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை எந்த ஆங்கில நீதிமன்றத்திற்கும் என்னைக் கைது செய்யவோ, சிறையிலடைக்கவோ தூக்கிலிடவோ அதிகாரம் கிடையாது. ஜெர்மானியர்கள் இந்த நாட்டை ஆக்ரமித்தால் அதை ஓர் ஆங்கிலேயர் எதிர்த்தால் அது தேசப்பற்று என்றால் ஆங்கிலேயருக்கு எதிரான எனது செயலும் தேசப்பற்றுதான். கடந்த 50 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் 100,000,000 டாலர் செல்வத்தை எடுத்துச் செல்வதன் மூலம் 80 மில்லியன் மக்களைக் கொன்றது ஆங்கிலேயரே. ஜெர்மானியர்கள் இந்த நாட்டை ஆக்ரமிக்க உரிமை இல்லை என்றால் ஆங்கிலேயருக்கு எங்கள் நாட்டை ஆக்ரமிக்க உரிமை இல்லை.

பாராட்டு தொகு

லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை டிங்கரா குறித்து 1909- ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் நாள் அன்று தலையங்கம் எழுதியது. டிங்கராவின் தியாகச் செயல் குறித்து பிரிட்டிஷ் கேபினெட்[தெளிவுபடுத்துக]உறுப்பினர்கள் மரியாதையுடன் கருத்துத் தெரிவித்தனர். இதைப் பின்னாட்களில் ப்ளண்ட் என்பவரிடம் வின்ஸ்டன் சர்ச்சில் தெரிவித்தார். இது ப்ளண்ட் என்பவரின் குறிப்புகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. லாயிட்ஸ் ஜார்ஜ் என்பவர் கூறுகையில் புராண கால கதாநாயகர்கள் போல இவர் 2000 ஆண்டுகளானாலும் நினைவில் இருப்பார் என்கிறார். சர்ச்சில் கூறுகையில் இதுவரை கூறப்பட்ட இது போன்ற தேசப்பற்று மிகுந்த செய்திகளில் இதுவே சிறந்தது என்று குறிப்பிடுகிறார். அவை: எனது அன்னையான எனது தாய் நாட்டிற்கு அளிக்க என்னிடம் இருப்பது எனது இரத்தம் மட்டுமே. எனவே அதை நான் பலிபீடத்தில் அளிக்கிறேன். மீண்டும் அதே அன்னையின் வயிற்றில் பிறந்து அதே அன்னைக்காக உயிர்த்தியாகம் செய்ய விரும்புகிறேன். வந்தே மாதரம்! வழக்கம் போல் காந்தி டிங்கராவின் செயலைக் கண்டித்தார். அவர் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவரது செயல் தவறு என்று கூறிக்கொண்டிருந்தார்.

டிங்கராவின் செயல் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐரிஷ்காரர்களையும் வழி நடத்தியது.

இறுதி மரியாதை தொகு

அவரது உடல் இந்து மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் தற்செயலாக அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 1976- ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது. அது மகாராஷ்டிரா மாநிலத்தில் அகோலா என்னும் இடத்தில் புதைக்கப்பட்டு அவரது பெயரில் சமாதி எழுப்பப்பட்டுள்ளது. பகத்சிங், சந்திரசேகர ஆசாத் போன்ற புரட்சியாளர்கள் வரிசையில் டிங்கராவும் வைத்துப் போற்றப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_லால்_டிங்கரா&oldid=3718081" இலிருந்து மீள்விக்கப்பட்டது