மதுரகவி சுவாமிகள்
1846-ஆம் வருடம் தைப்பூரத்தன்று திருவரங்கம் வீரேஸ்வரத்தில் வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பமான அரங்கப் பிள்ளை- ரங்கநாயகி அம்மாள் தம்பதிக்குப் புதல்வனாக பிறந்தார் மதுரகவி சுவாமிகள்.திருவரங்கத்தில் உறையும் அரங்கர் மீது அளவில்லா பிரியம் கொண்டிருந்தார்.[1]
அரங்கன் அருள்
தொகுகிபி 1855 ஆம் வருடம் வைகுண்ட ஏகாதசி காலத்தில், திருவரங்கத்தின் மன்னரான நம்பெருமாள் (உற்சவர்) உலா வரும்போது, மலரால் அலங்கரிக்கப்பட்ட இறையின் அழகில் மனதை பறிகொடுத்த நிலையில் திருமாலுக்கு திருமாலை (இறைவனுக்காக மலர் மாலை தொடுத்தல்) கைங்கர்யம் செய்யவேண்டும் என உறுதிபூண்டார்.
அதற்காக காவிரி கரையை ஒட்டி, வேங்கடாசல ராமானுசதாசர் என்பவரின் திருநந்தவனத்தில் வசித்து வரும் திருநந்தவனக் குடிகள் என்று அழைக்கப்படுகிற ஏகாங்கிகளிடம் (ஏகாங்கி அதாவது, கட்டை பிரம்மச்சாரியாக, திருமண வாழ்வில் ஈடுபடாமல், சிந்தையை அரங்கத்தானிடம் மட்டுமே வைத்து, தினமும் நந்தவனத்தில் பூப்பறிப்பது, பின் அதை மாலையாகத் தொடுப்பது. அவற்றைச் சேகரித்துக் கொண்டு கோயிலில் சேர்ப்பது என வாழ்க்கை முறை கொண்ட இறைவனின் அடியவர்கள்) மாலைகளை தொடுக்கும் கலை கற்றுக்கொண்டார்.
இல்லற வாழ்வு
தொகுமதுரகவி சுவாமிகளுக்குப் பதினேழு வயதில் அவரது பெற்றோர், பெண் பார்க்கத் தொடங்கியபோது தனக்குத் திருமணம் வேண்டாம் என்றும், ஒர் ஏகாங்கியாக அரங்கன் சேவையில் என்றென்றும் தான் திளைத்திருக்கப் போவதாகவும் கூறி தன் திருமணத்திற்கு என்று பெற்றோர் சேர்த்து வைத்திருந்த தொகையான இருநூறு ரூபாயைப் பெற்றுக்கொண்டார். இந்தத் தொகைக்கு பத்து பவுனில் கடலைக்காய் மணி வாங்கித் தாயாருக்கு சார்த்தி அழகுப் பார்த்தார் மதுரகவி. மீண்டும் பெற்றோரிடம் இருந்து தனக்கு வரவேண்டிய சொத்தினை பெற்றுக்கொண்டு. இந்த நந்தவனத்தில் விதம் விதமான பூச்செடிகளை வளர்த்தார்.
வைணவத்தில் பந்தம் பிடிப்போர், கட்டியம் கூறுவோர் போன்றோரை சாத்தாத வைணவர்கள் என்று அழைப்பர். அதாவது, உடலில் பூணூல் சாற்றாதவர்கள். இவர்கள் வசித்து வந்த திருவரங்க வீதி சாத்தாத (சாத்தார) வீதி என்றே அழைக்கப்பட்டு வந்தது. பெருமாளுக்குப் பூமாலைகள் அனுப்பும் உரிமம் துவக்கத்தில் இவர்களிடம்தான் இருந்து வந்தது. பூச்சந்தை வைத்து இந்தத் தர்மப் பணிகளைச் செய்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் நொடித்துப் போக…. இந்தக் கைங்கர்யம் நின்று போய்விடுவதாக இருந்த வேளையில், மதுரகவி சுவாமிகள் ஐயாயிரம் ரூபாயைக் கொடுத்து, அவர்களிடம் இருந்து இந்த உரிமையை எழுதி வாங்கிக் கொண்டார்.
துறவு
தொகுஸ்ரீவானமாமலை ஜீயரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு ஸ்ரீபிள்ளை லோகாச்சார்யா சன்னிதி சாமி ஐயங்காரிடம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற வைணவ நூல்களைக் கற்றறிந்தார். நந்தவனத்தை மேலும் விஸ்தரிக்கும்பொருட்டு வைணவ அன்பர்களின் உதவியோடு சோழமாதேவி கிராமத்தில் சில நிலங்களை வாங்கினார். நந்தவனத்தை அடுத்து சில தோட்டங்களையும் வாங்கி, பூ கைங்கர்யத்தை விரிவுபடுத்தினார்.
திரு(வின்)ப்பணி
தொகுபின்னப்பட்டு போயிருந்த திருவரங்க திருக்கோவிலின் பொன் கூரையையும் புதுப்பிக்க, கிபி 1891-ல் திருவரங்கம் கோயிலில் இருந்த அர்ச்சகர்கள், சுவாமியை அணுக, முதலில் தனக்கு மாலை கைங்கர்யம் அன்றி வேறெதுவும் என்று மறுத்துவிட்டார் மதுரகவி.
அன்றிரவே மதுரகவியின் கனவில் தோன்றி அரங்கன் ஆணையிட மறுநாள் தன் குருநாதரான குவளைக்குடி சிங்கம் ஐயங்காரைச் சந்தித்து விமானத் திருப்பணியையும், அரங்கன் கனவில் வந்த விஷயம் பற்றியும் விவரித்தார். அரங்கன் திருவுளப்படியே திருப்பணியைத் துவக்கி, தன்னுடையதே முதல் உபயம் எனக்கூறி, ஒரு பித்தளைக் குடத்தில் பத்து ரூபாயைப் போட்டு துவங்கிவைத்தார் திரு குவளைக்குடி சிங்கம் ஐயங்கார். ஐந்தே வருடங்களில் தேசம் முழுக்க அலைந்து எண்பதாயிரம் ரூபாய் திரட்டி, விமானத் திருப்பணிகள் நடந்து. கிபி 1903-ல் மிகப் பெரிய குடமுழுக்கும் நடந்தேறியது. அந்தக் காலத்தில் எண்பதாயிரம் ரூபாய் என்பது சாதாரணம் அல்ல என்பதை நினைவில் கொள்க.
முக்தி
தொகுஇதற்கு அடுத்த ஆண்டு (கிபி 1904) குரோதி வருடம் ஐப்பசி மாதம் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின் ஏழாம் நாளன்று, நந்தவன குழாத்திற்கு வழங்கபட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்ட மதுரகவி சுவாமிகள் அன்றைய தினமே இரவு சுமார் பதினொரு மணிக்கு ஆச்சார்யனின் திருவடியை அடைந்தார்.
திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அம்மா மண்டபத்துக்கு அருகில் சுவாமிகளின் திருவரசு (உடல் பள்ளிபடுத்திய இடம்) இன்றும் காணக்கிடைக்கிறது.
தமிழகத்திலேயே திருநந்தவனக்குடி ஒருவருக்காக அவர் அமைத்த நந்தவன வளாகத்திலேயே எழுப்பப்பட்டுள்ள ஒரே சமாதித் திருக்கோயிலாக இதுதிகழ்கிறது
சாதனை
தொகுதனி ஒருவராய் ஐந்தே வருடங்களில் தேசம் முழுக்க அலைந்து எண்பதாயிரம் ரூபாய் திரட்டி, திருவரங்கக் கோயில் விமானத் திருப்பணிகள் நடத்தினார்.
திருவரங்க கோயிலுக்காக பிரமாண்டமாக காவிரிக் கரையை ஒட்டி அம்மா மண்டபத்துக்கு அருகே திருநந்தவனம் அமைத்தார்.
வருடம் முழுவதும் திருவரங்கப் பெருமானுக்கும் தாயாருக்கும் சக்கரத்து ஆழ்வாருக்கும் தேவைப்படும் மாலைகள் மதுரகவி சுவாமியின் நந்தவனத்திலிருந்தே வருகின்றன.
ஆழ்வார்களின் சேவைக்கு இணையாக இந்தத் தொண்டு கோவில் நிர்வாகத்தால் இன்று வரை மதிக்கப்பட்டு வருகிறது.
மதுரகவி சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவையும் திருவரங்கம் கோயிலில் நடந்து வருகிறது. பெருமாளுக்கு மதிய பிரசாதமாக (பெரிய அவசரம் என்பர்) வெள்ளைச் சாதம், ரசம், கீரை, ஊறுகாய் போன்றவை நிவேதனம் செய்யப்படும். இதில் ஊறுகாய்க்காக பெருமாளுக்குத் தினமும் பத்து எலுமிச்சம்பழங்களும் தாயாருக்கு ஐந்து எலுமிச்சம் பழங்களும் நந்தவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.
நந்தவனத்தின் விதிமுறைகள்
தொகுஇந்த நந்தவனத்தில் மலருகின்ற பூக்கள் அனைத்தும் ஸ்ரீரங்கம் அரங்கனுக்கே உரியவை. ஸ்ரீரங்கம் பெருமாளுக்குப் பூத்தொடுக்கும் இப்பணி ஏகாங்கிகள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர். அதனால், இவர்களுக்கு ஊதியம் கிடையாது. தினமும் இரண்டு வேளை உணவு இவர்களுக்கு உண்டு. துளசி, விருட்சி, சம்பங்கி, மாசிப்பச்சை, நந்தியாவட்டை, துளசி, பட்டு ரோஜா, மனோரஞ்சிதம், மகிழம்பூ குருக்கத்தி, பாதிரி என்று எண்ணற்ற பூ வகைகள் நிறைந்த நந்தவனத்தில் தினமும் அதிகாலை வேளையில் சுமார் பத்து ஏகாங்கிகள், மாலை கட்டுதல், பூப்பறித்தல் என தினமும் சுமார் பதினாறு மாலைகள். இரு வேளைகளில் – அதாவது மொத்தம் முப்பத்திரண்டு மாலைகள் திருவரங்கம் செல்கின்றன. உற்சவ நாட்களான சித்திரை, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் நடக்கும் திருவிழாக் காலங்களில் (மொத்தம் 44 நட்கள்) அலங்கார மாலைகள் செல்லும்.
சான்று
தொகுதிருவரங்கம் கோயில் வெளியாண்டாள் சன்னதிக்கு அருகில் மதுரகவி சுவாமிகளைப் பற்றிய வரலாறு. ஒரு கல்வெட்டாக – அவரது சேவையின் சாட்சியாக இன்றைக்கும் இருக்கிறது.
திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அம்மா மண்டபத்துக்கு அருகில் காணப்படும் இந்தத் திருநந்தவனமும் சுவாமிகளின் திருவரசு (உடல் பள்ளிபடுத்திய இடம்), திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.;
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவரங்கம் மார்க்கமாகச் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் மாம்பழச் சாலை வழியாகச் செல்லும்.