மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)

மாநிலச் சட்ட மேலவை (இந்தி: விதான் பரிஷத்) என்பது இந்திய மாநிலங்களில் சட்டமியற்றும் சட்டமன்றங்களின் மேலவையைக் குறிப்பதாகும். இந்தியாவின் 28 மாநிலங்களில், 6 மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளது. அவை உத்திரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரம், தெலங்காணா மற்றும் ஆந்திரப் பிரதேசம். தமிழ்நாடு சட்டமன்ற மேலவை 1950-86 காலகட்டத்தில் செயல்பட்டது. பின்னர் 1986இல் கலைக்கப்பட்ட இந்த அவை, 2010இல் மீண்டும் உருவாக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

வரையறைதொகு

இந்திய அரசியலமைப்பு பிரிவு மூன்று, விதி 168 (2) ல் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மாநிலத்தில் இரண்டு மன்றங்கள் இருந்தால் ஒன்று சட்டமன்ற மேலவை என்றும் மற்றொன்றை சட்டமன்ற கீழவை என்றும் வழங்க வேண்டும். ஒரே மன்றம் உள்ள மாநிலங்களில் அதனைச் சட்டமன்றம் என்று அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

அமைப்புதொகு

இது ஒரு நிரந்தர மன்றமாகும், ஆட்சிக் கலைப்பினால் இந்த மன்றம் கலைக்கப்படுவதில்லை. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 வருடங்கள் இதல் மூன்றில் 1 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

உறுப்பினராவதற்கானத் தகுதிகள்தொகு

சட்ட மேலவையில் உறுப்பினாரவதற்கு ஒருவர் 30 வயது நிரம்பியிருக்க வேண்டும் மற்றும் மனவலிமை கொண்டவராகவும், எவ்வகையிலும் கடன் படாதவராக (கடனாளியாக இல்லாமல்) இருத்தல் வேண்டும். எந்த தொகுதியில் போட்டியிடுகின்றாரோ, அந்தத் தொகுதியைச் சேர்ந்தவராயிருத்தல் வேண்டும்.

உறுப்பினர்கள் எண்ணிக்கைதொகு

இம்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவை சட்டமன்றங்களின் அல்லது கீழவை சட்டப் பேரவைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையை மிகாமல் இருக்கை இருக்கவேண்டும். இந்த எண்ணிக்கை 40-க்கு குறையாமலும் இருக்கவேண்டும். இருப்பினும் நாடாளுமன்ற சிறப்பு அனுமதியின் பேரில் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் 32 உறுப்பினர்கள் கொண்ட அவையாக இயங்குகின்றது.

உறுப்பினர்கள் தேர்வுமுறைதொகு

விகிதம் தேர்ந்தெடுக்கும் முறை
1/6 கலை, அறிவியல், இலக்கியம், கூட்டுறவு, சமூக சேவை போன்ற துறைகளில் தலைசிறந்த பணியாற்றியவர்கள்; அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவர்
1/3 சட்டமன்ற கீழவையின் உறுப்பினர்களால் விகிதாச்சார பிரநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
1/3 மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்
1/12 இளங்கலைப் பட்டம் பெற்ற பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
1/12 பள்ளி, கல்லூரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்

மேலவையின் உரிமைகள்தொகு

இந்திய மாநிலங்களவையைப் போன்று இங்கும் சட்டப் பேரவை கீழவையில் முன் மொழிந்த மசோதா, தீர்மானங்கள் மற்றும் திட்டங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு விவாதிக்கவும், விமர்சிக்கவும் படுகின்றன. அரசின் செயல்பாடுகள் விமர்சிக்கவும் படுகின்றன. மேலவை தன்னிச்சையாக சட்டங்களை இயற்றும் உரிமை கிடையாது. கீழவையால் நிறைவேற்றப்பட்ட சட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. இரு அவைகளுக்கும் முரண்பாடு ஏற்படும் போது கீழவையின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.[2][3]

மேற்கோள்கள்தொகு

  1. நடராஜன், ஏ. எஸ் (5 வது பதிப்பு 1997). இந்திய அரசியல் சாசனம், மூன்றாம் அத்தியாயம், மாநிலச் சட்ட மன்றம் விதி 168 (2) பொது. இந்தியா, தமிழ்நாடு, சென்னை-14: பாலாஜி பதிப்பகம். பக். 1-467. 
  2. "Public Administration Special", Pratiyogita Darpan, 2 (22): 60, 2008
  3. Sharma, B. K. (2007). Introduction to the Constitution of India. PHI Learning Pvt. Ltd. பக். 207–218. ISBN 81-203-3246-6, ISBN 978-81-203-3246-1. http://books.google.com/books?id=srDytmFE3KMC&pg=PA207.