மன்னவன் கந்தப்பு

முருகேசு கந்தப்பு எனற இயற்பெயர் கொண்ட மன்னவன் கந்தப்பு (Kandappu Murugesu; 18 சூன் 1926 - 15 பெப்ரவரி 2004) ஒரு ஈழத்து எழுத்தாளர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியரான இவர் கவிதை புனைதல், பட்டி மன்றப்பேச்சு என்பனவற்றில் திறமை காட்டியவர். சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும்கூட. முற்போக்குச் சிந்தனையாளரான இவர் பாடசாலைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது தமிழ் ஆசான்கள் தொகு

கந்தப்பு யாழ்ப்பாணத்தில் கரவெட்டியில் பிறந்தவர். தமிழ் புலமையையும், கவி புனையும் ஆற்றலையும் தென்புலோலியூர் கந்தமுருகேசனாரிடம் கற்றுக்கொண்டவர். உயர் கல்வி பயிலும்பொழுதே இவரது தமிழ் ஆளுமையை அவதானித்த கலாநிதி சிவப்பிரகாசம் இவரை "மன்னவன்" என்று அழைக்கத்தொடங்கினார். பின்னர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.

இலங்கை வானொலியில் தொகு

1960-1972 வரையிலான காலப்பகுதியில் இலங்கை வானொலியில் கவியரங்குகளில் பங்குபற்றி புகழ் பெற்றவர். வானொலி மற்றும் பத்திரிகை நிறுவனங்களினால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்கள் பெற்ற இவர், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும்கூட.

நிறுவிய இலக்கிய, சமூக அமைப்புகள் தொகு

வடமராட்சியில் கம்பன் கழகத்தை நிறுவியதோடு, அங்கு கம்பன் விழாவை சிறப்புற நடத்துவதற்கு காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர். பண்டிதர் க. வீரகத்தியுடன் இணைந்து வாணி கலைக்கழகத்தை நிறுவி அதன் ஊடாக பண்டித வகுப்புகளை நடாத்தியவர். வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேசக் கலாசாரப் பேரவையின் உருவாக்கத்தில் பங்காற்றியவர்.

கெளரவங்கள், விருதுகள் தொகு

  • இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு 2001ம் ஆண்டில் இவருக்கு "கலைஞானகேசரி" என்ற விருதினை வழ்ங்கி கெளரவித்தது
  • வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேசக் கலாசாரப் பேரவை 2005ல் தமது வருடாந்த கலாசார விழாவின் ஒருநாள் நிகழ்வு அரங்கிற்கு இவரது பெயரைச் சூட்டி கெளரவித்தது,

ஆதாரம் தொகு

  • கலைஞர் விபரத்திரட்டு -பாகம் 1 (யாழ்ப்பாண மாவட்டம்) - யாழ் மாவட்டக் கலை, கலாச்சாரப் பேரவை வெளியீடு- ஆனி 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னவன்_கந்தப்பு&oldid=3390160" இலிருந்து மீள்விக்கப்பட்டது