மருத்துவ நோயெதிர்ப்பியல்

மருத்துவ நோயெதிர்ப்பியல் (Clinical Immunology) என்பது நோயெதிர்ப்பாற்றல் அமைப்பின் செயற்பிறழ்வுகளால் (பழுதடைவு, பிறழக்கூடியச் செயற்பாடுகள், இவ்வமைப்பின் உயிரணு உறுப்புகள் கட்டுப்பாடற்ற வளர்ச்சியடைதல்) உருவாகும் நோய்களைக் குறித்துப் படிப்பதைக் குறிக்கும். பிற அமைப்புகளின் நோயியலிலும், நோய்க் கூறுகளிலும் நோயெதிர்ப்பு வினைகள் பங்கேற்கும் பிணிகளைக் குறித்து அறிவதையும் மருத்துவ நோயெதிர்ப்பியல் துறை உள்ளடக்கியதாகும்[1].

நோயெதிர்ப்புத் தொகுதியின் செயற்பிறழ்வுகளால் ஏற்படும் பிணிகளை நோயெதிர்ப்புக் குறைவினால் நிகழ்பவை (முதன்மை நோயெதிர்ப்புப் பிணிகள்) மற்றும் தன்னெதிர்ப்பு நோய்கள் (மண்டலிய செம்முருடு, முடக்கு வாதம், தசைக் களைப்பு) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். தீங்கற்றப் பொருட்களுக்கெதிராகப் பொருத்தமற்ற முறைகளில் ஏற்படும் நோயெதிர்ப்பு அமைப்பின் பல்வேறு மிகையுணர்வூக்கங்கள் (ஈழை நோய், ஒவ்வாமை) நோயெதிர்ப்புத் தொகுதியின் செயற்பிறழ்வுகளுக்கு பிற உதாரணங்களாகக் கொள்ளலாம்.

நோயெதிர்ப்புத் தொகுதியைப் பாதிக்கும் பரவலாக அறியப்பட்டப் பிணியாக எச்.ஐ.வி நோய்க்கிருமிகளால் உண்டாகும் எய்ட்சு நோயைக் கூறலாம். இந்நோய் எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோயெதிர்ப்பாற்றலைக் குறைக்கும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் ஏற்படுகிற (CD4+ டி செல்கள், கிளையி உயிரணு, பெருவிழுங்கி ஆகியச் செல்கள் பெருமளவு அழிக்கப்பட்டநிலை கொண்ட) ஒரு நோயாகும்[2][3][4].

மாற்று உறுப்பு நிராகரிப்பில் (transplant rejection) ஒரினத்திசு ஒட்டுக்களை (allografts) அழிக்க முயலும் நோயெதிர்ப்பு அமைப்பைத் தடுக்கும் வழிமுறைகளையும் மருத்துவ நோயெதிர்ப்பியலாளர்கள் படிக்கிறார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Denman A.M. (1981). "What is clinical immunology?". J Clin Pathol 34: 277-286. https://archive.org/details/sim_journal-of-clinical-pathology_1981-03_34_3/page/277. 
  2. Sepkowitz KA (June 2001). "AIDS--the first 20 years". N. Engl. J. Med. 344 (23): 1764–72. doi:10.1056/NEJM200106073442306. பப்மெட்:11396444. 
  3. Weiss RA (May 1993). "How does HIV cause AIDS?". Science (journal) 260 (5112): 1273 9. பப்மெட்:8493571. 
  4. Cecil, Russell (1988). Textbook of Medicine. Philadelphia: Saunders. pp. 1523, 1799. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0721618480.