மலகண்ட் கணவாய்
மலகண்ட் கணவாய் (Malakand Pass ) என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள மலகண்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப்பாதையாகும் .
கணவாய்க்குச் செல்லும் சாலை தர்கை என்னுமிடத்திலிருந்து தொடங்குகிறது. கணவாய்க்கு குறுக்கே உள்ள சாலை நல்ல நிலையில் உள்ளது, ஆனால் அதிக அளவு பெரிய சரக்கு வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கணவாய்க்கு ஒரு கிலோமீட்டர் முன் கீழே பள்ளத்தாக்கில் சுவாத் கால்வாயைக் காணலாம். இது சுவாத் ஆற்றில் இருந்து மலகண்ட் கணவாய்க்கு அடியில் உள்ள ஒரு சுரங்கப்பாதை வழியாக மர்தானைச் சுற்றியுள்ள சமவெளிகளுக்கு நீர் செல்வதற்காக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.
இடதுபுறத்தில், கணவாய்க்கு மேல் உள்ள சாலையில் மலகண்ட் கோட்டை அமைந்துள்ளது. கணவாயின் மறுபுறத்தில், பட்கேலா என்ற சந்தை நகரத்தின் வழியாகச் சாலை ஒன்று செல்கிறது. அதற்கு மேலே ஒரு இந்து ஷாகிகளின் கோட்டை உள்ளது. சித்ரால் போரின் போது கணவாயில் ஒரு போர் நடந்தது. பேரரசர் பகதூர் ஷாவின் மகனும், பேரரசர் ஔரங்கசீப்பின் பேரனுமான முகலாய இளவரசர் இரபி-உஷ்-ஷானின் இல்லமாகவும் இந்தக் கோட்டை இருந்தது.
வரலாறு
தொகுஇது 1895 இல் சித்ரால் போரின் போது முக்கியத்துவம் பெற்றது. சர் ராபர்ட் லோவின் முன்னேற்றத்தைத் தடுக்க 7000 பஷ்தூன்கள் அங்கே தங்க வைக்கப்பட்டிதிருந்தனர். ஆனால் அவர்கள் ஆங்கிலேயர்களால் எளிதில் விரட்டப்பட்டனர். முற்றுகை முடிந்ததும், சித்ராலுக்குச் செல்லும் சாலையைக் காக்க மலக்கண்டில் ஒரு பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டது. 1897 ஆம் ஆண்டு எல்லைப் பகுதி எழுச்சியின் போது, 700 பேர் கொல்லப்பட்ட மலகண்ட் மீதும், 2000 பேர் கொல்லப்பட்ட சக்தாராவின் அருகில் உள்ள காவல் அரண் மீதும் சுவாத்திகள் உறுதியான தாக்குதலை நடத்தினர்.