மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் மூன்று உள்ளன. அவை: அகநானூறு 102, 348, நற்றிணை 273 ஆகியவை.

பெயர் விளக்கம்தொகு

இளம்பாலாசிரியன் = இளஞ்சிறுவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியன்
சேந்தன் - இந்தப் புலவர் கூத்தனாரின் தந்தை. சேந்தன் என்னும் பெயர் சேயோனாகிய முருகனைக் குறிக்கும்.

அகநானூறு 102 சொல்லும் செய்திதொகு

இரவில் தலைவிக்காகத் தலைவன் காத்திருக்கிறான். அதனை அறியாதவள் போலத் தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

நாடன் நேற்று வந்தான். இன்று என்ன ஆனான் என்று தெரியவில்லை. ஊர் அலர் தூற்றுகிறது. என் நெற்றி அவனை நினைத்துப் பசந்து கிடக்கிறது. இது என்ன ஆகுமோ தெரியவில்லை - என்கிறாள்.

கானவன் உளைமானைப் போல வலிமை படைத்தவன். தினைக்காவலுக்கு வந்தவன் நன்றாகக் குடித்துவிட்டுக் கழுது என்னும் பரண்மேல் கிடக்கிறான்.

கொடிச்சி தன் கூந்தலை சந்தனப் புகையில் உலர்த்திக்கொண்டு குறிஞ்சிப்பண் பாடுகிறாள். அதனைக் கானவனும் கேட்கவில்லை. தினையை மேயாமல் உறங்கும் யானையும் கேட்டபாடில்லை. இப்படிப்பட்ட நாட்டுத் தலைவன்தான் இந்தப் பாடலின் தலைவன்.

அகநானூறு 348 சொல்லும் செய்திதொகு

நாடனைத் தேறிய என் நெஞ்சம் இனி என்ன ஆகும்? என்று தலைவி தோழியை வினவுகிறாள்.

அரியல்தொகு

பலாச்சுளையையும், இறால் கருவாட்டையும் கலந்து ஊறவைத்த நீர்.

தோப்பிதொகு

அரியலை மூங்கில் குழாயில் ஊற்றிப் புளிக்கவைத்த கள்வகை.

சிலை விளையாட்டுதொகு

தோப்பியைத் தழையாடை உடுத்த குறவர் மகளிர் ஊற்றித் தரத் தர வேண்டிய அளவு பருகிய குறவர் இரவில் தினைப்புனம் காவலுக்குச் செல்லாமையால் யானை தினையைக் கவர்ந்து உண்டதைக்கூடப் பொருட்படுத்தாமல் தம் வில்லாற்றல் வலிமையை ஆராய்ந்துகொண்டு திரிவார்களாம்.

இப்படிக் குறவர் திரியும் நாடன் இந்தப் பாட்டுடைத் தலைவன். இவனை நம்பி என் நெஞ்சு என்ன ஆகப்போகிதோ என்று கூறுகிறாள் இந்தப் பாட்டுடைத் தலைவி.

நற்றிணை 273 சொல்லும் செய்திதொகு

அவன் குன்றநாடன். அவன் குன்றில் யானை நீர் பருகும் சுனையில் பூத்திருக்கும் நீல மலர் போல அவள் கண் பூத்திருக்கிறது. அவன் அவளுக்காகக் காத்திருக்கிறான். அவள் தாய் வேலனை அழைத்து முருகாற்றுப்படுத்தும் விழா நடத்துகிறாள்.

இந்தச் செய்திகளைச் சொல்லித் தோழி அவளோடு(தலைவியோடு) உரையாடிக்கொண்டிருப்பதாக இந்தப் பாடல் சொல்கிறது.