மதுசூதனன் என்ற சொற்பொருள்

இந்து சமயத்தில் மதுசூதனன் என்ற பெயர் விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு நாமங்களில் ஆறாவது பெயர். விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைப் பட்டியலிட்டுத் தோத்திர உருவில் பீஷ்மரால் யுதிஷ்டிரனுக்கு உரைக்கப்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 73-வதாக வரும் பெயர். மதுசூதனன் என்ற சொற்பொருளில் ஒரு படைப்பு வரலாறே பொதிந்திருப்பதாக வியாசரின் மகாபாரதம் சபாபர்வம் 38-வது அத்தியாயம் கூறுகிறது.

ஒரு படைப்பு நெருக்கடி தொகு

படைப்பு என்பது இந்து சமயத்தில் பிரம்மா வின் ஒவ்வொரு பகலிலும் அவரால் ஆற்றப்படும் தொழில். பிரம்மாவின் பகல் முடிந்ததும் ஊழிக்காலம் தொடங்கி எல்லாப் படைப்புகளும் ஆண்டவனிடத்தில் ஒடுங்கிவிடும். ஊழிக்காலம் முடிந்ததும் பிரம்மாவின் அடுத்த பகல் தொடங்கி அவருடைய படைப்புத் தொழிலும் மறுபடியும் இயங்கும். இப்படி ஓர் ஊழிக்காலத்தில் ஆண்டவன் தன் யோகநித்திரையில் ஆழ்ந்திருந்தபோது பிரம்மாவும் தாமரையினுள் செயலற்றிருந்தார். ஊழிக்காலம் முடியும் தறுவாயில் தாமரை அடியில் இருந்த தாமரை இலையின் மேல் தன் காதுகளிலிருந்த நீர்த்துளிகளைத் தெளித்தார். விழித்துக்கொண்ட பிரம்மா சுற்றிப் பிராணவாயுவைத் தூண்டினார். காது அசுத்தத்துடன் கலந்த நீர்த்துளிகள் இறுகி வடிவு பெற்றன.தமோகுணம் தான் முதலில் படைக்கப்பட்டது. தமோகுணமும் நீர்த்துளிகளும் சேர்ந்து இரு வடிவங்களாயின. ஒன்று மிருதுவாகவும் மற்றொன்று கடினமாகவும் உருப்பெற்றன. அவ்வுருக்கள் மது, கைடபன் என்ற இரு அரக்கர்களாக உருப்பெற்று தாமரை இலையிலிருந்து குதித்து வளர்ச்சி பெற்றன. பிரம்மா படைக்கத் தொடங்கினார். முதலில் ஒலியும் வெளியும் உண்டாயிற்று. ஒலி வடிவில் இருந்த வேதங்கள் பிரம்மாவின் முந்திய பகலில் இருந்தபடி அப்படியே வெளியாயின. அவற்றை மதுவும் கைடபனும் திருடி ஒளித்து வைத்துவிட்டனர். ஆண்டவன் ஹயக்ரீவர் என்ற குதிரைமுகக் கடவுளாக அவதரித்து வேதங்களைத் திரும்பக் கொண்டு வந்தார். மதுவும் கைடபனும் கோபம் கொண்டு பிரம்மாவின் இருக்கையான தாமரைக் கொடியை ஆட்டினர். பிரம்மா பயந்தார்.

ஆண்டவனின் லீலை தொகு

யோகநித்திரையிலிருந்து எழுந்த ஆண்டவன் அவ்விரு அரக்கர்களையும் அழிக்க வழி வகுத்தார். 'உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?' என்று அவர்களைக் கேட்டார். அவ்விருவரும் திமிர் பிடித்து அதே கேள்வியைத் திருப்பி ஆண்டவனிடம் கேட்டனர். பகவான் 'உங்கள் அழிவே நான் வேண்டுவது' என்றார். 'ஆடையால் மூடப்பெறாத விண்வெளியில் எங்களைக் கொல்லலாம்' என்றனர். இது நடவாதென அவர்கள் நினைத்தனர் போலும்!

மது-கைடபர்களை அழித்தல் தொகு

ஆண்டவன் தனது விசுவரூபத்தை மனதில் கொண்டார். அதன்படி அவருடைய கால்களிலிருந்து இடுப்பு வரையில் பூமியும் ஆகாயமும் அடங்கிவிடுகின்றன. கால்களுக்கு மேல் இடுப்பு வரையில் விண்வெளிப் பகுதி. அவருடைய தொடைமீதிருந்த ஆடையை விலக்கி அதன்மேல் வைத்து அவர்களை அழித்தார். தொடை மீதிருந்த ஆடையை விலக்கியதும் அது ஆடையால் மூடப்படாத விண்வெளியாகிவிட்டது.இதுவே மது கைடபர்களை அழிப்பதற்கு செய்யப்பட்ட தெய்வலீலை. மது எனும் இவ்வரக்கனை அழித்ததால் அவருக்கு மதுசூதனன் என்று பெயர். 'சூதன' என்ற வடமொழிச்சொல் அழிப்பது என்ற வினைச் சொல்லிலிருந்து உண்டான பெயர்ச் சொல்.

தேவீ மாஹாத்மியத்திலுள்ள இதே கதை தொகு

தேவீ மாஹாத்மியம் என்ற உபபுராணத்தில் முதல் அத்தியாயத்தில் இதே கதை சிறிது மாறுதலுடன் சொல்லப்படுகிறது. அன்னை பராசக்தியின் ஒரு வெளிப்பாடான தாமசீ-மாயா என்ற இருள் அவரிடமிருந்து விலகியதால் ஆண்டவன் யோகநித்திரையிலிருந்து எழுந்தார் என்பது தேவீ மாஹாத்மியத்தின் கூற்று.

மற்றொரு பொருள் தொகு

நமது பொறிகளே ஆண்டவனின் சேவையில் ஈடுபடாவிட்டால் அரக்கர்களுக்கு ஈடாகப் பேசப்படுகின்றன. எந்தப்பொறி விஷயசுகத்தைப் பின்பற்றிச்செல்கிறதோ அதுவே மதுவென்னும் அரக்கன். தனது தெய்வப் பண்புகளால் அடியார்களின் பொறிகளை வசப்படுத்தி அவற்றின் ஈர்ப்புசக்தி வெளிப்பொருட்களில் போகாமல் மாய்க்கும் ஆண்டவனுக்கு மதுசூதனன் என்ற பெயர் தகும்.