மரபணு பகுதிகள்

மூலக்கூற்று உயிரியலில், மரபணு குறியீட்டுப்பகுதி (coding region or exon) என்பது மரபணு வரிசையில் வெளிப்படுத்தப்படும் பகுதிகளைக் குறிப்பவை ஆகும். மெய்க்கருவுயிரிகளில் (Eukaryote) ஆர்.என்.ஏ நகலாக்கத்தின் பின் பெறப்படும் ஆர்.என்.ஏ க்கள் முந்திய அல்லது முதிர்வற்ற ஆர்.என்.ஏ (precursor RNA) என அழைக்கப்படும். இவ் ஆர்.என்.ஏ வில் மரபணுவை புரத உற்பத்திக்கு செலுத்தும் குறியீடுகளும் (exon or gene coding region), புரத உற்பத்தியை குறியிடாத வரிசைகளும் (intron or non-coding sequence) நிறைந்து காணப்படும். ஆய்வாளர்கள் உயிரணுவின் கருவில் உள்ள ஆர்.என்.ஏ அளவுகளுக்கும், கருவின் வெளியே உள்ள குழியமுதலுரு ஆர்.என்.ஏ அளவுகளுக்கும் உள்ள வேற்றுமையை நார்தன் படிவு மூலம் தற்செயலாகக் கண்டுபிடித்தனர். இதன் பின் ஆர்.என்.ஏ நகலாக்கத்தின் பின் அவைகளில் சில மாற்றங்கள் நடைபெறுகின்றன என்ற கருத்தாக்கம் ஏற்பட்டது. ஆய்வாளர்களின் அயராத முயற்சியினால் ஆர்.என்.ஏ முதிர்வாக்கம் அல்லது ஆர்.என்.ஏ பிளவிணைதல் (RNA maturation or RNA splicing) என்ற நிகழ்வு அறியப்பட்டது. இந் நிகழ்வின் போது சிறிய ஆர்.என்.ஏ புரதங்கள் (small nuclear ribo nuclear protein) இணைந்து மரபணுக் குறியீடற்ற பகுதிகள் பிளக்கப்பட்டு அல்லது களையப்பட்டு மரபணுக் குறியீட்டுப்பகுதிகள் இணைக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபணு_பகுதிகள்&oldid=2742772" இருந்து மீள்விக்கப்பட்டது