மின்கடத்தம்

மின்னோட்டம் என்பது மின்னூற்றுக்குக் குறுக்கே இணைக்கப்படும் பொருட்களிலுள்ள கட்டறு எதிர்மங்களின் கடப்பு மேனி. இவ்வாறு பொருட்கள் அவ்வவற்றின் கட்டறு எதிர்மங்களைக் கடத்து தன்மையை அவ்வப்பொருளின் கடத்தம் என்கிறோம். தூய பொன்மங்கள் அனைத்தும் கடத்திகளே. அவற்றில் ஏராளமான கட்டறு எதிர்மங்கள் காணப்படுகின்றன.மிகச்சிறு மின்னழுத்தநிலை வேறுபாடு கொண்ட மின்னூற்றுக்குக் குறுக்கே இத்தகைய பொன்மங்களில் ஏதாவது ஒன்றை இணைத்தாலும் மிகப்பெரிய அளவில் மின்னோட்டம் நிகழும். ஆயினும் மின்னமைப்புகளில் இவ்வளவு மின்னோட்டம் தேவை படுவது இல்லை. மேலும், மின்னோட்டத்தின் அளவை நாம் விரும்பிய அளவிற்குக் கட்டுப்படுத்தவேண்டிய தேவையும் உள்ளது. பொன்மச் சேர்வைகளில் தூயபொன்களில் உள்ளதைவிட மிகக்குறைந்த அளவு கட்டறு எதிர்மங்கள் உள்ளதால் இவற்றின் கடத்துதன்மை தூயபொன்களின் கடத்துதன்மையைவிடக் குறைவாக இருக்கும். அதனால் இத்தகைய பொன்மச் சேர்வைகளை மின்னூற்றுக்குக் குறுக்கே இணைத்தால் மின்னோட்டம் குறைந்த அளவிலேயே நிகழும். அதனால் மின்னமைப்புகளில் தூய பொன்மங்களை இணைப்புகளுக்கும் பொன்மச் சேர்வைகளை மின்னோட்டத்தின் அளவைக் கட்டுப்படுத்தவும் பயன்படும். பொருளின் தன்மை, பொருளின் குறுக்குப் பரப்பளவு, பொருளின் நீளம் ஆகியவற்றைப் பொறுத்து பொருள்களின் கடத்தம் மாறுபடுகிறது.[1]

கடத்திப்பொருளின் தன்மை தொகு

கடத்தியின் பொருளுக்கு ஏற்ப அதிலுள்ள கட்டறு எதிர்மங்களின் எண்ணிக்கை இருக்கும். ஒரு பரப்பு மீட்டர் குறுக்களவும் ஒரு மீட்டர் நீளமும் உள்ள ஒரு கடத்தியில் உள்ள கட்டறு எதிர்மங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்கிறோம். இதனைப் பொருளின் கடத்துமை என்கிறோம். ஒரு கடத்தியின் கடத்தம் அக்கடத்தப்பொருளின் கடத்துமைக்கு நேர்ப் பொருத்ததில் இருக்கும்.

கடத்திப் பொருளின் குறுக்குப்பரப்பளவு தொகு

கடத்திப் பொருளின் குறுக்குப்பரப்பளவு மிகுந்தால் கட்டறு எதிர்மங்களின் எண்ணிக்கை மிகுவதும் குறுக்குப் பரப்பளவு குறைந்தால் கட்டறு எதிர்மங்களின் எண்ணிக்கை குறைவதும் இயல்பு. கடத்தியின் கடத்தம் அக்கடத்திப் பொருளின் குறுக்குப் பரப்பளவிற்கு நேர் பொருத்தத்தில் இருக்கும்.

கடத்திப் பொருளின் நீளம் தொகு

கடத்திப் பொருளின் நீளம் மிகுந்தால் கட்டறு எதிர்மங்களின் எண்ணிக்கை மிகுவதும் நீளம் குறைந்தால் கட்டறு எதிர்மங்களின் எண்ணிக்கை குறைவதும் இயல்பு. மின்னோட்டத்திற்குக் காரணமாக அமைவது கட்டறு எதிர்மங்களின் ஓட்டமே. இந்தக் கட்டறு எதிர்மங்களின் ஓட்டத்திற்குக் காரணமாய் அமைவது மின்னூற்றின் மின்னழுத்தநிலை வேறுபாட்டால் தோன்றும் விசையே. கடத்திப் பொருளின் நீளம் மிகுந்தால் இந்தக் கட்டறு எதிர்மங்களுக்கும் மின்னழுத்தநிலை வேறுபாட்டால் தோன்றும் விசைக்கும் உள்ள சராசரி தொலைவு குறைந்து விடும். நீளம் குறைந்தால் அதன் சராசரி தொலைவு அதிகரித்துவிடும். எனவே கடத்திப் பொருளின் நீளம் மிகுந்தால் மின்னோட்டம் குறைவதும் நீளம் குறைந்தால் மின்னோட்டம் மிகுவதும் நிகழ்கின்றன. கடத்தியின் கடத்தம் அக்கடத்திப் பொருளின் நீளத்திற்கு எதிர் பொருத்தத்தில் இருக்கும்.

உசாத்துணைகள் தொகு

  1. அடிப்படை மின்னியல், பேரா. இரா. கணேசன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்கடத்தம்&oldid=3600906" இலிருந்து மீள்விக்கப்பட்டது