மந்த இணை விளைவு

மந்த இணை விளைவு (Inert Pair Effect) என்பது இடைநிலைத் தனிமங்களைத் தொடர்ந்து வரும் கனமான தனிமங்களில் உள்ள வெளிக்கூட்டு எலக்ட்ரான்கள் பிணைப்பில் பங்கெடுக்க இயல்பாக முனையாத மந்தத் தன்மையைக் குறிக்கும் விளைவாகும். இது கூடுதல் நிலைப்புத் தன்மையோடு தொடர்புடைய ஒரு கருத்தாகும். தனிம வரிசை அட்டவணையின் 13 முதல் 16 வரையில் உள்ள தொகுதிகளில் காணப்படும் இடைநிலைத் தனிமங்களைத் தொடர்ந்த கனமான தனிமங்கள் அதன் தொகுதி ஆக்சிசனேற்ற நிலையை விட இரண்டு குறைவான ஆக்சிசனேற்ற நிலைகளே அதிக நிலைப்புத்தன்மை கொண்டவையாக உள்ளன. [1] மந்த இணை என்ற சொற்றொடர் நெவில் சிட்விக் என்பவரால் 1927 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது. [2] இத்தகைய அணுக்களில் 's' வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்கள் உட்கருவுடன் அதிதீவிர கவர்ச்சி விசையால் பிணைக்கப்பட்டுள்ளதால் அந்த எலக்ட்ரான்களை நீக்கி அயனியாக்கவோ, பகிரவோ இயலாத நிலை காணப்படுகிறது.

p-தொகுதித் தனிமங்களில் நாம் கீழே செல்லும்போது, அடுத்தடுத்த தனிமங்களில் அடுத்த d அல்லது f கூடுகள் சேர்வதைக் காணலாம். இந்த d அல்லது f கூடுகள் தான் மந்த இணை விளைவை ஏற்படுத்துகின்றன. உண்மையில் குறிப்பிடப்பட்ட கூடுகளினால் வெளிப்படுத்தப்படும் எலக்ட்ரான் திரைவிளைவானது வலிமை குறைந்ததாக இருப்பதால் உட்கருவில் உள்ள மின்சுமையானது வெளிப்புறக் கூட்டில் உள்ள எலக்ட்ரான்களை எளிதில் ஈர்க்கிறது. இதன் காரணமாக, வெளிப்புறக் கூட்டில் உள்ள எலக்ட்ரான்கள் வினைகளில் பங்கேற்க முடியாமல் செய்கிறது. இது அந்த எலக்ட்ரான்களை மந்தமாக்குகிறது. இதன் காரணமாகவே இத்தகு வெளிக்கூட்டு எலக்ட்ரான்கள் மந்த இணை எலக்ட்ரான்கள் என அழைக்கப்படுகின்றன.

விளக்கம்தொகு

உதாரணமாக தொகுதி 13 இல் உள்ள தாலியத்தைப் (Tl) பொறுத்தவரை TlIII சேர்மங்கள் ஒப்பீட்டளவில் அரிதாகக் காணப்பட்டாலும், +1 ஆக்சிசனேற்ற நிலையானது மிகுந்த நிலைப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது. இதனையொத்த தனிமங்களின் +1 ஆக்சிசனேற்ற நிலையின் நிலைப்புத்தன்மையானது பின்வரும் வரிசையினைப் பெற்றுள்ளது:[3]

AlI < GaI < InI < TlI.

இதே மாதிரியான ஒரு நிலையானது தொகுதி 14, தொகுதி 15 மற்றும் தொகுதி 16 ஐச் சார்ந்த தனிமங்களிலும் தொடர்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் கனமான தனிமங்களான, அதாவது., காரீயம், பிசுமத் மற்றும் பொலோனியம் ஆகியவை முறையே +2, +3, மற்றும் +4 ஆக்சிசனேற்ற நிலைகளில் ஒப்பீட்டளவில் நிலைத்தன்மை உடையதாக இருக்கின்றன.

மேற்கோள்கள்தொகு

  1. "What is the insert pair effect?". chemistry.stackexchange.com. பார்த்த நாள் 24 சூன் 2019.
  2. Nevil Sidgwick (1927). The Electronic Theory of Valency. Oxford: Clarendon. பக். 178–81. 
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்த_இணை_விளைவு&oldid=2766069" இருந்து மீள்விக்கப்பட்டது