மலைச் சவுக்கு

தாவர இனம்
க்ரிவில்லியா ரோபேஸ்டா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
க். ரோபேஸ்டா
இருசொற் பெயரீடு
க்ரிவில்லியா ரோபேஸ்டா
A.Cunn. ex R.Br.

மலைச் சவுக்கு அல்லது வெள்ளோக்கு[1] (Grevillia robusta)[2] என்பது ஒரு மரமாகும். இது கூம்பு வடிவமும், பளிச்சென மின்னும் புறணியிலை[3] போன்ற பிளவுகளுள்ள இலைகளும், மஞ்சள் நிறப் பூக்களும் உடைய அழகிய மரம். இது  புரோடியேசி[4] குடும்பத்தைச் சார்ந்தது.  லண்டனிலுள்ள  ராயல் தோட்டக்கலை நிறுவனத்தை[5] நிர்மாணித்தவர்களுள் ஒருவராகிய  ரைட்  ஆனரபிள் சார்லஸ் பிரான்சிஸ் க்ரேவில்லி என்பவரின் நினைவாக முதற்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த க்ரிவில்லியா இனத்தில் பெரிய மரமாக மலைச் சவுக்கு இருப்பதால், இதற்கு ரோபேஸ்டா என்ற பெயரை இணைத்தனர்.

கிளைகளின் நுனியில் பூங்கொத்துகள்

பொது பண்புகள்

தொகு

மலைச்  சவுக்கின் தாயகம் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மற்றும் நியூசவுத்வேல்ஸ் பகுதிகளாகும். இந்திய, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் மித வெப்பப் பகுதிகளில் பரவியுள்ளது. வட இந்தியாவில் டேஹ்ரடுன்பகுதியிலும், தென் இந்தியாவில் நீலகிரி, ஏற்காடு பகுதிகளிலும் வளர்கின்றன. கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் சமவெளியிலும் வளர்கிறது. 

மலைச் சவுக்கு, நெடிதுயர்ந்து வளரும். 18 முதல் 35 மீட்டர் உயரத்தையும் எட்டிடும்.  கூம்பு வடிவ தழையமைப்புடன் இருக்கும்.  பசுமை மாறா  மரமாகும். மரப் பட்டை சாம்பல் நிறமுடையது. இதன் இலைகள் புறணி இலைகளைப் போன்று. பல பிளவுகளுடன் இருக்கும்.  மாற்று இலைஅமைப்புடையது.  பிளவு இலைகள் 4 - 9செ. மீட்டர் நீளத்துடன் பல ஈட்டி போன்ற நாக்குகளையும் கொண்டிருக்கும்.  இலையின் மேற்புறம் நல்ல பச்சை நிறமாகவும், கீழ்ப்புறம்  வெள்ளி நிறத்தில் மென் மயிர்கள் அடர்ந்துமிருக்கும. சூரிய ஒளியில் இலைகள் அசையும் பொழுது அடிப்புறம் நன்கு  பளபளப்பாகப் பிரகாசிக்கும். அதன் காரணமாக, வெள்ளி ஓக்[6] (சில்வர் ஓக் ) என்ற பெயரும் ஆங்கிலத்தில் ஏற்பட்டுள்ளது.

ஏற்காட்டில் ஆண்டிற்கு இரு முறை பூக்கிறது. பிற  இடங்களில் ஒரே ஒரு தடவை தான் பூக்கிறது.   பின்பு நீளமான தட்டையான நெற்றுக்கள் உருவாகும். இவை ஒருபுறமாகப் பிளந்து, விதைகள் சிதறும்.  ஒரு நெற்றில் 1 - 2 விதைகள் இருக்கும்.  1 செ.மீட்டர் அளவில் கோள வடிவமுடைய விதைகள் பழுப்பு நிறத்தில் சிறு இறக்கையுடனிருக்கும். 

பயன்கள்

தொகு

1. காபி, தேயிலைத் தோட்டங்களுக்கு இலை சிறந்த தழை எருவாகும். இலைகளில் குயிராகிடல் (Queorachitol) மற்றும் அர்புடின் (arbutin) என்ற ஆல்கலாய்டுகள் உள்ளன.

2. மலர்களில் பீடா - கரோடின், லுடின் மற்றும் கிரிப்டோ சாந்தின் என்ற நிறமிகள் உள்ளன.

3. மரப்  பட்டையில், டானின் பொருள் உள்ளது.

4.மலைச் சவுக்கு மரம் பல்வேறு  மரச்சாமான்கள் செய்யவும், காகிதக் குழம்பு செய்யவும் ஏற்றது.

உசாத்துணைகள்

தொகு

1. Mani P.S & Kamala Nagarajan (1994). Valamtharum marangal - Part - 5, Chennai, New century book house pvt ltd.,

2.  Overseas-grown Australian Timber Species Retrieved on 11 2017.

 
இலைகள் மற்றும் பூக்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 13-50". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
  2. https://en.wikipedia.org/w/index.php?title=Grevillea_robusta&action=edit
  3. https://en.wikipedia.org/wiki/Frond
  4. https://en.wikipedia.org/wiki/Proteaceae
  5. https://en.wikipedia.org/wiki/Royal_Horticultural_Society
  6. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/silver-oak-should-continue-to-be-exempted-from-timber-transit-rules-small-tea-growers/article3933904.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைச்_சவுக்கு&oldid=3914202" இலிருந்து மீள்விக்கப்பட்டது