மல்லச்சந்திரம் பெருங்கற்கால ஓவியங்கள்

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லச்சந்திரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெருங்கற்கால கற்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுளன. குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட கல்திட்டைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை வெள்ளை வண்ணத்திலும் ஒரு கல்திட்டையில் மூன்றுவரிசை ஓவியங்களும் மற்றவைகளில் நான்கு ஓவியங்களும் காணப்படுகின்றன. கோடுகளால் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் மனித உருவங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு முக்கோண அமைப்புடைய மனித உருவங்களும் கோடுகளால் ஆன மனித உருவங்களும் இணைந்து காட்டப்பட்டுள்ளன. மலையைக் குறிப்பது போன்ற அமைப்புடைய கோடுகளும் அதன் கீழ்ப்பகுதியில் இரண்டு நேர்க்கோடுகளும் உள்ளன. இதற்கு மேல் செடியைப் போன்ற உருவமும் உள்ளன. இவை மலையையும், மலையின் மேல்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் உள்ள மரங்கள் மற்றும் செடிகளைக் குறிப்பதாக இருக்கலாம். சுடுமண் காதணியைப் போன்ற இரண்டு உருவங்கள் இவைகளின் மேல்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் இரண்டு புள்ளிகளும் இடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளன. விலங்குங்களின் மேல் அமர்ந்த நிலையிலுள்ள மனித உருவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. பெரும்பாலான மனித உருவங்களில் கைகளில் வட்டவடிவ ஆயுதங்கள் காட்டப்பட்டுள்ளன. அம்பை வில்லில் வைத்து எய்துகின்ற நிலையில் உள்ள உருவங்கள் இரண்டு இடங்களில் காணப்படுகின்றன. இவை வில், அம்பு போன்றுள்ளதால் பெருங்கற்கால மக்கள் வில்லைப் பயன்படுத்தும் அறிவு பெற்றிருந்தனர் என்பது தெளிவாகின்றது. [1]

மல்லச்சந்திரம் பெருங்கற்கால ஓவியங்களில் ஒன்று

இதையும் காண்க தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. தமிழகத் தொல்லியலும் வரலாறும் (தகடூர்ப்பகுதி). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். 2009. பக். 128-129. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-234-1562-1.