மயிலாசனம்
மயிலாசனம் (Peacock Throne, பாரசீக மொழி: تخت طاووس, Takht-e Tâvus) என்பது பாரம்பரியம் மிக்க ஒரு அரியணை ஆகும் இதன் உண்மையான பெயர் "Mughal Throne Of India" (இந்திய முகலாய அரியணை). இது முகலாய பேரரசில் மிகவும் பெயர் பெற்ற ஒரு அரியாசனம் ஆகும். இதை பின்னாளில் நாதிர்ஷா அஃப்சாரி என்கிற பாரசீக பேரரசன் கவர்ந்து சென்றான். இந்த பேரரசர் இதை பாரசீகத்திற்கு கவர்ந்து சென்ற பின்பு இது பாரசீகத்தின் அரியணை என்றும் அழைக்கப்பட்டது.
வரலாறு
தொகுமொகலாயப் பேரரசர் ஷாஜகான் தன் பேரரசின் தலைநகரை ஆக்ராவிலிருந்து, அவர் உருவாக்கிய புதிய நகரமான ஷாஜகான்பாத்துக்கு (இன்றைய பழைய தில்லி) மாற்றினார். அவையில் தான் அமர உலகிலேயே சிறந்த அரியாசனம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று எண்ணினார். அதன்படி இந்த மயிலாசனத்தை உருவாக்க 1150 கிலோ தங்கம் ஒதுக்கப்பட்டது. மேலும் மரகதம், மாணிக்கம், நீலமணி, வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள் 230 கிலோ ஒதுக்கப்பட்டது. இதைச் செய்வதற்காக சையத் கிலானி என்ற பொற்கொல்லர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் ஏழு ஆண்டுகள் உழைத்து இந்த ஆசனத்தை உருவாக்கினர்.
இந்த மாலாசனத்திற்கு இந்த பெயர் இதன் தோற்றத்தினாலேயே வந்தது. இரண்டு மயில்கள் தொகை விரித்து நிற்பது போல இதன் தோற்றம் அமைந்திருந்தமையால் இதற்கு மயிலாசனம் என்ற பெயர் நிலைத்தது. மேலும் இதில் அனைத்து வகையான விலைமதிப்பற்ற வைரம், வைடூரியம், பவளம், நீலம் என அனைத்து வகையான ஆபரண கற்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது 17ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசன் ஷாஜஹானுக்காக வடிவமைக்கப்பட்டு அது அவரது தலைநகரான தில்லியில் குடிமக்களை சந்திக்கும் உப்பரிகையின் மீது நிறுவபட்டிருந்தது. இதில் பேரரசர் ஷாஜஹான் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை பதித்து வைத்திருந்தார். தில்லியில் 1665ஆம் ஆண்டு இதை பார்த்த பிரான்சு நாட்டு ஆபரண வணிகர் தவேர்நியர் மயிலாசனம் 6 அடிக்கு 4 அடி என்ற அளவில் சிலாகித்தலான இட வசதியுடன், நான்கு தங்க கால்களுடனும், இருபது முதல் இருபத்தைந்து அங்குலம் உயரத்துடனும் இருந்ததாகவும். ரோஜா வடிவிலான பன்னிரு தூண்களால் தாங்கப்பட்ட விதானத்தில் அமைக்கபடிருந்ததாகவும் விவரிக்கிறார். மேலும் இது அனைத்துவிதமான நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு ஜொலிக்கும் அழகுடன் 108 சிவப்பு கற்களாலும் 116 மரகதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்ததகவும் கூறியுள்ளார். இதன் பன்னிரு தூண்களும் விலை உயர்ந்த முத்துக்கள் பதிக்கப்பட்டு அழகு நிறைந்திருந்ததாகவும் குறிபிட்டுள்ளார். நாதிர்சாவின் படையெடுப்பின்போது கொள்ளையடித்துச் செல்லப்பட்ட இந்த மயிலாசமனானது, 1747 இல் நாதிர் ஷாவின் மரணத்துக்குப் பின் சிதைக்கப்பட்டது. அதில் உள்ள தங்கத்தையும், பிற விலை உயர்ந்த கற்களையும் பலரும் உடைத்து எடுத்துக்கொண்டனர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ முகில் (14 நவம்பர் 2018). "மயிலாசனத்தின் கதை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2018.