மார்த்தாவும் மகதலா மரியாவும் (கரவாஜியோ)
மார்த்தாவும் மகதலா மரியாவும் (Martha and Mary Magdalene) என்பது புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான கரவாஜியோ (முழுப்பெயர்: மிக்கேலாஞ்சலோ மெரீசி தா கரவாஜியோ) என்பவரால் வரையப்பட்ட ஓர் ஓவியம் ஆகும். இதை கரவாஜியோ என்னும் பரோக்கு கலை ஓவியர் சுமார் 1598இல் வரைந்தார். இந்த ஓவியம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் டெட்ராய்ட் நகர் கலைக்கூடத்தில் உள்ளது.
மார்த்தாவும் மகதலா மரியாவும் Martha and Mary Magdalene | |
---|---|
ஓவியர் | கரவாஜியோ |
ஆண்டு | சுமார் 1598 |
வகை | சித்திரத்துணி மேல் எண்ணெய் ஓவியம் |
இடம் | டெட்ராய்ட் கலைக்கூடம் |
இந்த ஓவியத்தின் மறுபெயர்கள்: "மார்த்தா மரியாவைக் கடிந்துகொள்ளுதல்", மற்றும் "மதலேனாவின் மனமாற்றம்".
ஓவியத்தின் அமைப்பு
தொகுஇந்த ஓவியம் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் வருகின்ற மார்த்தா, மரியா என்னும் இரு சகோதரிகளைச் சித்தரிக்கிறது (காண்க:யோவான் 11-12). மரியா இவ்வுலக ஆடம்பரங்களில் மனதைப் பறிகொடுத்துவிட்டு, வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இன்றி இருக்கின்றார். மார்த்தா தன் சகோதரி மரியாவை அணுகி, உலக ஆடம்பரங்கள் வீண் என்றும் வாழ்க்கையின் உண்மைப் பொருளைக் காணவேண்டும் என்றால் இயேசு கிறித்துவை நம்பி ஏற்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.
மரியா ஒரு கண்ணாடியின் முன் அமர்ந்து தன் அழகை இரசித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய வலது கையில் இளஞ்சிவப்பு மலர் ஒன்று இருக்கிறது. அதை அவர் விரல்களுக்கிடையே வைத்து சுழற்றிக்கொண்டிருக்கிறார். இடது கை பெரியதொரு கண்ணாடியைத் தழுவிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவருடைய உலகப் பற்று சித்தரிக்கப்படுகிறது.
மார்த்தா தம் சகோதரியின் அருகில் சென்று அமர்ந்துள்ளார். அவருடைய முகம் சிறிதே மரியாவை நோக்கித் திரும்பி இருக்கிறது. அவருடைய முகத்தில் நிழல் படிந்துள்ளது. அவர் குனிந்து, மரியாவை நோக்கி உரையாடிக்கொண்டிருக்கிறார்.
மரியாவின் முகத்தில் தோன்றும் உணர்வு
தொகுஓவியர் மரியாவின் முகத் தோற்றத்தை மிக அழகாக சித்தரித்துள்ளார். உலக இன்பங்கள் ஒருநாள் கடந்து போகும் என்று மார்த்தா எடுத்துரைப்பது மரியாவின் உள்ளத்தைத் தொடுகிறது. அவரது முகத்தில் படிப்படியாக ஒரு மாற்றம் ஏற்படுகிறது. மரியா மனம் மாறுகிறார்.
ஓவியத்தின் பின்னணி
தொகுஇந்த ஓவியத்தை வரைந்த போது கரவாஜியோ தம் புரவலரான கர்தினால் பிரான்செஸ்கோ மரியா தெல் மோந்தே என்பவரின் மாளிகையில் வாழ்ந்துவந்தார். அவர் தம் புரவலருக்கென வரைந்த ஓவியங்கள் இரு வகைப்பட்டவை:
- முதல் வகை உலகப் போக்கு சார்ந்தவை. அவற்றுள் "இசைக் கலைஞர்கள்" (The Musicians)[1], "யாழ் இசைக்கும் கலைஞன்" (The Lute Player)[2], "மது தெய்வம்" (Bacchus)[3] போன்ற ஓவியங்கள் உள்ளடங்கும். இந்த வகை ஓவியங்களில் சிறுவர் மற்றும் இளையோர் சித்தரிக்கப்படுகின்றனர். அவர்கள் அடைபட்ட ஓரிடத்தில் இருப்பதுபோன்று காட்டப்படுகின்றனர்.
- இரண்டாம் வகை சமயம் சார்ந்தவை. அவற்றுள் "திருக்குடும்பம் எகிப்துக்கு ஓடிப்போனபோது ஓய்வெடுத்தல்" (Rest on the Flight into Egypt)[4], "புனித பிரான்சிசின் பரவச நிலை" (Ecstasy of Saint Francis)[5], "மார்த்தாவும் மகதலா மரியாவும்" (Martha and Mary Magdalene) போன்றவை உள்ளடங்கும்.
கரவாஜியோ ஓவியங்களுக்கு உருமாதிரிகள்
தொகுசமயம் தொடர்பான கருத்துகளை விளக்குகின்ற ஓவியங்களை வரைந்தபோது கரவாஜியோ இரு பெண்களை உருமாதிரிகளாக (models) பயன்படுத்தினர். சில ஓவியங்களில் ஒரு பெண், வேறு சிலவற்றில் இரு பெண்களும் என்று அவருடைய ஓவியங்கள் உள்ளன.
இந்த இரு பெண் உருவமாதிரிகளும் கர்தினால் தெல் மோந்தேயின் மாளிகையிலும் பிற கலைப் புலவர் அவைகளிலும் நன்கு அறியப்பட்ட அவையணங்குகள் (courtesans). அவர்கள் அன்னா பியாங்கீனி (Anna Bianchini), மற்றும் ஃபில்லிடே மெலாந்த்ரோனி (Fillide Melandroni) என்போர் ஆவர்.
கரவாஜியோ சுமார் 1597இல் வரைந்த "மனம் மாறிய மதலேனா" (Penitent Magdalene)[6] என்னும் ஓவியத்திற்கு உருமாதிரியாக இருந்தவர் அன்னா.
மாறாக, கரவாஜியோ படைத்த "ஓர் அவையணங்கின் உருவப்படம்" (Portrait of a Courtessan)[7] என்னும் உலகுசார் ஓவியத்திற்கு ஃபில்லிடே உருமாதிரியாக இருந்தார். அந்த ஓவியம் அதே ஆண்டில் வின்சென்சோ ஜுஸ்தினியானி என்னும் கலைப் புரவலருக்காக வரையப்பட்டது.
1598இல் கரவாஜியோ தாம் வரைந்த "புனித கத்தரீனா" (Saint Catherine)[8]என்னும் ஓவியத்திற்கு ஃபில்லிடே என்பவரை உருமாதிரியாகப் பயன்படுத்தினார். அறிவுத்திறனும் மன எழுச்சியும் வெளிப்படுகின்ற ஓர் அழகோவியமாக அது அமைந்தது.
மரியா, மார்த்தா ஓவியம்
தொகுமரியாவையும் மார்த்தாவையும் இணைத்து வரைந்த ஓவியத்தில் கரவாஜியோ அந்த இரு கதாபாத்திரங்களின் உள்ளுணர்வை எழிலுற வெளிக்கொணர்கின்றார். மரியாவின் ஆடம்பரத்தையும் உலக நாட்டத்தையும் சித்தரிக்க ஃபில்லிடே தகுந்த உருமாதிரியாகவும், முக பாவனையில் சற்றே இறுக்கம் காட்டி, அதே நேரத்தில் அழுத்தமான தோரணையை வெளிப்படுத்தும் மார்த்தாவைச் சித்தரிக்க அன்னா பொருத்தமான உருமாதிரியாகவும் அமைந்தனர்.