மாவட்ட அறங்காவலர் குழு (கோயில்கள்)
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் நிருவாகத்தில் செயல்பட்டு வரும் கோயில்களில், இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டப்பிரிவு 46(ii)-ன் கீழ் பத்து இலட்சம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறும் இந்து சமயக் கோயில்களில் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்காக மாவட்ட அறங்காவலர் குழ அமைக்கப்படுகிறது.
இக்குழுவில் பெண் உறுப்பினர் ஒருவர், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் உட்பட ஐந்து அறங்காவலர்கள் இடம் பெறுகின்றனர். மாவட்ட அளவில் அறங்காவலர் பணிக்குப் பெறப்பட்ட விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் / உதவி ஆணையர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான குழு பரிசீலித்து, தகுதியுடையவர்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்கிறது. அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு மாவட்ட அறங்காவலர் குழுவையும், அறங்காவலர்களில் ஒருவரை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவராகவும் நியமனம் செய்கிறது. [1], [2]
மாவட்ட அறங்காவலர் குழு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பத்து லட்சம் ரூபாய்க்குக் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட கோயில்களுக்கான அறங்காவலர்கள் குழுக்களுக்குப் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து,ஒவ்வொரு கோயிலுக்கும் தகுதியுடைய மூன்று அறங்காவலர்களைக் கொண்ட அறங்காவலர்கள் குழுவினைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரைக்கிறது. இப்பரிந்துரைகளின் அடிப்படையில் கோயில்களின் ஆண்டு வருமானத்திற்கேற்ப அரசு / இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் / இணை ஆணையர் / உதவி ஆணையர் ஆகியோர் ஒவ்வொரு கோயிலுக்குமான அறங்காவலர் குழுவினை நியமிக்கின்றனர். [3]