மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்
இந்த நப்பாலத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது ஊர் மாறோக்கம். இவர் ஒரு கணியர் (சோதிடர்). இவரது கணிப்பு காதலர் இருவரிடையே இருக்கும் காமத்தை மையமாகக் கொண்டு அளவிடுவது. சங்கத்தொகை நூல்களில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 377ஆம் பாடலாக இருக்கிறது. பாலைத் திணை மேலது.
இவரது பாடல் தரும் செய்தி
தொகு- வல்லு விளையாட்டு
ஊர் மன்றத்தில் தலை நரைத்துப்போன அகவை முதிர்ந்த கிழவர்கள் வல்லு விளையாடிக் காலம் கழிப்பர். பாலைநில மறவர் ஆனிரைகளை கவர்வதால் அந்த மன்றம் பாழாகி வெறிச்சோடிக் கிடக்கும். அவர்கள் விளையாடிய வல்லுப் பலகைகள் கறையான் புற்று ஏறிக்கிடக்கும்.
- இரந்தோர்க்கு உதவவே பொருள் ஈட்டுவர்
நசை தர வந்தோர் இரந்த பொருள்களை மழைபோல் கைம்மாறு கருதாமல் வழங்கவே ஆடவர் பொருள் தேடிவர இல்லாளைப் பிரிந்து செல்வர்.
- பாலைநில மறவர் உணவு
கறையான் புல்லரிசியைத் தன் புற்றில் சேர்த்து வைத்திருக்கும். புற்றைக் கிண்டி அந்த விதைக்காத அரிசியை எடுத்து உணவு சமத்துக்கொள்வர்.
இப்படிப்பட்ட வறண்ட நிலத்தில் இளைப்பாறும்போது தன்னை அவர் நினைக்கமாட்டாரா என்று தலைவி ஏங்குவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.