மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரால் பாடப்பட்ட இரண்டு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவை: அகநானூறு 170, புறநானூறு 316.
பாடல் தெடரால் பெயர் பெற்ற புலவர்
தொகுஇவரது புறநானூற்றுப் பாடல் 'கள்ளில் வாழ்த்திக் கள்ளில் வாழ்த்தி' என்று தொடங்குகிறது. வல்லாண் கள்ளில் கடையில் உறங்கிக்கொண்டிருப்பானாம். அவனைக் காணும் பாணரை அவன் பேணுவானாம். இந்த வல்லாணைப் புலவர் கள்ளில் கடையத்தனாகக் காட்டுவதால் வெண்ணாகனார் என்னும் இவரது பெயரில் 'கள்ளிற் கடையத்தன்' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது.
அகம் 170 பாடல் சொல்லும் செய்தி
தொகுநெய்தல்நிலத் தலைவி தன் தலைவனை எண்ணிக் காம வயத்தில் அவர்களுடைய உறவைப்பற்றிப் பற்றித் தன் நெஞ்சுக்குக் கூறுகிறாள்.
கானல் கழறாது (எடுத்துரைக்காது)
கழி கூறாது (சான்று சொல்லாது)
தேன் உண்ணும் வண்டுகள் மொழியாது (வாய் பேசமாட்டா)
அலவ! (நண்டே!)
உன்னைக் கவரும் கடற்காக்கை தன் பெடையோடு உறங்கும் நள்ளிரவில் சுறாமீன் உன்னைக் கவரக் கனவு கண்டுகொண்டிருக்கும் வேளையில் நீ வெளியில் வந்து எட்டிப் பார்த்தாய் அல்லவா?
நெஞ்சே!
அவன் நள்ளிரவில் உன்னோடு காம வெள்ளத்தில் இணைந்து நீந்தினான். (சேர்ந்தான்) அது உனக்கு மட்டுந்தான் தெரியும்.
என்ன செய்யப்போகிறாய்?
புறம் 316 பாடல் சொல்லும் செய்தி
தொகு- திணை - வாகை
- துறை - வல்லாண்முல்லை
வல்லமை உள்ள ஆண்மகனின் இருப்புநிலையைக் கூறுவது வல்லாண்முல்லை.
பாணர் ஒருவர் வல்லாண் ஒருவனைக் காணச் செல்கிறார். அன்றைக்கு முதல்நாள் என்ற பாணன் ஒருவனுக்கு அந்த வல்லாண் தன் வாளைப் பணையமாக வைத்துப் பொருளீட்டிக்கொண்டுவந்து கொடுத்தானாம்.
அவன் ஈவதில்லாளனாம். (ஈகை இல்லத்தில் வாழ்பவனாம்) அவனிடம் செல்லும்படி புலவர் மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்துகிறார். சென்றால் பாணனின் மனைவி வள்ளி (வளைந்த) இடுப்பில் அணியத்தக்க என்னும் அணிகலனைத் தருவானாம். உண்ணக் கள்ளும் உணவும் தருவானாம். வேந்தர் விழுமம் உறப் போரிட்டுக் கொண்டுவந்து தருவானாம்.
இப்படி அவனைப்பற்றிச் சொல்லிவிட்டு 'அவன் என் இறைவன்' என்று புலவர் குறிப்பிடுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கானலும் கழறாது | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.