மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 172.
பால் = தூய்மை. பாலாசிரியர் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியர்.
பாடல் சொல்லும் செய்தி
தொகுதோழி தலைவியைத் தலைவன் சொன்ன இடத்தில் விட்டுவிட்டு வந்து தலைவனிடம் சொல்கிறாள்.
குன்ற நாட! நீ அன்பில்லாதவன் என்று எனக்குத் தெரியாமல் போயிற்று. தெரிந்திருந்தால் குறுமகளின் கண்ணும், மேனியும் பசலை பாயாமல் இருந்திருக்கும் - என்கிறாள்.
தலைவனின் குன்றநாடு
- வாரணம் உரறும் (யானை பிளிறும்)
- அருவி தேன்கூட்டோடு கலந்துவந்து இன்னிசை பாடும்.
- கல்லுக் குகையில் 'இம்' என அது வீழும்.
- முன்றத்தில் மூங்கில் செறிந்திருக்கும்.
- கானவன் இரும்பால் வடித்து வைத்தது போன்ற வலிமையான கைகளை உடையவன்.
- அவன் மராஅம் மரத்தில் பதுங்கி நின்றுகொண்டு களிற்றை அதன் முகத்தில் தாக்குவான்.
- அதன் வெண்கொம்பைக் கொண்டுசெல்வான்.
- அதனை அவன் தன் புல் வேய்ந்த குடிசையில் மாட்டிக் காயவைப்பான்.
- பலாப்பழம் பழுத்திருக்கும் முற்றத்தில் தன் சுற்றத்தாருடன் கூடிப் 'பிழி' என்னும் பழச்சாற்று மதுவை அருந்துவான்.
- பின்னர் சந்தன விறகில் சுட்ட ஊன்கறியைக் கொண்டாட்டத்தோடு உண்பான்.
இப்படி மக்கள் வாழும் இடந்தான் தலைவனுடைய குன்றநாடு.