மலட்டம்மா என்பது ஒரு தமிழ் நாட்டார் தெய்வம் ஆகும். இத்தெய்வத்திற்கான கோயில் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கொப்புசித்தம்பட்டிக்கு வடக்கே உள்ள பொம்மக்கோட்டை அருகே உள்ளது.

பெயர் வந்த விதம்

தொகு

இந்த கிராமிய தெய்வத்திற்கு மலட்டம்மா என்ற பெயர் வந்த காரணம் இவர் உயிருடன் இருந்த காலத்தில் திருமணமாகி பலகாலம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்ததும், இவரது உண்மையான பெயர் இந்த ஊராருக்கு தெரியாததாலும் மலடி + அம்மா என்ற சொற்களின் சேர்கையாக வந்த மலட்டம்மா என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டும் வணங்கப்பட்டும் வருகிறார்.

மலட்டம்மா குறித்த செவிவழிக் கதை

தொகு

நீண்ட காலத்துக்கு முன்பு குழந்தைப் பேறு இல்லாத கணவனும், மனைவியும் பிள்ளைப் பேறு வேண்டி தம்பதிகளாக இராமேசுவரத்துக்கு கால்நடையாக நடந்தே யத்திரையாக சென்றனர். அவ்வாறு செல்லும்போது பொம்மக்கோட்டைக்கு அருகில் உள்ள காட்டுவழியைக் கடக்க முயன்றனர். அப்போது கணவனுக்கு அசதி உண்டாகி இருவரும் மர நிழலில் அமர்ந்தனர். இந்த அசதியில் கணவனுக்கு பெரும் தாகம் எடுத்தது. இதனால் கணவன் தன் மனைவியிடம் தாகத்தால் நா வறண்டுவிட்டது, எனவே என்னால் நடக்க இயலவாது என்றார். இதற்கு மனைவி இங்கேயே மர நிழலில் இருங்கள். அருகில் உள்ள ஊருக்குச் சென்று உங்களுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வருகிறேன் என்று புறப்பட்டார்.

தண்ணீருக்காக பறப்பட்டு சென்ற மனைவி வெகு நேரம் நடந்து சென்றார். இதற்கிடையில் தாகத்தில் தவித்த கணவன் அப்படியே மரத்தடியில் மயங்கிவிட்டார். மயங்கிவிட்ட அந்த மனிதரை காட்டில் இருந்த ஓணான்கள் கடித்தன. மயக்கத்தில் இருந்த அவர் எந்த எதிர்வினையும் ஆற்றாததால், பல ஒணான்கள் கூடி அவரைக் கடித்துக் கொன்றுவிட்டன. இதை அறியாத மனைவி அருகில் இருந்த பொம்மக்கோட்டை ஊருக்குச் சென்று அங்கு ஒரு வீட்டில் மண் தட்டில் தண்ணீரை வாங்கிக் கொண்டு வந்தார். ஆனால் மரத்தடியில் அவள் கணவன் இறந்து கிடந்ததைக் கண்டு மனைவியானவள் அழுது புரண்டாள். பின்னர் கணவரின் உடலை அப்படியே காட்டில் விடக்கூடாது அவருக்கு செய்வேண்டிய இறுதி நிகழ்வுகளை செய்யவேண்டும் என்று முடிவு எடுத்தார். எனவே அந்த ஊருக்கு மறுபடியும் சென்று கணவனின் பிணத்தை எரிக்க நெருப்பு கேட்கிறார். ஆனால் அடுப்பு நெருப்பை பிணத்தை எரிக்க தரமுடியாது என்று மறுத்துவிடுகிறார்கள். இதனால் அருகில் உள்ள இன்னொரு ஊரான ரெட்டியப்பட்டிக்குச் சென்று நெருப்பு கேட்கிறார். அங்கு துவரைச் செடிகளை எரித்த கங்கை அள்ளிக் கொடுக்கிறார்கள். இந்த கங்குகளுடன் கணவன் இறந்து கிடந்த காட்டுக்கு வந்த அந்தப் பெண் காட்டில் உள்ள விறகுகளைப் பொறுக்கி எடுத்து அடுக்கி அதில் கணவனின் உடலை கிடத்தி அதற்கு தீ மூட்டி, அதில் தானும் உடன்கட்டை ஏறி மாண்டுபோனார்.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பொம்மக்கோட்டை மக்கள் வருந்துகின்றனர். இதன்பிறகு ஊர் மக்கள் கனவில் வந்த அந்தப் பெண் என் கணவனின் பிணத்தை எரிக்க நெருப்பு தராத பாவிகளே.. உங்கள் ஊரில் இனி பால் உள்ள மரங்கள் முளைக்காது. என்று சபித்தார். இதனால் பயமுற்ற அந்த ஊர் மக்கள் அந்தப் பெண் எரிந்த இடத்தில் கோயில் கட்டி, மன்னிப்புக் கேட்டு தெய்வமாக வழிபடத் தொடங்கினர். மலட்டம்மாவின் சாபத்தினால் இப்போதும் பொம்மக்கோட்டை ஊரில் அரச மரம், ஆல மரம், பப்பாளி மரம் போன்ற பால் வடியும் மரங்கள் முளைப்பதில்லை என்று கூறப்படுகிறது.[1]

வழிபாடு

தொகு

மலட்டம்மாவை பொம்மக்கோட்டை மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள பிற ஊர் மக்களும் வந்து வணங்குகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் மிகுதியாக இருக்கும். ஆடு மாடுகளுக்கு பால் சுறக்காவிட்டாலும், குழந்தை ஈன்ற பெண்களுக்கு தாய்ப்பால் இல்லாவிட்டாலும் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர். இந்த தெய்வத்துக்கு படையலாக பசும்பாலை வைத்து வழிபடுகின்றனர். [2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலட்டம்மா&oldid=2911331" இலிருந்து மீள்விக்கப்பட்டது