மறைஞானசம்பந்தர்

மறைஞானசம்பந்தர் 16ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் வாழ்ந்தவர். சந்தான குரவர் மரபில் அருணந்தி சிவாச்சாரியாரின் சீடராக விளங்கியவர். மெய்கண்ட தேவரைப் போன்று பக்குவ நிலையை எய்திய மறைஞானசம்பந்தர் சைவசித்தாந்த வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். மறைஞானசம்பந்தரின் சைவப் பணிகளுள் பிரதானமானது சைவசித்தாந்த தத்துவ உண்மைகளை எளிமையான வடிவில் போதித்தமையாகும். தனக்கு முன்னர் வாழ்ந்த மெய்கண்டதேவர், அருணந்தி சிவாச்சாரியார் ஆகியோர் அருளிய சித்தாந்த நூல்களாகிய சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது ஆகிய நூல்களைக் கற்று அவை கூறும் சித்தாந்த உண்மைகளை தம் மாணக்கருக்குக் கற்பித்தார்.

மறைஞானசம்பந்தரது பெருமைகளையும், அவரது சைவ சித்தாந்தப் பணிகளையும், இவரின் சீடராகிய உமாபதி சிவாச்சாரியார் தனது நூல்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். சந்தான குரவர் நால்வருள் மறைஞானசம்பந்தர் மட்டுமே சித்தாந்த நூல்கள் எதனையும் எழுதவில்லை. ஆயினும் அண்மைக் காலங்களில் அறிஞர்கள் பலரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி மறைஞானசம்பந்தர் "சதமணிக்கோவை" என்ற பிரமாண நூலை எழுதியதாகவும் அது "சித்தாந்தஞானபோதம்" என அழைக்கப்படடதாகவும் கூறுகின்றனர். அத்தோடு தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தில் காணப்படும் "சகஸ்ர நாம பாஷ்யம்" என்னும் உரை நூலையும் இவரே எழுதியுள்ளார் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

உசாத்துணை நூல்கள்

தொகு
  • சைவ சமயம், கொழும்பு விவேகானந்த சபை வெளியீடு, 1978
  • சைவ நெறி, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2009
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைஞானசம்பந்தர்&oldid=1448779" இலிருந்து மீள்விக்கப்பட்டது