மயிலாடும்பாறை தொல்லியல் களம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொல்லியல் களம்

மயிலாடும்பாறை தொல்லியல் களம் என்பது, நுண்கற்காலத்திற்கும் வரலாற்றுக் காலத்திற்கும் இடைப்பட்ட பண்பாட்டுச் சின்னங்களை உள்ளடக்கியுள்ள ஒரு சிறப்புமிக்க தொல்லியல் களமாகும். இந்தத் தொல்லியல் களம் தமிழ்நாட்டின்,, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், தொகரப்பள்ளி கிராமத்திலிருந்து மேற்கு திசையில், 3 கி.மீ. தொலைவில் உள்ள குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.[1] கிருஷ்ணகிரி - போச்சம்பள்ளி நெடுஞ்சாலையில், அமைந்துள்ள இவ்வூர் கிருஷ்ணகிரியிலிருந்து 18.2 கி.மீ தொலைவிலும், பர்கூரிலிருந்து 13.5 கி.மீ. தொலைவிலும், குட்டூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது.

அகழாய்வு வரலாறு

தொகு

மயிலாடும்பாறையில் 1980 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளில் இக்களம் புதிய கற்காலத்தைச் சேர்ந்தது என வரலாற்றாய்வாளர்கள் இனம் கண்டுள்ளனர்.[2] 2003-ஆம் ஆண்டில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கா.இராஜன் இப்பகுதியில் உள்ள வாழ்விடப்பகுதிகள் மற்றும் ஈமச்சின்னங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் மூலம் நுண்கற்காலம் முதல் தொடக்க வரலாற்றுக் காலத்திற்குரிய பண்பாட்டுத் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இக்களத்தின் மேற்கே உள்ள பாறை உறைவிடங்களில் (Rock Shelters) நுண்கற்காலக் கருவிகளின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சாணாரப்பன் (சான்றோரப்பன்) மலை முகட்டில் உள்ள பாறை உறைவிடத்திலும், மலை அடிவாரத்தில் இருக்கும் கருவோட்டுப் பள்ளத்திலும் புதிய கற்கால எச்சங்கள் காணக்கிடைக்கின்றன. மலை முகட்டு பாறை உறைவிடங்களில் கீறல் குறியீடுகளும் காணப்படுகின்றன.[3] நெகுல் சுனை என்னுமிடத்தில் காணப்படும் பாறையில் நீர்சுனை இருக்கிறது. நெகுல் சுனையின் மேற்புறத்தில் இருக்கும் பாறையின் அடியிலும், கிழக்கு பகுதியிலும் இருவேறு பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்குள்ள செங்காவி பாறை ஓவியங்கள் புதிய கற்காலத்தையும், வெண்சாந்து ஓவியங்கள் பெரும்கற்படைக் காலத்தையும் சேர்ந்தனவாகும். இரு வேறு காலத்தைச் ஓவியங்கள் ஒருசேர ஒரே இடத்தில் காணப்படுவதன் வாயிலாக இப்பகுதியில் மக்கள் பெருங்கற்காலம் மற்றும் புதிய கற்காலங்களில் வாழ்ந்து வந்ததைத் தெரிந்துகொள்ள முடிகிறது.[4] கருவோட்டுப் பள்ளப் பகுதியின் மண்மேடு, இரும்புக்கால வாழ்விடப்பகுதிக்கான மண்ணடுக்குகளைக் கொண்டுள்ளது. இங்கேயே ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன.[3]

மயிலாடும்பாறை 2021 ஆகழாய்வு

தொகு

மயிலாடும்பாறை 2021 ஆகழாய்வினை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை முன்னெடுத்துள்ளது. இரா.சிவானந்தம், தலைமையிலான இந்த அகழ்வாய்வுக் குழுவில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல், சீ.பரந்தாமன், ஆர்.வெங்கடகுரு பிரசன்னா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.[5] [6] இந்த அகழாய்வு 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடித்தது.[6][7]

அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள்

தொகு

கல்திட்டை (Dolmen) பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 70 செ.மீ. நீளம் கொண்ட ஓர் இரும்பு வாளை உடைந்த நிலையில் கண்டறிந்துள்ளனர்.[6] நான்கு பானைகள், மூன்று கால்களுடன் கூடிய ஐந்து மண் குடுவைகள், உடைந்த நிலையிலான மண் குவளை, நான்கு இரும்புக் கத்திகள், ஒரு கிண்ணம், கல் கோடாரி ஆகிய தொல்பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.[8][9]

கதிரியக்கக் காலக்கணிப்பு

தொகு

இந்தியாவில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்த காலம் குறித்த துல்லியமான முடிவுகளை நிறுவுவதற்கு தொல்லியல் ஆய்வாளர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.[10] இந்தியாவின் தொல்லியல் களங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் வாயிலாக இரும்பு பயன்பாட்டிற்கு வந்த காலம் கி.மு. 2000 என்று கருதப்படுகிறது.[11] தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மாங்காடு கிராமத்தில் இருந்த ஈமச்சின்னத்தில் மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக சேகரிக்கப்பட்ட இரும்பு மாதிரியை Accelerator Mass Spectrometry (AMS) பரிசோதனைக்கு உள்ளாக்கியதில் ‘கதிரியக்க அலகு காலக்கணக்கீட்டின்’ (Radiometric Dating) சராசரி அளவீட்டுக்காலம் கி.மு. 1510 என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[12][13]

மயிலாடும்பாறையில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழாய்வுத் தளத்தின் நான்காம் பகுதியில் தோண்டப்பபட்ட அகழாய்வுக் குழிகளிலிருந்து (Trench) இரண்டு தொல்பொருள் மாதிரிகள் (Samples) முறையே 104 செ.மீ மற்றும் 130 செ.மீ ஆழத்திலிருந்து சேகரிக்கப்பட்ட்டன. சேகரிக்கப்பட்ட இரண்டு தொல்பொருள் மாதிரிகள் அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரிலுள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்தில் (Beta Analytic Testing Laboratory) கதிரியக்க அலகு காலக்கணக்கீடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.[13][14] இந்த இரண்டு மாதிரிகளின் "மைய அளவீட்டுக் காலம்" (Mid-range Calibrated Dates) முறையே கி.மு 1615 மற்றும் கி.மு 2172 என்பதனை ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மொத்தத்தில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்த காலம் கி.மு. 2172-ஆம் ஆண்டு என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[13] இதன் வாயிலாக 4200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது.[14]

4200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டில் இருந்தது உறுதியான காலக்குறிப்பிற்கான சான்றுகளுடன் 4200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டில் இருந்தது என்பதை ‘கதிரியக்க அலகு காலக்கணக்கீடு’ மூலம் அறிய முடிகிறது.[13][14]

ஆய்வறிக்கை

தொகு

மயிலாடும்பாறை தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளுக்கான அகழாய்வு அறிக்கை:

“மயிலாடும்பாறை” - வேளாண் சமூகத்தின் தொடக்கம் / தமிழகத்தில் 4200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரும்புக்காலப் பண்பாடு. (தொல்லியல் துறை வெளியீடு எண் : 333; முதல் பதிப்பு : 2022). பதிப்பாசிரியர்கள்: பேராசிரியர் கா. இராஜன், முனைவர் இரா.சிவானந்தம், க. சக்திவேல், சீ.பரந்தாமன், கி.பாக்கியலட்சுமி. தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு, சென்னை – 600 008

2022 ஆம் அண்டு மே மாதம் 09 ஆம் தேதி கா.இராஜன் தலைமையிலான தொல்லியியல் ஆய்வு குழுவினர் படைத்து வழங்கிய, மயிலாடும்பாறை அகழாய்வு முடிவுகளை தமிழக முதலமைச்சர் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டார்.[15]

  • மயிலாடும்பாறை என்பது, நுண்கற்காலத்திற்கும் வரலாற்றுக் காலத்திற்கும் இடைப்பட்ட பண்பாட்டுச் சின்னங்களை கொண்டுள்ள ஒரு முக்கியமான தொல்லியல் தளமாகும்.[1]
  • இந்தக் களம், புதிய கற்காலம் தொடங்கி வரலாற்றுக் காலம் வரை, தொடர்ந்து நிலைத்துள்ள செய்தி , அகழாய்வில் கண்டறியப்பட்ட பண்பாட்டுச் சின்னங்கள் (Cultural Artifacts) வாயிலாக, தெரிய வருகிறது.[16]
  • இங்கு கிடைத்த மட்கலன்கள் (ceramics), இரும்புப் பொருட்கள் (iron objects), பாறை ஓவியங்கள் (rock art), நடுகற்கள் (memorial stones), மற்றும் கல்வெட்டுகள் வாயிலாக 1. நுண்கற்காலம் (Microlithic age), 2. புதிய கற்காலம் (Neolithic age), 3. இரும்புக்காலம் (Iron Age age), 4.வரலாற்று தொடக்க காலம் (Early Historic age), மற்றும் 5. வரலாற்று காலம் (Historic age) என்ற ஐந்து பண்பாட்டு வரிசைகள் (five cultural sequences) அடையாளம் காணப்பட்டதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.[13][16]

முடிவுகள்

தொகு

கதிரியக்க அலகு காலக்கணக்கீட்டின் வாயிலாக தமிழ்நாட்டில் இரும்பின் காலம் 4200 ஆண்டுகள் என்றும், புதிய கற்காலம் இதைவிட முந்தையது என்ற செய்தி மயிலாடும்பாறை ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகிறது. தொல்லியல் களத்தின் மாதிரிகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட காலக்கணிப்பு சோதனை முடிவுகள், இரும்புக் காலத்தின் தொடக்கம், மற்றும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியிலிருந்து இரும்புக் காலத்திற்கு மாறியதற்கான அத்தாட்சி ஆகும். இதன் வாயிலாக, புதிய கற்காலத்தின் பிற்பகுதி கி.மு. 2200 என்று இனம் கண்டறியப்பட்டுள்ளது. கருப்பு - சிவப்பு பானை இனங்கள் இரும்புக்காலத்தில் அறிமுகப்பட்டது என்று பரவலாக நம்பப்பட்டது. இதற்கு மாறாக கருப்பு - சிவப்பு பானை இனங்கள் புதிய கற்காலத்தின் பிற்பகுதியிலேயே அறிமுகப்படுத்தப்பட்ட செய்தியும் இந்த ஆய்வறிக்கை வாயிலாக தெரிய வருகிறது.[13][17]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 மயிலாடும்பாறை (தொல்லியல் துறை வெளியீடு எண் : 333; முதல் பதிப்பு : 2022) பக். 25
  2. கிருஷ்ணகிரி அருகே மயிலாடும் பாறை அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு வாள் கண்டெடுப்பு தினமணி 14th July 2021
  3. 3.0 3.1 மயிலாடும்பாறை (தொல்லியல் துறை வெளியீடு எண் : 333; முதல் பதிப்பு : 2022) பக். 30-31
  4. கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் - 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் ஆய்வு இந்து தமிழ் திசை 15 August, 2021
  5. மயிலாடும்பாறை (தொல்லியல் துறை வெளியீடு எண் : 333; முதல் பதிப்பு : 2022) பக். 47
  6. 6.0 6.1 6.2 மயிலாடும்பாறை அகழாய்வில் இரும்பு வாள், மண் பானைகள் கண்டுபிடிப்பு எஸ்.கே.ரமேஷ் இந்து தமிழ் திசை ஜூலை 19, 2021
  7. "வரும் 30ல் தொல்லியல் பணி நிறைவு" - சட்டப்பேரவையில் தகவல் தினத்தந்தி செப்டம்பர் 04, 2021
  8. கிருஷ்ணகிரி: மயிலாடும்பாறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மண் குடுவைகள். கலீல்ரஹ்மான் புதியதலைமுறை :ஜூலை 29, 2021
  9. மயிலாடும்பாறையில் 2-ம் கட்ட அகழாய்வு நடத்த வேண்டும் : அரசுக்கு பரிந்துரை செய்ய பர்கூர் எம்எல்ஏ-விடம் கோரிக்கை இந்து தமிழ் திசை 25 July, 2021
  10. மயிலாடும்பாறை (தொல்லியல் துறை வெளியீடு எண் : 333; முதல் பதிப்பு : 2022) பக். 15
  11. மயிலாடும்பாறை (தொல்லியல் துறை வெளியீடு எண் : 333; முதல் பதிப்பு : 2022) பக். 16
  12. மயிலாடும்பாறை (தொல்லியல் துறை வெளியீடு எண் : 333; முதல் பதிப்பு : 2022) பக். 13
  13. 13.0 13.1 13.2 13.3 13.4 13.5 மயிலாடும்பாறை மூத்த தமிழ்க்குடியின் வாளின் காலம் தேமொழி. சிறகு May 14, 2022
  14. 14.0 14.1 14.2 மயிலாடும்பாறை (தொல்லியல் துறை வெளியீடு எண் : 333; முதல் பதிப்பு : 2022) பக். 43-44
  15. 4,200 ஆண்டு முன் தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு; 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழ் குடி!: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!! தினகரன் மே 09, 2022
  16. 16.0 16.1 மயிலாடும்பாறை (தொல்லியல் துறை வெளியீடு எண் : 333; முதல் பதிப்பு : 2022) பக். 39
  17. மயிலாடும்பாறை (தொல்லியல் துறை வெளியீடு எண் : 333; முதல் பதிப்பு : 2022) பக். 44

உசாத்துணை

தொகு
  • “மயிலாடும்பாறை” - வேளாண் சமூகத்தின் தொடக்கம் / தமிழகத்தில் 4200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரும்புக்காலப் பண்பாடு. (தொல்லியல் துறை வெளியீடு எண் : 333; முதல் பதிப்பு : 2022). பதிப்பாசிரியர்கள்: பேராசிரியர் கா. ராஜன், முனைவர் இரா.சிவானந்தம், க. சக்திவேல், சீ.பரந்தாமன், கி.பாக்கியலட்சுமி. தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு, சென்னை – 600 008

வெளி இணைப்புகள்

தொகு