மின்வாய் (electrode) அல்லது மின்முனை எனப்படுவது, ஒரு மின் கருவி அல்லது மின் உறுப்பினுள் மின்னோட்டம் உள்நுழைந்து பாயவும், வெளியேறிப்போகவும் துணையாக உள்ள கடத்திகள்.

மின்வேதியியக் கரைசலில் நேர்மின்முனையும், எதிர்மின்முனையும் தொகு

ஒரு கொள்கலத்தில் இருக்கும் மின்வேதியக் கரைசலின் உள்ளே, அக்கரைசலில் மின்னோட்டம் பாய, அக்கரைசலோடு தொட்டுக்கொண்டு இருக்கும் மின் முனைகள், நேர்மின்முனை (ஆனோடு) என்றும், எதிர்மின்முனை (காத்தோடு) என்றும் அழைக்கப்படும். ஆங்கிலத்தில் ஆனோடு (நேர்மின்முனை), காத்தோடு (எதிர்மின்முனை) என்னும் சொற்கள் குழப்பம் ஏற்படுத்தவல்லன. இவைற்றைப் புரிந்து கொள்ள முனைகளின் வடிவமைப்பை விட, அவற்றின் செயற்பாடே முதன்மையானது. மின்னோட்டம் பாயும் பொழுது எங்கிருந்து நேர்மின்மம் (கரைசலுக்குள்) புறப்படுகின்றதோ அந்த மின்முனை நேர்மின்முனை (ஆனோடு) எனப்படும். கரைசலுக்குள் எந்த மின்முனையில் இந்த நேர்மின்மங்கள் வந்து சேர்கின்றனவோ அது எதிர்மின்முனை (காத்தோடு) எனப்படும். நேர்மின்மங்களுக்கு மாறாக எதிர்மின்மங்கள் அல்லது எதிர்மின்னிகளைக் கருத்தில் கொண்டால், நேர்முனையில் (ஆனோடில்) எதிர்மின்னிகள் வந்து சேரும். எதிர்மின்முனை, எதிர்மின்னிகளை உமிழும்(எதிர்மின்முனையில் இருந்து எதிர்மின்னிகள் (கரைசலுள்) புறப்பட்டு நேர்மின்முனையை நோக்கி நகரும்.

கரைசலுக்கு வெளியே, நேர்மின்முனை என்பது நேர்மின்மங்களை தன்னுள் வாங்குவது. எதிர்மின்முனை (காத்தோடு) என்பது கரைசலுக்கு வெளியே நேர்மின்மங்களை உமிழும் மின்முனை.

மின்வேதிக்கலங்களில் (electrochemical cells) நேர்மின்முனையில் (ஆனோடில்) ஆக்சிசனேற்றம் நிகழும். எதிர்மின்முனையில் (காத்தோடில்) ஆக்க்சிசனிறகக்ம் (அல்லது எதிர்மின்னியேற்றம்) நிகழும்.

முதன்மைக் கலம் தொகு

முதன்மைக் கலங்கள் எனப்படுபவை அவற்றின் மின் பிறப்பித்தலுக்கான மின்னிரசாயனத் தாக்கங்கள் மீள்வழியில் நடைபெறாத கலங்களாகும். எனவே இவற்றை மீண்டும் மீண்டும் மின்னேற்றிப் பயன்படுத்த முடியாது. ஆதலால் இவற்றின் அனோட்டும் கதோட்டும் நிலையானதாக இருக்கும். அனோட்டு எப்போதும் மறை மின்வாயாக இருக்கும்.

துணைக்கலங்கள் தொகு

துணைக் கலங்கள் எனப்படுபவை மீண்டும் மீண்டும் மின்னேற்றிப் பயன்படுத்தக்கூடிய கலங்களாகும். இவற்றின் மின்னிரசாயனத் தாக்கங்கள் மீள்வழியாக நடைபெறக் கூடியவை. இவற்றில் மின்னேற்றம் செய்யப்படும் போது அனோட்டு நேர் முடிவிடமாகவும், கதோட்டு மறை முடிவிடமாகவும் தொழிற்படும். ஆனல் மின்னிறக்கம் நடைபெறும் போது முதன்மைக் கலம் போலவே அனோட்டு மறை முடிவிடமாகவும் கதோட்டு நேர் முடிவிடமாகவும் தொழிற்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்முனை&oldid=3117569" இலிருந்து மீள்விக்கப்பட்டது