மயில்வாகனப் புலவர்
மயில்வாகனப் புலவர் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் வாழ்ந்தவர். அக்காலத்தில் இருந்த ஒல்லாந்த அதிகாரியொருவரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாண வைபவமாலை என்னும் யாழ்ப்பாணச் சரித்திர நூலை இவர் இயற்றியதாகத் தெரிகிறது.
வரலாறுதொகு
இவர் யாழ்ப்பாணத்திலுள்ள மாதகல் என்னும் ஊரைச் சேந்தவர். வைபவமாலையின் சிறப்புப் பாயிரச் செய்யுளில் வரும்,
- "...மண்ணிலங்கு சீர்த்திவையா மரபில்மயில்
- வாகனவேள் வகுத்திட்டானே"
என வரும் அடிகளையும், இவரியற்றிய இன்னொரு நூலான புலியூரந்தாதி சிறப்புப் பாயிரச் செய்யுளில் வரும்,
- "...நல்ல கலைத்தமிழ் நூல்கள் விரிந்துரைத்த
- வையாவின் கோத்திரத் தான்மயில் வாகனன்..."
என்னும் அடிகளையும் ஆதாரமாகக் கொண்டு இவர், யாழ்ப்பாண அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் இறுதிக்காலப் பகுதியில் வாழ்ந்து வையாபாடல் எனும் யாழ்ப்பாணச் சரித்திரம் கூறும் நூலொன்றை எழுதிய வையா அல்லது வையாபுரி ஐயர் என்பவரது பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இவர் வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலைக் கட்டுவித்த வைத்திலிங்கம் செட்டியாரின் நண்பராயிருந்தார் என்பதை வைத்து, இவரது காலம் 18 ஆம் நூற்றாண்டின் பின்னரையாக இருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது. "வைத்திலிங்கச் செட்டியார் கூழங்கைத் தம்பிரானிடம் பாடங்கேட்டது, மயில்வாகனப்புலவரை நடுவராக வைத்துக்கொண்டேயாம்."[1]
குறிப்புகள்தொகு
- ↑ முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., யாழ்ப்பாணச் சரித்திரம், 1912, யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம் (நான்காம் பதிப்பு, 2000, சென்னை: Maazaru DTP)