மார்கோ வான் பாஸ்டன்

மார்கோ வான் பாஸ்டன் (பிறப்பு 1964) நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து மேலாளர் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர் ஆவார். அஜாக்ஸ் மற்றும் மிலன் கால்பந்து குழுக்களுக்கும் நெதர்லாந்து தேசிய அணிக்கும் விளையாடி உள்ளார். இவர் மிகச் சிறந்த ஐரோப்பிய வீரர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். அணியில் கோல் அடிக்கக்கூடிய முன்னிலை நிலையில் விளையாட கூடியவர். இவர் 300க்கும் மேலான கோல்களை அடித்துள்ளார். தனது இருபத்தி எட்டாம் வயதில் காயம் ஏற்பட்டதால் அதற்குமேல் அவரால் கால்பந்து போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. காயம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பின் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[1][2] அதன்பின் அஜாக்ஸ் அணிக்காகவும் நெதர்லாந்து தேசிய அணிக்காகவும் கால்பந்து மேலாளராக பணியாற்றினார்.

சாதனைகள்

தொகு

நெதர்லாந்து அணிக்காக விளையாடி 1988ஆம் ஆண்டு நடந்த சர்வதேச அளவிலான ஐரோப்பிய கோப்பையை இவர் வென்றார்.[3] அந்தத் தொடரில் இவர் மொத்தம் ஐந்து கோல்களை அடித்தார். தொடரின் இறுதிப் போட்டியிலும் நினைவு கூறும் விதமாக ஒரு கோலினை அடித்தார். ஆகையால் அத்தொடரின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். குழும போட்டிகளில் அஜாக்ஸ் அணிக்காக விளையாடி நெதர்லாந்து நாட்டின் கோப்பையை மூன்று முறையும் ஐரோப்பிய அளவிலான கோப்பையை ஒரு முறையும் இவர் வென்றார். இத்தாலி நாட்டிலுள்ள மிலன் கால் பந்து அணியில் விளையாடி அந்நாட்டின் கோப்பையை மூன்று முறையும் ஐரோப்பிய அளவிலான கோப்பையை ஒரு முறையும் இவர் கைப்பற்றினார்.

இவர் கால்பந்து தன் அருகிலேயே அதிக நேரம் வைத்திருப்பதால் எதிர் அணியினர் இடம் பந்தினை இழக்க மாட்டார். கோல் அடிக்கும் திறமையில் இவரின் புத்திக்கூர்மை வெளிப்படும். ரசிகர்கள் கண்கவர் வண்ணம் இவர் பல கோல்களை அடித்துள்ளார். தரையிலிருந்து மேலே வரும் பந்தினை நேரடியாக கோல் வலைக்குள் செலுத்தும் திறமையும் இவரிடம் உண்டு.

உலக கால்பந்து சம்மேளனம் வழங்கும் வருடாந்திர சிறந்த வீரருக்கான விருதினை இவர் 1992 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார் அதுமட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கை வழங்கும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை இவர் 1988, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றார். 1998 ஆம் ஆண்டு உலக கால்பந்து சம்மேளனம் நடத்திய கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான வாக்கெடுப்பு பட்டியலில் இவருக்கு ஆறாம் இடம் கிடைத்தது. 2004ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற 100 சிறந்த நெதர்லாந்து குடிமக்கள் என்னும் வாக்கெடுப்பில் இவருக்கு இருபத்தி ஐந்தாம் இடம் கிடைத்தது.

இளமைக்காலம்

தொகு

இவரின் இளம் வயதிலேயே இவரின் கால்பந்து திறமை கண்டறியப்பட்டதால் 1983ம் ஆண்டு நடந்த இளைஞர்களுக்கான உலக கோப்பையில் விளையாட பெற்றார். இந்த நிலையில் 1984-ம் ஆண்டு நெதர்லாந்து தேசிய அணியில் இருந்து சிறந்த வீரர்கள் சிலர் ஓய்வு பெற்றனர். அதனால் இவரையும் சேர்த்து சில இளைஞர்களுக்கு நெதர்லாந்து தேசிய அணியில் இடம் கிடைத்தது. இந்த இளம் அணியால் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை. அதனைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான ஐரோப்பிய கோப்பையை நெதர்லாந்து அணி இவரின் பெரும் பங்களிப்பு காரணமாக வெற்றி பெற்றது. அந்தத் தொடரில் இவர் 5 கோல்கள் அடித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் மூன்று கோல்களை அடித்தார். ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இவர் அடித்த கோல் காரணமாகவே நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. சோவியத் கூட்டமைப்பு அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இவர் கடினமான கோல் ஒன்றினை அடித்தார். அந்த கோலானது மிகச்சிறந்த விளையாட்டு தருணங்கள் என்னும் பட்டியலில் 21 ஆம் இடத்தைப் பிடித்தது. மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இவர் அந்தத் தொடரின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

கடைசி போட்டிகள்

தொகு

அடுத்து நடைபெற்ற 1990 ஆண்டின் உலகக் கோப்பை போட்டிகளில் நெதர்லாந்து அணி மேற்கு ஜெர்மனி அணியிடம் தோல்வி அடைந்து இரண்டாம் சுற்றிலேயே வெளியேறியது. இவர் உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்தது இல்லை. 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் நெதர்லாந்து அணி அரையிறுதியில் வெளியேறியது. அந்தப் போட்டியில் இவர் தன் பெனால்டி வாய்ப்பினை தவற விட்டார். இருப்பினும் மற்ற ஆட்டங்களில் இவர் சிறப்பாக விளையாடியதால் அந்தத் தொடரின் அணியில் இவர் இடம்பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Van Basten, a Dutch goal machine". FIFA.com. Archived from the original on 12 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 27 June 2013.
  2. "10 Greatest Goals in the European Championships". FourFourTwo. 8 May 2008 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131023055746/http://au.fourfourtwo.com/features/4468,10-greatest-goals-in-the-european-championships.aspx. பார்த்த நாள்: 23 October 2008. 
  3. "National Team Honours". Marco van Basten. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கோ_வான்_பாஸ்டன்&oldid=3575726" இலிருந்து மீள்விக்கப்பட்டது