மல்லியகரை

சட்டமன்ற தொகுதி - ஆத்தூர்

நாடாளுமன்ற தொகுதி - கள்ளக்குறிச்சி

இது சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் உள்ளடங்கும் ஊரக பகுதிகளில் ஒன்று. மல்லியகரை, சேலம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் ஊரக பகுதிகளில் ஒன்று. இந்த ஊராட்சி ஏறத்தாழ ஐயாயிரம் பேர் மக்கள்தொகை கொண்டதாகும். மேலும், இவ்வூரில் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்குரிமை பெற்ற இந்திய குடிமக்கள் ஆவர்.

அடிப்படை வசதிகள்

தொகு

காவல் நிலையம். U2 மல்லியகரை காவல் நிலையம் தொலைபேசி எண்: 04282 224244

மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம். 24/7 மருத்துவ வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது.

தமிழ்நாடு அரசு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம். மல்லியகரை துணைமின் நிலையம்.

மேட்டூர் குடிநீர் திட்டத்தின் கீழ் சுற்றுப்புற ஊரக மக்களுக்கான குடிநீர் நீரேற்று நிலையம்.

சிறப்புகள்

தொகு

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தின் மேற்கு பகுதி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் தெற்கு பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு சன்னாசி வரதராஜ பெருமாள் திருக்கோயில் மலை மற்றும் மலையடிவார திருக்கோயிலும் மல்லியகரையில் தான் உள்ளது. மேலும், இக்கோயிலில் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை சுமார் பத்தாயிரம் பேர் கூடி திருவிழாக்கோலமாய் காணப்பெறும்

மல்லியகரையின் அண்டை ஊரக பகுதி மக்களில் பெரும்பாலானோர் வெளியூர் செல்ல மல்லியகரை வந்து தான் செல்வர். மேலும், அம்மக்களின் அடிப்படை தேவைகளுக்கு பெரும்பாலானோர் மல்லியகரைக்கே வருவர்.

மல்லியகரை இரு மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடமாய், ஒரு மாநில நெடுஞ்சாலையின் தொடக்கமாகவும் உள்ளது.

மாநில நெடுஞ்சாலை எண் 30. SH30 ஆத்தூர் (சேலம் மாவட்டம்) முதல் முசிறி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) வரை. இந்த நெடுஞ்சாலையில் ஆத்தூரை அடுத்த பெரும் பகுதியாக மல்லியகரை விளங்குகிறது.

மாநில நெடுஞ்சாலை எண் 79. SH79 மல்லியகரை (சேலம் மாவட்டம்) முதல் ஈரோடு (ஈரோடு மாவட்டம்) வரை. இந்த நெடுஞ்சாலை மல்லியகரையில் துவங்குவதால் ஆத்தூர், கள்ளக்குறிச்சி , கடலூர் போன்ற பகுதி மக்கள் எளிமையாக ஈரோடு செல்லும் வழியாக அமைகிறது.

திருவிழாக்கள்

தொகு

மல்லியகரை ஊரின் நடுவே ஐந்து கோயில்கள் உள்ளன.

அருள்மிகு விநாயகர் திருக்கோயில் அருள்மிகு முருகன் திருக்கோயில் அருள்மிகு சக்தி மாரியம்மன் திருக்கோயில் அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் அருள்மிகு பெருமாள் திருக்கோயில்

அவற்றுள் திரௌபதி அம்மன் கோயில் பூமிதி (தீமிதி) திருவிழா சுற்றுப்புற ஊர்மக்கள் சூழ சிறப்பாக வெகு விமர்சையாக ஒரு வாரம் நடைபெறும். முதல் வெள்ளி திரௌபதி அம்மன் அர்ச்சுனன்சாமி திருக்கல்யாணம், இரு தெய்வங்களும் இரு தேர் போன்ற பல்லக்குகளில் உலா வருவர். மறு புதன் அன்று பீமன் சாமி முனிக்கு சாப்பாடு கொண்டு செல்லுதல். ஊரே சமைத்த உணவுகளை வண்டிகளில் பெரிய அளவிலான பாத்திரத்தில் கொணர்ந்து இறை ஊட்டமது நிறைவுற்றவுடன், பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள், வியாழக்கிழமை மாலை திரௌபதியம்மன் துகில் உரிதல் நடைபெறும். தெய்வங்களை போல் வேடமிட்டு துகில் உரிதல் நிகழ்வை நிகழ்த்துவர். மறுநாள், வெள்ளிக்கிழமை திரௌபதி அம்மன் முன்வர பின்னே அர்ச்சுனன்சாமி, கிருஷ்ணன், பீமன் சாமி, நகுலசகாதேவசாமிகள், சக்தி மாரியம்மன் ஆகியோர் தேர் போன்ற பல்லக்குகளில் உலா வருவர். அன்று மதியம் கோட்டை இடித்தல், காளி வேடமிட்டு ஆடுதல் நடைபெறும். பிறகு வீரகாந்தம் என்று சொல்லப்படும் மஞ்சள் பொடி முதலான சில நீரில் கலந்து முகத்தில் உடலில் பூசிக்கொண்டு திரௌபதியம்மன் முதலாய் பூக்குழி இறங்க இறைத்தொண்டர்கள் பின்தொடர்வர்கள். இறுதிநாள் மஞ்சள் நீராட்டம். அன்று இரவு சாமி பூவலங்காரத்தில் திருவீதியுலா கரகாட்டம் வாணவேடிக்கை என ஒருவாரம் திருவிழாக்கோலம் நிறைந்திருக்கும்.

மேலும், மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவும் மிகவும் சிறப்பாக நடைபெறும். முதல் நாள் ஊரணி பொங்கல், சாமி வேடங்களிட்டு ஆடுவர். மறுநாள் அம்மை திருக்கல்யாணம், தேரோட்டம். இரண்டாம் நாள் அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், உருளத்தண்டம் (அங்கப்பிரதட்சணம்) போன்றவை நடைபெறும். முன்றாம் நாள் மஞ்சள் நீராட்டம் அன்று இரவு சாமி பூவலங்காரத்தில் திருவீதியுலா, கரகாட்டம், வாணவேடிக்கை என நான்கு நாட்கள் சீரும் சிறப்புமாக சக்தி மாரியம்மன் திருவிழா நடைபெறும்.

இந்த இரு திருவிழாக்களும் துவங்க, ஒரு மாதம் முன்பே திருவிழாக்கால் ஊன்றி பாரத பிரசங்கம் திருவிழா முடியும் வரை நாள்தோறும் இரவுகளில் நடைபெறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லியகரை&oldid=3705992" இலிருந்து மீள்விக்கப்பட்டது